வெள்ளி, 12 ஜூன், 2009

புலி வருது

வாயிலிலே மணிகட்டி வழக்குரைக்க வந்தவரை
நோயிலே போகுமுன் நேர்த்தியுடன் தீர்ப்புரைத்து


கன்றிழந்த பசுவிற்கும் கண்ணீரைத் துடைத்திடவே
கொன்றொழித்தார் தன்மகனை கோமகனார் மனுநீதி


எங்கொளிந்து போனதைய்யா எங்குலத்துப் பெருமையெல்லாம்
பொங்குதமிழ் மறவனுமே போர்முறையை மீறவில்லை


வெந்தழிந்த மக்களெல்லாம் வேதனையில் காத்திருந்தோம்
பந்தமென தமிழ்நாட்டின் பாசக்கரம் நீளுமென்று


முதல்வரென ஆட்சிசெய்யும் முத்தமிழ் பண்டிதரும்
புதல்வர்களின் நலமன்றி புரிந்ததென்ன சொல்வீரே


கருணாநிதி பெயர்கொண்ட காரணத்தைப் புரிந்துகொண்டோம்
கருணை நீதி எதிர்பார்த்து களப்பலியும் நிறையக்கண்டோம்


நீதிமன்ற வளாகத்தில் சாதிச்சண்டை மூண்டதுபோல்
நாதியற்று வழக்குரைஞர் வன்முறையில் போராட்டம்

காவல்துறை கடுமைகாட்ட கைகலப்பில் முடிந்ததன்றோ
ஏவல் செய்யும் உங்களுக்கே ஏதுமில்லை பாதுகாப்பு


உள்ளிருக்கும் நீதித்தாயும் உண்மையிலே அழுதிருப்பாள்
வெள்ளையுடை நனைந்திடவே வேதனையில் துடித்திருப்பாள்


கறுப்புத்துணி அவிழ்த்தஅவள் கணப்பொழுதில் நினைத்திருப்பாள்
பொருப்பறிந்து தென்இலங்கை பொடிநடையாய் போயிருப்பாள்


கண்டபல காட்சியினால் கதறியவள் அழுதிருப்பாள்
பிண்டமாகச் சிதறியவள் பிறப்பை எண்ணி தொழுதிருப்பாள்


புதுமை பெற்று நீதித்தாயும் புதுஉடையில் வந்திடுவாள்
பதுமையாக நின்றஅவள் பலிவாங்கிச் சென்றிடுவாள்

காத்திருப்போம் காலம்வரும் கரைந்தோடும் கருப்புவெள்ளை
பூத்திருப்போம் புன்னகையுடன் புறப்படுவார் வேலுபிள்ளை ..

அக(தீ)தி

உள்ளத்தில் நெருப்பைச் சுமந்து
இல்லத்து உடமைகளை இழந்து
எல்லைகள் எதுவென்ற ஏக்கத்தில்
தொல்லைகள் தொடர்ந்திடும் இவர்களுக்கு
உலகே நீ வைத்தபெயர் அகதி



யுகங்கள் பலநூறாய் பூமியிலே
சுகங்கள் தடைபட வாழ்ந்திருந்தோம்
முகங்களாய் முத்தமிழ் முடிசூடி
அகங்களில் தீ எரியும் எங்களுக்கு
உலகே நீ வைத்த பெயர் அகதி



பண்பாடு கலாச்சாரம் பறைசாற்றி
எண்போடு நரம்பாய் உரமேற்றி
மண்பெருமை காத்திட்ட மறவர்குலம்
மாண்புகள் அழிந்திட துணைபுரிந்து
உலகே நீ வைத்த பெயர் அகதி



அழித்திட எண்ணியா எங்களுக்கு
ஒலித்திட வைத்தீர் பெயர் மட்டும்
ஒழித்திட ஒன்றாய் இணைந்தாலும்
பலித்திடும் ஓர்நாள் தமிழ் ஈழம்


புறங்களில் தீவைத்தால் அணைந்துவிடும்
அகங்களில் வைத்த தீ கொழுந்துவிடும்
அணையாமல் எரிந்திடும் இந்தத் தீ
அடையும் வரை எரிந்திடும் அக(தீ )தி.

