செவ்வாய், 1 டிசம்பர், 2009

தியாகம் .

தன்வாழ்வை இரையாக்கி
நடக்கின்ற யாகம்
தளராமல் குறைபோக்கி
சுரக்கின்ற வேகம்


கண்ணீரைத் தனதாக்கி
கடக்கின்ற மேகம்
செந்நீரைப் புனிதாக்கி
சிறக்கின்ற தேகம்


தமக்கெனவே உரித்தாக்கி
பிறக்கின்ற சோகம்
பிறர்கெனவே துயர்போக்கி
கிடைக்கின்ற யோகம்


எந்நாளும் நினைவாக்கி
வளர்கின்ற மோகம்
சொன்னாலும் மனம்தாக்கி
கிளர்கின்ற ராகம்


நல்வாழ்வை உரமாக்கி
செழிக்கின்ற போகம்
இல்வாழ்வை மரமாக்கி
இனிக்கின்ற பாகம்


யாவரையும் உறவாக்கி
கரைகின்ற காகம்
ஊணுயிரை நீராக்கி
நிறைகின்ற தாகம்

செய்தவருக்கு உயிராகி
நிலவுகின்ற அகம்
உய்தவருக்கு பெயராகி
உலவுகின்ற சுகம்


மனிதருக்கு மருந்தாகி
மகிழ்கின்ற தவம்
மாண்புகளில் சிறந்ததாகி
மலர்கின்ற தியாகம் .

உலகியல் வெப்பம் .


உலகியல் வெப்பத்தை
உலகமெல்லாம் உரைத்திடவே
அழகியல் மாற்றத்தால்
அழிந்துவரும் பூமியில்


நிலவியல் தேற்றத்தில்
நிபுணத்துவம் பெற்றவரும்
உளவியல் மாற்றத்தால்
உணர்ந்துவிட்டார் இப்பொழுது


அலைகடலின் நீருயர
அழிவைநோக்கி மாலத்தீவு
விலைபலவும் கொடுத்தோமே
வேதனைக்கு ஏதுதீர்வு


கலைபலவும் தான்வளர
மலைபலவும் மண்உடைத்தோம்
சிலைபலவும் செய்துவித்தோம்
சிந்தைகளால் மலைகொய்தோம்


உலைபலவும் அமைத்துவைத்து
உயிருக்குலை தினம்வைத்து
கொலைபலவும் புரிகின்றோம்
கொதிக்காதா இந்தபூமி



முல்லைக்குத் தேர்ஈந்த
முன்னோனும் இன்றிருந்தால்
முழம்முல்லை மூன்றெண்டா
விலைபேசி விற்றிருப்பான்


இயற்கையின் கொடியிலே
இதயத்தைக் காயவைத்தால்
செயற்கையெல்லாம் ஓடிவிடும்
செழும்பசுமை வேர்தழைக்கும்


வளமைமிகு வாழ்வென்றால்
வசந்தங்கள் வந்துசேரும்
வாழ்வுமட்டும் போதுமென்றால்
வளம்அழிந்து பார்மாளும்


சூடாகித் தெரித்தானே
சூரியனும் சிதறுண்டு
சுற்றிவரும் பூமியும்
சூடானால் பிளவுண்டு


காடாகிப் போனமண்ணில்
காணவில்லை பசுமையின்று
மேடாகிப் போகிறது
மேகம்கூட நீர்வறண்டு


காத்திடுவோம் தலைமுறைகள்
காலமெல்லாம் பசுமைகாண
பூத்திடுவோம் பசுமையாக
பூவுலகம் புதுமைகாண .

திங்கள், 30 நவம்பர், 2009

உயிர்வலி.


அன்னை பெற்றெடுத்த அன்பின்வலி
ஆண்மையை வென்ற பெண்மையின்வலி
இன்பத்தில் நின்ற உண்மையின்வலி
ஈன்ற பொழுதில் உவகையின்வலி
உயிர்பெற்று வந்த ஊணுடலின்வலி
ஊர்போற்ற வேண்டிய மானுடலின்வலி
எவ்வலியும் அறியாத பூ மடலின்வலி
ஏந்திழையால் நீர்சொரிய உயிர்தலின்வலி
ஐம்பெரும் பூதங்களை அறிதலின்வலி
ஒப்பனைகள் இல்லாத முகிழ்தலின்
ஓர்நாளும் சொல்லாத பகிர்தலின்வலி
ஔவியம் பேசாத நெகிழ்தலின் வலி .

ஞாயிறு, 29 நவம்பர், 2009

பரிமாற்றம்.

வள்ளுவன் சொல்லாத
வாழ்வியல் நெறியா
ஔவை சொல்லாத
அமுதமான மொழியா

கம்பன் இயற்றாத
காவிய ரசமா
பாரதி பாடாத
பார்யுகப் புரட்சியா

படைத்தவைகள் இங்கே
பரிமற்றம் பாத்திரத்திற்கு
ஏற்ற உருமாற்றம்

நடையை மாற்று
என்றொரு நண்பர்
அடியை மாற்று
என்றொரு அன்பர்

பரிமாற வந்த
பதார்த்தங்களே
படைத்தவைகள் எல்லாம்
எதார்த்தங்களே

அன்னப் பறவையின்
நடையொரு அழகு
சின்னப் பறவையின்
சிறுநடை அழகு


வண்ணக் கிளியின்
வாய்மொழி அழகு
சின்னக் குழந்தையின்
தேன்மொழி அழகு

எண்ணக் குவியலின்
எல்லாமே அழகு
முதலில் நீ பரிமாறப் பழகு.

தாய் முகம் .

கற்றைக்குழல் முடித்துக்
காலையிலே விழித்திடுவாள்
சற்றேனும் ஓய்வின்றி
சலசலத்து உழைத்திடுவாள்


பற்றவைத்த அடுப்பினிலே
பலகாரம் செய்திடுவாள்
விற்றஒற்றைப் பணத்திலே
விறகுகளை வாங்கிடுவாள்


கற்றவித்தை எதுவென்றால்
கண்ணீரைச் சொரிந்திடுவாள்
குற்றமற்றத் தாயுள்ளம்
குறையேதும் கண்டதில்லை


அற்றைத்திங்கள் வெண்ணிலவும்
ஆழகில்லை அந்நாளில்
ஒற்றை நிலவாகி
ஒளிவீசிச் சென்றாயே


நெற்றியில் நீர்வடிய
நெருப்பூட்டிச் சமைத்தாயே
வெற்றியைக் காணுமுன்னே
வெந்தணலில் வெந்தாயே


பட்டதுயர் கொஞ்சமல்ல
பட்டபாடு என்னசொல்ல
சுட்டெரிக்கும் அகல்விளக்கில்
சூடுபட்டு நின்றபோது


பட்டறிவு வேண்டுமென்று
பாடம்சொல்லிச் சென்றாயே
சட்டமிட்டு உன்வடிவை
சாமியென வணங்கும்போது



எரிகின்ற எள்விளக்கில்
என்தாயின் ஆழகுமுகம்
தெரிகின்ற தேவதையின்
தேன்சிந்தும் நிலவுமுகம்.

வெள்ளி, 27 நவம்பர், 2009

தொலைந்த நாட்கள் .


நிலவொளியின் முற்றத்தில்
நீலவானம் பார்த்திடவே
பலகதைகள் பேசிவந்த
பசுமையான காலமது


இருள்வந்து மூடிவிடும்
இனிமையான பொழுதினிலே
அருள்பொங்க அந்தரத்தில்
அழகுநிலா பவனிவரும்


ஒளிவீசும் அம்புலியை
ஒப்பனைகள் செய்திடவே
வெளியெங்கும் வீதியிலே
வெள்ளிகளும் ஊர்வலமாய்


கருமைபூண்ட இரவதுவும்
காண்பதற்கே ஆவல்தூண்டும்
வருமைகொண்ட மண்வீட்டில்
வாய்க்கவில்லை மின்சாரம்

மண்ணெண்ணை விளக்கொளியில்
மகிழ்வோடு கதைபடிப்போம்
தன்னொளியைக் குறைக்குமட்டும்
தளராமல் விழித்திருப்போம்


துன்பமில்லை அந்நாளில்
தொலைதிருந்தோம் கவலையெல்லாம்
இன்பமான அனுபவத்தை
இதயத்தில் சுமந்திடவே


பொருள்தேடி புறப்பட்ட
புதுயுக வாழ்வினிலே
இருள்தந்த அவ்வெளிச்சம்
இன்னாளில் கிடைத்திடுமா .

வியாழன், 26 நவம்பர், 2009

மாவீரர் நாள் .




அகிம்சை வழிகண்ட
அண்ணலின் வழிநின்று
உண்ணாமல் விரதமிருந்து
உயிர்நீத்த உத்தமனாம்


திலீபனின் நினைவாக
ஏற்றிவைத்த தீபமிது
கொழுந்துவிட்ட சுடரதுவும்
குளிரவில்லை இன்றுவரை


உரிமையென்ற உணர்விற்காக
தியாகமாகத் தன்னுயிரை
தாரைவார்த்த வேங்கைகளின்
நினைவுபோற்றும் நாளிதுவே



அண்ணனவர் உரையாற்ற
ஆண்டாண்டு எழுச்சியுற்று
மாண்டவர்கள் புகழ்பாடும்
மாண்புமிகு பெருநாளாம்