வியாழன், 11 ஜூன், 2009

கற்பு

கற்பு என்பது கால்களுக்கு இடையிலா
கண்ணகி எரித்த கந்தக முலையிலா
கலாச்சாரம் கற்பித்த கண்ணிய நடையிலா
காலச்சாரம் நூற்பித்த புண்ணிய உடையிலா
அனைவருக்கும் அமுதளிக்கும் பண்பாட்டுப் படையலா
ஆன்றோரும் சான்றோரும் அறிந்து சொன்ன வழியிலா
ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிவிகித சமையலா
ஆளுமைக்கு நான்என்ற அகந்தையின் மொழியிலா
அரிதாரம் பூசிவந்த அர்தமற்ற விடியலா
பரிகாரம் செய்து விட்டால் கிடைத்துவிடும் புதையலா
கற்பு என்பது வாழ்வியல் நெறி
காலங்கள் போற்றும் கனல் போன்றவரி
குறி தவறினால் இலக்கு அதுகடந்துவிடும்
நெறி தவறினால் இழுக்கு உன்னை அடைந்துவிடும் .

ஞாயிறு, 7 ஜூன், 2009

தமிழ்வேள் கோ .சாரங்கபாணி

பாடுபட்ட பைந்தமிழர் ஏடுபோற்ற வைத்தவர்
நாடுவிட்டு உழைக்கவந்து நம்தமிழைக் காத்தவர்

சிங்கை எங்கும் தமிழ்முழக்கம் முரசறிவித்தவர்
கங்கை பொங்கும் கணித்தமிழை சிரசில் ஏற்றிவித்தவர்

வீதிஎங்கும் தமிழ் முழக்கம் வேண்டுமென்று சொன்னவர்
சாதிமங்க தமிழ்செழிக்க தன்னைநீராய் விட்டவர்


அடிமையென்று வாழாதிருக்க அரும்பாடுபட்டவர்
குடியுரிமை வாங்கச்சொல்லி குலம்தழைக்க வைத்தவர்


முகில்கருத்த தலைமுடியை பிடரிவரைக் கொண்டவர்
அகில்மணக்கும் அழகுமுகம் சுடரொளியைப் போன்றவர்


தேரோடும் திருவாரூர் திருமகனாய் வளர்ந்தவர்
போராடும் குணத்தாலே தமிழ்தேரை இழுத்தவர்


யாரோடும் பகைமை இல்லை நட்பாகப் பழுத்தவர்
வேரோடும் நான்கினத்தில் உப்பாக நிலைத்தவர்



சிந்தனையால் செழுந்தமிழை வேர்பிடிக்கச் செய்தவர்
கந்தனைப்போல் தமிழ்வேளாய் பேர்கொடுத்துச் சென்றவர்



நான்முகத்தான் நாவினிலே வீற்றிருப்பாள் வாணி
நான்கினத்தின் நடுவினிலே சோதியானார் சாரங்கபாணி .

அழகின் சிரிப்பு

ஆகாயப் பந்தலிலே ஆதவனின் பொன்சிரிப்பு
அழகுநிலா பவனிவர வெள்ளிகளின் மின்மினுப்பு

கார்முகில்கள் தீண்டலினால் மின்னலென கண்திறப்பு
பார்மகளின் மேனியிலே பசுமையான புல்விரிப்பு

மழைத்துளிகள் மண்ணில்வீழ நிலமகளின் சூல்நிரைப்பு
தழைத்திடும் தளிராலே தரணியெங்கும் புதுவனப்பு

புலர்ந்துவரும் காலையிலே புல்நுனியில் பனிச்சிரிப்பு
மலர்ந்துவரும் மலர்களில் வண்டுகளின் தேனெடுப்பு

கழனியிலே குலவையிட்டு நாற்றுநாடும் பயிர்விளைப்பு
உளந்தனிலே உண்மையிலே இதைக்கண்டா நம்சிரிப்பு


நெகிழிகளின் வழிவந்த பூக்கள்இன்று கடைவிரிப்பு
நெகிழ்கிறது நெஞ்சமெல்லாம் இயற்க்கையது திரைமறைப்பு


காவிஉடை கொண்டவருக்கும் காசுஎன்றால் கனிச்சிரிப்பு
ஆவிவிட்டு போனபின்பு அடங்கிவிடும் அதன்சிரிப்பு


காகிதப் பணங்களில் காந்திகொண்ட கவின்சிரிப்பு
காண்கின்ற மனங்களில் சாந்திபூண்ட அழகின்சிரிப்பு .