புதைக்கப்பட்ட மனிதரெல்லாம்
புகழோடு மறைவதில்லை
விதைக்கப்பட்ட இவர்தியாகம்
வீணாகப் போவதில்லை


வரலாற்றுப் பக்கங்களும்
வன்னிநிலப் புகழ்பாடும்
வணங்கிடுவோம் இன்னாளில்
எழுந்துவரும் எம்மினமே

துடைத்தொழிக்கத் துணிந்துவிட்ட
துன்மார்க்கக் குணம்படைத்த
தருக்கர்களின் தலைநெரித்துத்
தளைத்திடுவோம் ஓர்நாளில்

பொறுத்திருப்போம் புலிசீரும்
பொய்யாகப் போவதில்லை
போற்றிடுவோம் வீரர்களை
மாவீரர் திருநாளில்.

வெள்ளி, 20 நவம்பர், 2009

மொழியும் விழியும் .


கண்ணிருந்தும் குருடரென கல்லாதார் நிலைபோக்க
எண்ணிரெண்டு வயதினிலே ஏற்காத இளங்கல்வி
தமிழ்வழியே நாம்கற்றால் தன்மானம் வளருமென்று
தமிழவேந்தர் புரட்சிக்கவி தரணிக்கே முழங்கிட்டார்

விழிபோல எண்ணிடவே விழிப்புடன் மொழிகாத்தால்
பழிபோகும் நடைபோட பாதையிலே பூமலரும்
யாமறிந்த மொழிகளிலே யாரறிந்தார் இதுபோன்று
பாமரனும் அறிந்திடவே பாரதியும் இனிதென்றார்


முருகென்றால் அழகென்று முருகவேல் முன்னிறுத்தி
அருகிடவே அந்நாளில் அழகுதமிழ் செய்வித்தார்
கடைவிரித்து காசுஎண்ணும் கலிகால உலகத்தில்
குடைவிரித்து மறைத்தாலும் குலம்காத்துத் தமிழ்வளரும்


பொய்யாமல் போற்றுவித்த பொதுமறையாம் வள்ளுவத்தை
கொய்யாத மனங்களில் கொழுந்தாக துளிர்வித்தால்
மொழிவளரும் விழிபுலரும் மேன்மையுறும் தமிழினமே
மொழிதானே முகவரிகள் விழித்துக்கொள் தமிமனமே .

புதன், 18 நவம்பர், 2009

நீர்க் கூத்து.





பொன்னியவள் நடைபயின்று
பூமியெல்லாம் வளம்கொழிக்க
கன்னியவள் வலம்வந்தால்
கருணையுடன் நிலம்செழிக்க

பஞ்சமில்லை தமிழகத்தில்
பாவையவள் பாயும்வரை
கொஞ்சுமலை குடகதனின்
கொடுமுடியில் பிறந்தவளை

சினங்கொண்டு குறுமுனியும்
சிறைபடுத்திச் சென்றதாலே
மனமொடிந்து போனவளை
மாமருகன் அண்ணனவன்


தடம்மாறித் தவழவிட்டான்
தரணியிலே நீர்விரிய
குடமுனியின் கோபத்தாலா
கோட்டைவிட்டோம் காவிரியை


முன்னையொரு காலத்தில்
முகிழ்த்துவிட்ட தவறினாலா
பென்னிகுக் பிறப்பெடுத்து
பேறுபெற்றான் பூமியிலே


கொண்டபல செல்வமெலாம்
கொடுத்தானே அணைஎடுக்க
கண்டுமிவர் திருந்தவில்லை
காரணத்தை அறியவில்லை

இரக்கமில்லா இழிமனத்தார்
இயலாது என்றுரைக்க
மறத்தமிழன் என்றுசொல்லி
மாமாங்கம் இவர்நடிக்க


அடுக்கடுக்காய் ஆண்டுதோறும்
அரங்கேறும் நீர்க்கூத்து
தடுக்காமல் வந்திடுமா
தாகம்தீர்த்துச் சென்றிடுமா .

புயலான பூ.


கொடிகளில் பூத்து
கொய்து தொடுத்த
கொற்கை மலரல்ல


கொடியிடைக் கண்ணகி
கொற்றவை சூடிட
கோபமும் இதற்கில்லை


பணிந்த கால்களில்
அணிந்த போதும்
துணிந்திட மனமில்லை


நிலைகெட்ட போதிலும்
விலையிட்ட நிலையிலும்
வேதனை கொண்டதில்லை


உயிர்கொண்டு போனதால்
மயிர்கலைந்த மையினால்
ஏந்திய வேளையிலே


மகரந்தப் பரல்களாய்
மாணிக்கம் சிதறையில்
புயலான புரட்சிப் பூ

காப்பிய வடிவினில்
காலங்கள் போற்றிடும்
கண்ணகி காற்சிலம்பு .

மகாகவி பாரதியார் .




மகாகவி
பாரதியார்
பாரதி யார்?

பாலக வயதில் கலைமகள் பட்டம் பெற்றவர்
பார்ப்பன வீதியில் பகலவனாகிச் சுட்டவர்

எட்டைய புரத்திலே மொட்டாக மலர்ந்தவர்
எட்டாத உயரங்களை எட்டிவிட்டு உயர்ந்தவர்

பாக்களால் தேரோட்டிச் சாரதியானவர்
மாக்களாய் வாழ்ந்தவர்களுக்கு மனக்கிளர்ச்சி தந்தவர்

புலயனுக்கும் பூநூலை சூடிநின்ற தகையவர்
புரையோடியச் சாத்திரங்களை புனிதனாகிச் சாடியவர்

மண்ணடிமை பாரதத்தை மனம்காணா தகித்தவர்
பெண்ணடிமைச் சாக்காட்டைப் பெரிதாக வெறுத்தவர்

புதுமைப் பெண்களுக்கும் புதுவழியை வகுத்தவர்
புகழ்மாலைப் பூச்சூடி கவிமாலை தொகுத்தவர்

சுதந்திர வேள்விக்குச் சுடுகவிகள் புனைந்தவர்
சுயநலம் அல்லாது சூரியனில் நனைந்தவர்

சீட்டுக் கவிபாடி ஏட்டுக்கவி பாடியவர்
சிட்டுக் குருவிக்கும் வீறுநடை காட்டியவர்

காலனைப் சிறுபுல்லென நினைத்துத் துதித்தவர்
காலருகே வரச்சொல்லி அனைத்து மிதித்தவர்

நெருப்புக் கோலங்களை கண்களாகக் கொண்டவர்
மருப்பு வேழத்தையும் பண்களால் வென்றவர்

முறுக்கிய மீசையில் முகில்கருமை உண்டவர்
குறுக்கிய தேகத்திலும் சந்திரனாகி நின்றவர்

சண்டைக்காக கட்டாத முண்டாசு பிரியர்
சாதிகள் இரண்டென்ற சமத்துவ நெறியர்

சுட்டெரிக்கும் சூரியனையேத் திலகமாக இட்டவர்
சுதேச மித்திரனின் ஆசிரியப் பொறுப்பேற்றவர்

காதல் கவிதைகளும் கற்பனைகளும் பாடியவர்
கருப்பு அங்கியால் தேகத்தை மூடியவர்

காக்கைக் குருவிகள் எங்கள் சாதிஎன்றவர்
கண்ணனிடம் காதலாகிக் கசிந்துருகி நின்றவர்

நல்லதோர் வீணையாகிப் புழுதியில் கிடந்தவர்
நலிந்துவிட்ட சமுதாயத்தை புடம்போட வந்தவர்

சுதந்திரம் பெற்று விட்டோமென்று ஆனந்தக் கூத்தாடியவர்
நிரந்தரம் வெல்வது உறுதியென்று ஆணையிட்டுச் சொன்னவர்

வறுமையிலும் பெருமைகளைத் தொலைக்காதவர்
அருமைகளைச் சொல்லி யாசகம் கேட்டுப் பிழைக்காதவர்

புதுக்கவிதை பாதைகளுக்கு புதுவிதைகள் இட்டவர்
எமக்குத் தொழில் கவிதை என்று கவிநாற்று நட்டவர்

தலைவணங்கும் பழக்கமில்லை தன்மானம் மிக்கவரவர்
தமிழ் மொழிபோல் கண்டதில்லையென்ற சொக்கரவர்

பழமொழிகள் கற்றுணர்ந்த விர்ப்பணரவர்
பாடங்கள் பலசொன்ன சுப்பனரவர்

தூரத்து தேசங்களுக்கும் கவிமடல்கள் வரைந்தவர்
பாரதத்துத் தோசம்நீங்கப் படைத்தவனிடம் இறைஞ்சியவர்

தன்மனைவி தன்குழந்தை நலன்களை மறந்தவர்
தமிழனாகப் பிறந்தவர்களில் தலையாயச் சிறந்தவர்


காணிநிலமும் கேணியும் கேட்ட ஞானியவர்
காலங்களைக் கடந்து நிற்கும் தோணியவர்

வெள்ளைக் கூட்டத்தை விரட்டவந்த வேங்கையவர்
சொல்லை வில்லாக்கிச் சொற்ப்போர் புரிந்தவர்


தாயின்மணிக் கொடியை பாரீர்ரென்று புகழ்ந்துரைத்தவர்
தரணியிலே பிறப்பாரா அவர்போல இனியொருவர்