திங்கள், 1 ஜூன், 2009

நிழல் தேடி


ஆய்வுகள் நடத்திடும் ஆகாயச்சூரியன்
ஓய்வின்றி உழைத்தானாம்


உழைத்துக் களைத்தவன் ஓய்வினைவிரும்பி
திளைக்க வந்தானாம்


கானகம் மலைகள் கார்முகில் கடந்து
கானங்கள் கேட்டானாம்


வாழ்விங்கு சுவையென வாழநினைத்தவன்
வானகம் மறந்தானாம்

வனங்களின் செழிப்பின் வல்லமைகண்டு
மனமது நிறைந்தானாம்


பயணக் களைப்பில் பாதங்கள்நோக
அயர்ந்து போனானாம்


கனமழை பெய்திட கார்முகில் கரைந்திட
கனவொன்று கண்டானாம்


தாகம் எடுத்திட தண்ணீர் குடித்திட
தேகம் நனைத்தானாம்


வீழ்ந்த மழையில் விண்ணவன் நனைய
ஆழ்ந்து போனானாம்


கடமையைச் செய்திடும் கதிரவன் கனவிலும்
மடமையை நினைப்பானா


நிழல் மடித்தேடி நித்திரை நாடி
தழல் ஒளி மறைப்பானா


வெம்மை தாளாமல் வெய்யோன் மறையும்
உண்மையை அறிவானா


கதிரவன் மறையும் கார்யிருல் நிழலை
புதிரவன் அவிழ்ப்பானா.

நிழல் தேடும் சூரியன்

தமிழ்ச் சூரியன் ஒன்று
தடம் மாறிப்போனது
நிழல் தேடிக் கைகளினால்
நிறம்மாறிப் போனது


நம்மொழியை அரியணையில்
செம்மொழியாய் பதித்தது
தமிழ் வானில் தனக்காக
தனி முத்திரை பொதித்தது


தன்கும்பம் தன்பிள்ளை
தமிழன் துயர்மறந்தது
தவிக்கின்ற எம்மினத்தை
தளிரோடு அழித்தது


அரசியல் புனிதத்தை
அழுக்காக்கிப் ப(பு)ழுத்தது
ஆதாயம் பலதேடி
அழகாக நடித்தது



சுற்றிவரும் சூரியனும்
சுயநலத்தைப் பார்த்தது
வெட்கப்பட்டு வேதனையில்
வெந்தணலில் வெந்தது


மறைவதற்கு இடம்தேடி
மண்ணுலகம் வந்தது
நிலமெல்லாம் உன்நிழலாம்
நிர்வாணமாய் அலைந்தது


நிழல் தேடிவந்த சூரியன்
நீலவானம் பார்த்தது
விண்ணுலகச் சூரியனுக்கு
தன்னிலைமை உரைத்தது


மண்ணில் வாழும் சூரியனுக்கு
கை நிழல்தான் கிடைத்தது
நம்பிக்கைச் சூரியனும்
நம்பி(க்)கை பிடித்தது


கை நிழல் சூரியனே
காலம் உன்னைப் பழித்தது
சூரியன்கள் நிழல் தேட
சுயத்தன்மை இழந்தது

ஞாயிறு, 31 மே, 2009

வானம் வசப்படும்

எல்லையில்லா வானத்தில்
எழில்கோளம் நிறைந்திடவே
பிள்ளைநிலா துணைகொண்டு
பூகோளம் சுழன்றிடவே

செம்பரிதி ஒளியாலே
செம்மையான பூவுலகில்
செங்குருதி தான்வழிய
செழித்து வந்த மண்ணுலகில்


மனிதரெல்லாம் தழைத்து வந்தார்
மாண்புறவே நிலைத்து வென்றார்
புனிதரெல்லாம் பூத்துவர
பூவுலகில் புதுமை கண்டார்


கொடுமை கொண்டு
கோலாட்சி செய்துவந்த மன்னவரும்
கடுமைகண்டு கணப்பொழுதில்
மடிந்துவிட்டார் அன்னவரும்


அடிமையென தமிழினத்தின்
அடிவேரை அறுப்பவரும்
ஆரியனின் வழிவந்த
அரக்கன் என்று அறிவானா


கந்தக தனங்களின்
கற்பென்ற வெம்மையினால்
வெந்தன்று தணிந்ததே
மாமதுரை அழிந்ததே


எத்தனை கண்ணகிகளின்
எழில் இன்று வீழ்ந்தது
எரியவில்லை தென்தீவு
நீதி எங்கே ஒளிந்தது


பூமியே உனக்கு
பிளவுஒன்று வாராதா
பூபாலம் கேட்க வேண்டாம்
புதைந்துவிடு வானத்தில்


வனம் கூட வசப்பட
வாய்க்கவில்லை எங்களுக்கு
வானம் வசப்படும்
வார்த்தை மட்டும் இனிக்கிறது.