காலச் சோலையிலே கூவுகின்ற குயில்அவர்
ஞாலக் கவியாலே நடைபயின்ற மயில்அவர்

தொலைநோக்குப் பார்வையிலே தொல்நோக்கியவர்
கலைநோக்கு சாத்திரங்களில் கல்நீக்கியவர்

தனிமனிதப் பசிக்காக உலகழிப்போம் என்றவர்
தன்பசியைத் தான்போக்கத் தன்உடலைத் தின்றவர்


பாப்பாவி்ற்கும் சொன்ன பிள்ளை மொழிக்காரரவர்
பாதகம் செய்பவரை முகத்தில் உமிழ்ந்துவிடச் சொன்னவரவர்


சக்திபுகழ் பாடிநின்ற பித்தரவர்
முக்திபெற்று முழுநிலவான சித்தரவர்


சொன்னபடி வாழ்ந்து நிறைந்த நெறியரவர்
சொன்னபடி வாழ்கின்ற கவிஞர் இன்றுஎவர்



குறைந்த வயதில் காலமான நிறைகுடம் அவர்
நிறைந்த கவிகளிலே மணிமகுடமாகத் திகழ்பவர்

இறக்கின்ற போதிலும் இல்லாத வறியரவர்
சுடுகாடு சென்றவர்கள் இருபதிலும் குறைவர்


தாசனுக்கு ஆசானான நேசனவர்
நீக்கமற நிறைந்திருப்பதில் ஈசனவர்

மான்கவிகள் வான்கவிகள் பிறப்பார் இறப்பார்
மகாகவி என்று சொன்னால் பாரதி மட்டுமே நிலைப்பார் .

கோழிக் குஞ்சு



தாய்க்கோழி இறகுகளின் தகதகக்கும் வெப்பத்தில்
போய்ஒளிந்து மூடிகொண்டு போர்வையென அணிந்தாயே

உடற்சூட்டை உள்ளிறக்கி உனக்காக தனைஉருக்கி
இடர்பட்டக் கதையெல்லாம் இதுவென்று அறிவாயா

இருபத்தி யொருநாளும் இளைத்தகதை உணர்வாயா
இனவிருத்தி இதுவென்று இடர்பாட்டை மறவாயா


பருந்தோடு சண்டையிட்டு புண்பட்ட உன்தாயும்
பிரிந்தோடு என்றுசொல்லி பிரிக்கும்கதை தெரிவாயா

விரைந்தோடும் இவ்வுலகில் வேதனைக்குப் பஞ்சமில்லை
மறைந்தோடும் மண்ணுலகின் மகத்துவம் இதுவென்று

மனதார ஏற்றுநீயும் மகிழ்வுடன் வளர்வாயா
மனம்தளரா இளநெஞ்சே மரணத்திற்கும் இனியஞ்சேல்

கொத்திவிரட்டும் தாய்க்கோழி கோபமல்ல சிறுகுஞ்சே
புத்திபுகட்டும் உனக்காக புத்தனைப்போல் தாய்நெஞ்சு .

சனி, 31 அக்டோபர், 2009

கடற்கரை





கடல்
காதலிக்காக
மடல் எழுதிக் காத்திருக்கும்
மணல் காதலன் .

பாதச் சுவடுகள் பலபதிந்தும்
காலச் சுவடாய் இவனுள்
கரிக்கும் நீர்மங்கை .


ஊடல் கொள்ள நினைத்தவனுக்கு
சிலநேரம் உதடுமட்டும்
நனைவதுண்டு .


அலைப் புன்னகையை
வலைவீசிப் பிடிக்கக் காத்திருக்கும்
வசீகர (மீ)மானவன்.



தென்றல் தாவணி
தழுவும்போது மட்டும்
தேகம் சிலிர்க்கும் இவனுக்கு .



காதலித்தவள் கட்டி அணைத்தால்
காலமாகிப் போவார்களென்று
கண்கொண்டுக் காத்திருக்கும்
காதல் தியாகி .


மானுடக் காதலையும்
வான்கூடும் காதலையும்
தேன்கூடாய் சேகரிக்கும்
தேமதுரக் கவிஞன்.

புதன், 16 செப்டம்பர், 2009

அது மட்டும் வேண்டாம் .

ஏர்பின் நின்றது உலகமென்று
பார்புகழும் வள்ளுவத்தை
படித்ததோடு சரி .

போர் ஒன்றே போதுமென
வேர் அறுக்கும் உலகில்
வேதனைக்குப் பஞ்சமில்லை

உயிர் காத்த உழவரெல்லாம்
பயிர் செய்ய வழியின்றி
பத்தினியை விற்கும் அவலம்

தொடர்ந்திடும் துயரத்திற்கு உலகே
இடம் தருவாய் என்றால்
அது மட்டும் வேண்டாம் .

வியாழன், 10 செப்டம்பர், 2009

கனிவான கவனத்திற்கு .