இமயம் பெரிதோ ?

தன்னம்பிக்கை விதைகளை
தனக்குள்ளே விதைத்தால்
முன்நம்பிக்கைகள் முகிழ்த்துவந்த
முன் கதைகளைப் பின்தள்ளி
விண்ணோக்கி நடைபோடும்
வீரமது விளைந்திட
மண்ணிலே நிலைபெற்ற
இமயம் பெரிதோ


ஊனமதைக் குறையென்று
ஊளையிடும் மாந்தருக்கு
வானம் வசப்படும்
வழிகள் பலஉண்டென்று
ஊமையான இசைக்கலைஞன்
உலகம் வென்ற பீத்தோவன்
உரைத்ததென்ன இமயம் பெரிதோ


உள்ளமதை உருக்குலைக்கும்
ஊனமதை உடுத்திவிட்டால்
உதயமதை என்னவென்று
உணர்வாயா உள்மனமே
வெள்ளமென கரைபுரளும்
உள்மனதை நெறிப்படுத்த
குள்ளமென உருவெடுத்த
இமயம் பெரிதோ

தமிழர் புத்தாண்டு

தமிழருக்குத் திருநாளாம் தரணியிலே ஒருநாளம்
உழவரெல்லாம் உளமார உவகையுற வரும்நாளாம்
உலகுக்கு உணவளித்த உத்தமர்கள் ஒன்றுசேர
பொங்கிவரும் கங்கைபோல் பொன்மனமும் குளிர்ந்துவர
பொங்கலெனும் திருநாளை போற்றிவைத்தார் பூவுலகில்
நிலமகளின் மேனியிலே வியர்வையோடு நீரிட்டு
குலமகளும் குலவைபாட விதைநெல்லைத் தூவிவிட்டு
மனம்மகிழ உழைத்திருப்பார் அறுவடைக்குக் காத்திருப்பார்
அறுவடையில் பூத்தநெல்லை ஆசையுடன் பொங்கவைப்பார்
ஆதவனின் முன்னிலையில் விளைந்ததெல்லாம் படையல்வைப்பார்
ஆநிரையும் வாய்நிறைய அமுதுபொங்கல் விருந்தளிப்பார்
உலகுக்கு உணவளிக்கும் உழவர்கள் மனம்நின்று
உதித்து வந்த தைதானே உழவருக்குப் புத்தாண்டு
உழவருக்குப் பின்னாலே உலகெல்லாம் செல்லுமென்றால்
தமிழருக்குத் தைதானே தரணியிலே புத்தாண்டு
மாதங்கள் பன்னிரெண்டு வகுத்து வைத்தார் முன்னின்று
சோகங்கள் கண்ணிரண்டு கலைந்தோடும் தை அன்று
நிலமகளை வணங்குகின்ற புவிபோற்றும் புத்தாண்டு
உளமாற ஏற்றிடுவோம் உழவர்தம் வழி நின்று

மனமெங்கும் மண்வாசம்

ஆடம்பரம் அலங்காரம் அனுதினமும் உல்லாசம்
மாடங்கள் மணிமகுடம் மண்மீது தினம்வேசம்

வானவரும் வந்தாலும் வதைக்கப்படும் வன்மோசம்
ஆனவரும் போனவரும் அடைவாரோ விண்தேசம்


காலம்வரும் கனிந்துவரும் கலங்கவில்லை கடல்தேசம்
ஞாலம்வரும் வேழம்வரும் கலைந்தோடும் நரிவேசம்


இருப்பதை இயன்றதை ஈந்தாலே புவிபேசும்
மறுப்பதை வெறுக்கின்ற மனதாலே மனநேசம்


மலர்கின்ற மலர்களின் மகரந்தம் மணம்வீசும்
புலர்கின்ற புல்லின்மேல் புன்னகைக்கும் பனிபேசும்


இடிக்கின்ற இருள்மழையும் இறங்கிவந்தால் மண்வாசம்
வெடிக்கின்ற வெண்பரிதி வெண்ணிலவின் ஒளிநீசம்


அசைந்தாடும் அலைகாற்றால் ஆழ்கடலும் அலைபூசும்
இசைந்தாடும் இளமனதில் இயல்பான கலைநேசம்


மங்கையவள் மலர்மொழியால் மயிலிறகாய் மணம்கூசும்
தன்கையவள் தளிர்மேனி தவழ்கையிலே தனிப்பாசம்


பொல்லாத பொய்நெஞ்சால் புவியாவும் குலநாசம்
செல்லாகிச் செரித்தாலும் செழித்துவரும் தமிழ்தேசம்

வெள்ளி, 29 மே, 2009

தழைத்திடும் தமிழினம்!

அன்பைப் போதித்த கைகளிலே
ஆயுதம் கொடுத்த கயவர்களே
எண்பை உருக்கி மண்பதைக் காத்த
எழில்குலம் அழிக்கும் நரகர்களே
முன்பே உதித்த முக்கனித் தமிழர்
முகவரி என்பதை அறிவீரோ
முடைகளின் வழிவந்த மூர்க்கன்
மகிந்தா(ஷா)சுரன் நம்படை
அழிக்க நாள்குறித்தான்
கடைவழி போகும்முன் உன்கணக்கினை
முடிப்பான் களத்தமிழ் மறவன் அறிவாயா
உன்படைகுடி வாழ்ந்திட
எம்மினம் அழிவதா எங்ஙனம் சொல்வாய் அடிமடையா
ஆரியன் வழிவந்து அரக்கனின் குடிசேர்ந்த
நரபலி நடத்தும் கலிநரனே
உன் கதையினை முடிக்க புலிவடிவெடுக்க
பிறந்திட்ட மறவன் தமிழ்ச்சிவனே
வெடிபடை கொண்டு வான்படை
நடத்தி வெந்தணல் அள்ளிவீசுகின்றாய்
பொடிபொடியாய் ஆனாலும் புத்துயிர்பெற்று
எழுந்து நடந்திடும் எம்மினமே
உன் அடிமடி கலங்கிட ஆணவம்அழிந்திட
அரும்பித் தழைத்திடும் என்தமிழினமே.

புதன், 27 மே, 2009

சிறைப்பறவை

உடல் கூட்டில் தங்கிச் செல்லும் உயிர்ப்பறவை
உடல்விட்டு பறக்கையில் நினைக்குமா தன்உறவை
தான்கட்டா கூட்டிலே தவமிருக்கும்
தனக்காக மட்டுமே சிறகுவிரிக்கும்
கூட்டோடு சேர்ந்துமே குணம்வளரும்
கூடுகையில் ஆர்ந்துமே தினம்புலரும்
ஆண்பறவை ஆனாலும் முட்டையிடும்
அடைகாத்து எண்ணங்களை எட்டிவிடும்
தான் இருக்கும் வரையில்தான் கூடுஇருக்கும்
வான் பறக்க நினைக்கையிலே கூடு இறக்கும்
பார்வைக்குத் தெரியாமல் பறந்துதிரியும்
பார்த்தவர் யார் என்றால் எண்ணம்விரியும்
ஆம்பலின் இலைநீர்போல ஒன்றிவாழும்
சாம்பலாகிப் போனாலே அன்றிவீழும்
உடல் கூட்டில் தங்கிச்செல்லும் அறைப்பறவை
உடல் விட்டுநீந்திச் செல்லும் சிறைப்பறவை

மலர்கள் பேசினால்

மலர்கள் இங்கே பேசுகின்றன
மனிதர்களைப் பார்த்து ஏசுகின்றன
காதலியை மயக்க கனகாம்பரம் மல்லி
கடவுளை வணங்க கதம்பம் அல்லி
இறந்தவர்களைப் புதைக்க நாங்கள்
இங்கே இறக்கின்றோம்
சுதந்திரம் என்றுபேசும் சுயநலவாதியே
எங்கள் சுதந்திரம் எங்கே

இளைய பாரதம்.