கதிரவக் கண்ணாடியில் பூமிமுகம் பார்க்கும்
காலைப் பொழுது விரைவுச் சாலையிலே
வாகனங்கள் அணிவகுத்து வருது
பணிக்காக நானும் அந்தப் பாதையிலே பயணம்
பாதையிலே இருபுறமும் பார்வை என்கவனம்
மலர் தூவீ வரவேற்ற மரங்களின் அணிவகுப்பு
மடிந்த இலைசருகாகி மண்நோக்கி மறுபிறப்பு
எல்லைக்குள் அடைக்கப்பட்ட
செடிகள் எல்லாம் எத்தணித்தன
எங்களோடு கைகுலுக்க
எல்லைதாண்டி ஆர்ப்பரித்தன
அலுவலின் பலுவல் நிமித்தமாக
விரைகிறோம் நண்பர்களே
அலுவலகம் விடுப்பென்றால்
அளவளாவோம் அன்பர்களே .

நீர் நீரே .

ஆழியிலே முகந்து ஆகாயம் சுமந்து
அலைகாற்றில் நகர்ந்து அழகாகச் சேர்ந்து

மழையெனவேப் பொழிந்து மண்மீது விழுந்து
மரம்கொடிகள் நனைந்து மனிதருக்கும் உகந்து

மலைமீதும் தவழ்ந்து மடுநோக்கிச் சரிந்து
நதியெனவே நடந்து நளினமாக வளைந்து

நாடுநகரம் கடந்து நாகரீகம் நிறைந்து
தனித்தன்மை இழந்து தன்முகத்தை மறந்து

தப்பியது உலர்ந்து தாய்மடியை அடைந்து
தன்கவலைகள் மறந்து தரணியிலே சிறந்து

உலகு துய்க்க வந்த நீரே
உயிர்கள் இருப்பதின் காரணம் நீரே .

என் உயிர் காதலி .


என் உயிர்க்காதலி
ஈடுஇணையற்ற
இயற்கை எழிலி
இவள் பூப்பெய்து
பூமிசூடிய
பூங்குழலி

சங்க இலக்கியங்களும்
இவளது அங்க
இலக்கியங்களைப் பாடும்
ஐம்பெருங் காப்பியங்களும்
ஆபரணம் சூடும்


அழகி உன்னைப்பாட
அடங்கவில்லை ஏடும்
கிழவியாகிப் போனவளுக்கும்
உன்மேல்மோகம் கூடும்


உன்பெயரை உரைக்கையிலே
என் நாவெல்லாம் துள்ளும்
நீ காலப் பேழை சுமந்துவந்த
கட்டழகு வெள்ளம்


கல்தோன்றாக் காலங்களும்
உன் கவின் அழகைச்
சொல்லும் .புல்தோன்றா
நிலங்கள் கூட
புளங்காகிதம் கொள்ளும்

நாளெல்லாம் உன் நினைவால்
என் ஆயுள் ஓடும்
நாளமில்லாச் சுரப்பிகளும்
நாட்டியம் தான் ஆடும்



நாலந்தாக் கழகம் கூட
உன் நளினம் காணக் கூடும்
நலம்தானா என்று சொல்லி
நாணிவிட்டுப் பாடும்


எத்தனையோ பேரழகிகள்
மண்ணுலகில் உள்ளாரடி
முத்தழகி முத்தமிழே
உனைப்போல முத்துமொழி
சொல்லாரடி .

பூக்காத மரங்கள்.

பூக்காத மரங்கள்
பூமியில் அன்புபூக்காத மனங்கள்
மரம் என்றால் பூக்க வேண்டும்
மனம் என்றால் அன்பு பூக்கவேண்டும்
அண்ணல் என்ற அகிம்சைப்பூ
அறவழி கண்ட அதிசயப்பூ
பாரதி என்ற புரட்சிப்பூ
பார்நிகரட்ற புதுமைப்பூ
தொண்டுகள் செய்து பூத்த பூ
வெண்தாடி பூத்த வெண்கலப்பூ
சேவைகளில் பூத்த தேவதைப் பூ
தெரசா என்ற சேவைப் பூ
மரங்களில் பூத்த பூ உதிர்ந்துவிடும்
மனங்களில் பூத்த பூ உயர்ந்துவிடும்
பூக்காத மரங்கள் என்று கோடியுண்டு
பூக்காத மனங்களில்
அன்பு பூத்தால் நன்று
பூக்காத மரங்கள்
பூமியில் அன்பு பூக்காத மனங்கள்.

புதன், 9 செப்டம்பர், 2009

யாதுமாகி நின்றாய் .