எங்கு செல்கிறாய் என் இளையபாரதமே
நம் தேசத்தின் புகழ்மறந்தாய் விழிமனமே


அடிமைத் தளையை அறுத்தெடுக்க
ஆயிரம் தலைவர்கள் உயிரீந்தார்
விடுதலை வேள்வியின் விளக்கெரிக்க
வீடு மனையாள் நலம்மறந்தார்


கொடியின் மரபை காப்பதற்கே
கொட்டியக் குருதியில் தினம்நனைந்தார்
உறவுக் கொடியின் வேரறுக்கவா
உன்னைச் சுமந்து பெற்றெடுத்தார்


தேசத்தின் பெருமையை நினைப்பாயா
மோசத்தில் வீழ்ந்து கிடப்பாயா
கல்விச் சாலையிலே கலவரம் புரிந்தாய்
கலங்கி இருப்பாளே கருசுமந்த உன்தாய்


நாளைய பாரதத்தின் முதுகெலும்பே அறிவாயா
நாமிருக்கும் இடமெல்லாம் நற்பெயரை பெறுவாயா
விண்ணிலும் நம்கொடி பட்டொளி வீசுதே
மண்ணிலே அடிதடி விட்டொழி நல்லது


காந்தியப் பாதையின் சாந்தியத்தை அறிந்திடு
ஏந்திய ஆயுதத்தை அடுப்பெரிக்க தந்துவிடு
சுயநலத் தேரின் வடம்பிடிக்க மறுத்துவிடு
சுட்டெரிக்கும் சூரியனாய் தேசஇருள் நீக்கிவிடு


கல்லூரிச் சாலையா கலவர பூமியா
காரணம் யார்சொல் சாதியா மதமா
சட்டங்கள் வகுத்தாரே சமூகத்தின் நீதியாய்
சண்டையிட்டு மடியாதீர் நீதியறியா பேதையாய்


மானிடம் என்பது மகத்தான பிறப்பு
மாணவன் என்பவன் தேசத்தின் உயிர்ப்பு
பாரத தேசத்தின் பண்பட்ட சிறப்பு
பார்போற்ற வேண்டுமே அதுதானே பொறுப்பு



கொற்றவன் குடை இங்கு தாழ்ந்தது
குலமக்கள் நலன்களும் அழிந்தது
சீழ்பிடித்த மனங்களினால் விளைந்தது
கோல் பிடிக்க வேண்டிய குணமது


எழுதுகோல் பிடிக்க வேண்டிய இனமுனது
விழுதுபோல் நிலைக்க வேண்டிய மனமது
யார் மீது கோபமடா சொல்வாயா
பார்மீது எம்மினமே வெல்வாயா


உரிமைக்காக உண்மையில் நீபோராடு
உன் உணர்வுகளை உண்மையின் உறையிலிடு
சகோதரப் பண்பை உன்மனதிலிடு
சண்டாள குணத்தை நீவென்றுவிடு


எங்கு செல்கிறாய் என் இளையபாரதமே
நம் தேசத்தின் புகழ் மறந்தாய் விழி மனமே


சட்டங்கள் படித்திடச் சென்ற நீ
மரச்சட்டங்களை அல்லவா ஏந்துகிறாய்
சாதியின் பெயரால் மோதுகின்றாய்
சகோதரனைக் கொல்லவா வாழ்கின்றாய்


இயற்கை கூடஇயங்கிடச் சட்டமுண்டு
இளமனமே அறிவாயா அதைக்கண்டு
வளமான வாழ்வுக்கு வகுக்கப்பட்டது சட்டம்
வழிதவறிப் போகிறாயே இதுவா உன்திட்டம்


நாளைய பாரதத்தின் நம்பிக்கை நீயே
நடமாடும் மாணவப் பருவத்தின் தீயே
நல்வழிப் பாதையிலே இன்றுமுதல் நடைபோடு
நாளைய வரலாறு நமதென்று புகழ்பாடு

புன்னகை


இதழ் தோகை விரிகையில்
இதய மயில் ஆடுகிறது
இளமையும் கூடுகிறது


செய்கூலி இல்லை
சேதாரம் உண்டு
யாவரும் அணியலாம்


இந்த முகவரிக்கு
அனைத்துத் தபால்களும்
தாமதமின்றி பட்டுவாடா


வசீகரிக்க வாய்க்கப்பெற்ற
அர்த்தங்கள் ஆயிரமுள்ள
அழகியல் மொழி


உறவுப் பாலத்திற்கு
ஒப்பந்தமிலாமல் போடப்படும்
உடனடிப் பத்திரம்


வேதனைக் குளத்தில்
வீசிய வலையிலும்
வந்துவிழும் விசித்திரமீன்



தேசங்களின் கதவுகளையும்
நேசங்களின் கதவுகளையும்
வரையறையின்றி திறக்கும் சட்டம்


மன நோய்களை
பணம் ஏதுமின்றி
குணமாக்கிடும் மருந்து


மனச் சேர்க்கையினால்
வாய்ப்புகள் கிடைக்கும்போது
மலரும் வாய்ப் பூ



அணிந்தவருக்குக் கேடயம்
பிரிந்தவருக்கு விரயம்
நொடிப் பொழுதில் உதயம்


அவசரத்திற்கு அடகு வைக்கலாம்
அசலோடு திரும்பக் கிடைக்கும்
அதிசயக் கடன்


மழலை என்றால் விடை
மங்கை என்றால் வினா
மனிதம் என்றால் அன் பூ பு


திறந்துக் கொள்ளை அடித்தாலும்
காவல்துறை கைதுசெய்யாத
கண்ணியமான திருடன்


இதழ் கடிதம் பிரிகையில்
அன்புள்ள என்று சொல்லும்
முதல் செய்தி


மனக் காயங்களுக்கு
மருந்திடும் மென்மையான
மயிலின் இறகு


உள்ளக் களிக்கையை உடனுக்குடன்
அரங்கேற்றம் செய்யும்
நாட்டியக்காரி


மானாவாரியாக மலர்ந்தாலும்
மனதிற்கு மட்டுமே தெரிந்த
மர்மதேசத்து மகாராணி

பதங்கமாதல்

காதலில் மட்டுமே
சாத்தியம் இதயம்
பதங்கமாதல்

முத்தம்

இதழ்களின் மோதலால்
இனிமையான கச்சேரி
முத்தம்

புதிதாய் பிறப்போம்


புன்னகையை இதழ்களில் பூத்திருப்போம்
மண்பகையை மனங்களில் துடைத்தொழிப்போம்


பூக்களில் வண்டாகித் தேனேடுப்போம்
பாக்களால் விண்டேகி வான்துடைப்போம்


காற்றிடம் காதலின் நயம் படிப்போம்
ஆற்றிடம் நாணலின் மடிகிடப்போம்


பறவையின் சிறகாகி படபடப்போம்
புரவியின் உறவாகி புவிகடப்போம்


மழலையின் வடிவாக மனம் அமைப்போம்
குழலையும் யாழையும் குணம் அமைப்போம்


சிந்தனை உளிகளால் சிலைவடிப்போம்
நிந்தனை செய்தாலும் கலைபடைப்போம்



கவலை விறகுகளை அடுப்பெரிப்போம்
திவலைச் சூரியனாய் சுட்டெரிப்போம்



இதயக் கதவுகளைத் திறந்துவைப்போம்
உதய நினைவுகளை விருந்து வைப்போம்


எப்போது சுயநலத்தை நாம் மறப்போம்
அப்போது புதிதாய் நாம்பிறப்போம்

பறந்து விருந்து

பூட்டிவைத்த என்வீட்டில்
புகுந்துவிட்டான் ஒருதிருடன்
பூட்டை அவன் உடைக்கவில்லை
பொன்பொருளைத் திருடவில்லை


ஆடைமேலே ஆசைகொண்ட
அர்ப்பமான திருடன்போலும்
என்ஆடை அணிந்துவிட்டு
கலைந்து போட்டான் சேரவில்லை


அடுக்களையில் சிறுதடயம்
பாவம் அவனுக்கு பசிபோல
பாத்திரத்தை உருட்டிவிட்டு
புசிக்கவில்லை நல்லவேளை


வாசம் மட்டும் போதுமென்று
பாசத்தோடு விட்டுச் சென்றான்
நேசமுள்ள திருடன்போல
நெஞ்சத்தைத் தொட்டுவிட்டான்


நூல்படிக்கும் ஆர்வமுள்ள
நூதனமான திருடன்போல
நான்படித்த புத்தகத்தை
நான்குபக்கம் படித்திருப்பான்


தான் பிடித்த வாசம்தனின்
தன்மைதனை உணர்ந்திருப்பான்
நூல்படித்துச் சென்ற அவன்
அடுத்த வீட்டில் சமைத்திருப்பான்


போகட்டும் விட்டுவிட்டேன்
வேலையில்லா வெட்டிப்பயல்
ஆகட்டும் பார்க்கலாம்
அடுத்து வந்தால் கேட்டிடலாம்

எப்படி என்சமையல்