நீக்கமற எங்கெங்கும் வேதமாகி
நோக்குகின்ற திசையெல்லாம் கீதமாகி
காக்கின்ற தெய்வமென யாதுமாகி
பார்க்கின்றேன் பாரதியே பாரெங்கும் உன்வடிவை


கவியரங்கத் தலைமை யேற்றக் கறுப்புச் சூரியரவர்
கவிவரியில் மரபில் திளைத்து ஊறியரவர்
உணர்ச்சிக் கவிபடித்தால் ஒழுகுமையா கண்ணீரு
தளர்ச்சி வயதிலும் தமிழ் படைக்கும் எங்கள் கவிஞரேறு


உரம்படைத்த தெய்வத்தின் உண்மைக்கதை கேட்டிடுவீர்
கரம்கூப்பி வணங்குகிறேன் காத்திடுக என்தெய்வம்

கவியுலகில் கதிரவனாய் காண்கின்ற திசையாவும்
புவியாவும் நிறைந்தாயே புரட்சிக் கவிபாரதியே

ஆயிரம் கோடித் தெய்வமென அறிவிலிகள் தினம்தேடி
ஆலயம்தான் நாடுகிறார் அறிவுஎனும் மனம்மூடி

என்தெய்வம் நீயெனவே எடுத்திங்கே இயம்புகிறேன்
காத்திடுக காலமெல்லாம் கடவுளுனை நினைந்துருக

சாத்திரங்கள் படைத்திட்ட சாமியெல்லாம் சொன்னகதை
ஆத்திரம் கொண்டாயே அதிலொன்றும் உண்மையில்லை

சூத்திரம் சொல்லிடவே சூட்சுமமாய் ஒருசாதி
மூத்திரம் அள்ளிடவே முறைதவறி ஒருநீதி

ரவுத்திரம் கொண்டாயே கவிமகனே அதைச்சாடி
பவித்திரம் ஆனாயே பரம்பொருளின் வடிவாகி

நடமாடும் மனிதருக்கு நல்வினைகள் செய்தாலே
படமாடும் பரமனுக்கு படைத்ததுபோல் ஆகுமென்று

புடம்போட்டுச் சூடினாயே புலயனுக்கும் பூநூலை
வடம் பிடித்து இழுக்கவேண்டும் வாருமையா இவ்வேளை

புனிதமானச் சாமியெல்லாம் பூவுலகை மறந்தபோது
மனிதவுருச் சாமியாக மண்ணுலகில் அவதரித்தாய்

அப்பனுக்குப் பாடம்சொன்ன அழகுவேலன் சுப்பையா
அற்பனுக்கு பாடம்சொல்ல பாரதியாய் வந்தாயா

தமிழ்கேட்ட வேல்முருகன் தமிழ்காக்க வந்தானோ
தமிழ்காத்து தரணிக்கே தலைமகனாய் நின்றானோ

சூரனை வதம்செய்த சுப்ரமணிய வடிவாகி
பாரெனவே நடைபயின்றாய் பாங்குடனே மிடுக்காக

வேலெடுத்து வேலவனும் வியணுலகை வென்றதுபோல்
கோலெடுத்து வந்தாயோ கொடுமைகளை களைந்தெடுக்க
எழுதுகோலெடுத்து வந்தாயோ எரிமலையாய் கவிவடிக்க

உன்கவியுடுக்கை ஒலித்தபின்தான் புவிமிடுக்காய் நடந்ததையா
அருள்கிளர்ந்து எழுந்ததையா இருலொளிந்து போனதையா

நாமகளின் பட்டம்பெற்று நாணிலமும் பயனுறவே
பூமகளின் மேனியிலே புனிதனாக அவதரித்தாய்

கோளவிழிப் பார்வையிலே குளிர்ந்துவிடும் எரிமலையும்
ஞாலமொழிப் புலமையிலே எழுந்துவரும் பலகலையும்

பரம்பொருளின் படைப்பதனின் பக்குவத்தை நீயுணர்ந்து
வரம்புகளை உடைத்தெடுத்தாய் வல்லமையாய் கவிவடித்து

நரம்புகளும் புடைத்துவிடும் நாணமது ஓடிவிடும்
சுரந்துவரும் நின்கவியில் சுயவுணர்வு மரியாதை

இடர்பட்ட தேசமதை இருளிலே மீட்டெடுக்க
சுடர் விட்டாய் கவிவிளக்காய் பாரதத்தின் துயர்துடைக்க

மண்ணிலே தெய்வமெல்லாம் மலிந்துவிட்ட கணப்பொழுது
கண்ணிலே ஒளிபொங்க கருக்கொண்ட கவிமுகிலே

அதர்மங்கள் அதிகரிக்க அவதாரம் உண்மையென்றால்
அதனாலே அவதரித்த அருந்தெய்வம் நீயன்றோ

பலதெய்வம் இங்குண்டு பட்டியலும் கொஞ்சமல்ல
குலதெய்வம் நீயென்று வணங்குவதில் குறையுமில்லை

கூடிநின்ற பொருளனைத்தின் கூட்டமெல்லாம் தெய்வமென்று
வாடிநின்ற பயிர்களை வள்ளலாரும் கண்டதுபோல்

உயிர்களெல்லாம் ஒன்றென்று உணர்ந்து சொன்னாய் உள்ளொளியாய்
உயிர்களிலே நீக்கமற நிறைந்துவிட்டாய் நல்ளொளியாய்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழியே இனிமைஎன்றாய்
யாதுமாகி நீக்கமற கவிவரியால் உலகுவென்றாய்

முகில்யிடிக்கும் முகவரியாய் முடிதனிலே முண்டாசு
முறுக்கிவிட்ட மீசையினால் உன்குலமும் ரெண்டாச்சு

குறத்தியவளை மணமுடித்து குலமெல்லாம் ஒன்றென்று
துரத்தியன்று காதலித்தான் ஈசனவன் குமரனவன்

நிறத்திலொரு பிரிவில்லை யாவுமே ஒன்றென்று
துரத்தினாயே சாதிஎன்னும் சமுதாயப் பேய்தனை

கழுதைதனை பன்றிதனை தேளதனை தெய்வமென்று
அழுதகதை என்னவென்று நான்சொல்வேன் எஞ்சாமி

உயிர்களெல்லாம் ஒன்றென்று உணர்ந்துசொன்ன கவிவரியால்
உன்புகழை இன்றுவரை தொழுகிறது தமிழ்பூமி

அன்பே சிவமென்றால் அறிவேதெய்வமென்றாய்
அறிந்துகொண்டோம் ஐயமில்லை அறிவுதெய்வம் நீயன்றோ

தனிமனித பசிகண்டு தணலெனவே தகதகத்தாய்
இனியிருக்க வேண்டாமென்று கவிவரியால் உலகழித்தாய்

குருவிகளுக்கு உணவளித்து குழந்தைகளை மறந்துவிட்டாய்
அறிவிருக்கும் இடமெல்லாம் அகல்விளக்காய் நிறைந்துவிட்டாய்

காணிநிலம் கடன்கேட்டா காளியிடம் வரம்கேட்டாய்
நாணிடவே அழுதிருப்பாள் தன்மகனின் தமிழ்பாட்டால்

வரம்கொடுக்க வந்தவனே வரம் கேட்டால் என்னசெய்வாள்
உரம் போன்ற உன்நெஞ்சின் உள்நினைவை அவளறிவாள்

நிற்பதும் நடப்பதும் பறப்பதும் சொர்பனமெனே
அர்ப்பணமாய் உனைக்கொடுத்தாய் அவளுக்குத் தெரியாதா

சுப்பனவன் சூட்சுமமாய் காலனைவரச் சொல்லி
அப்பனைபோல் மிதித்த அந்தஆதிகதை அறியாததா

பூமியிலே சாமியெல்லாம் பிறந்துவந்த கதையெல்லாம்
படித்ததுண்டு பாடம் சொல்லி பக்குவமாய்க் கேட்டதுண்டு

லீலைசெய்யும் சாமியெல்லாம் இன்றுவரை இங்குண்டு
சேலைதனைக் கண்டுவிட்டால் மாலையிலே வேலையுண்டு

பல்லாக்கில் பவனிவரும் பங்காரு அம்மாசாமி
நல்வாக்கு சொல்லிடவே நாடெங்கும் பலசாமி
செல்வாக்கு பெற்றிருக்கு சேமமுடன் சாமியெல்லாம்

கொலைபுரிந்தச் சாமியெல்லாம் கோடியிலே புரளலையிலே
விலையில்லாச் சாமிநீயோ வறுமையிலே வாடிநின்றாய்

சிலைவடிவச் சாமியெல்லாம் கடல்தாண்டி விற்பணையில்
கலைவடிவச் சாமி நீயோ கவிஉலகில் விற்பனனாய்

காணக் கிறுக்கனென வருமையுனை உண்டபோதும்
ஞானச் செறுக்கினாலே வருமைதனை உண்டுவிட்டாய்

ஈழத்து ஓலமதனை மூலமாக நீயுணர்ந்து
பாலமிடச் சொன்னாயே பார்ரதனைக் கேட்கவில்லை

வேரற்றுப் போனதையா வேதனையே அங்குமிச்சம்
நீருற்ற வருவாயா நின்கவியால் அடைகஉச்சம்

வையகத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தாயே வணங்குகிறோம்
தெய்வத்துள் வைக்கப்பட்ட திருமகனே அருள்புரிக .

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

காஞ்சித் தலைவன்


சொல்லாற்றல் வன்மையிலே சுரந்துவரும் கவிநடையில்
கள்ளுண்ட போதையென கிறங்கிடுவர் உரைநடையில்

பெரியாரின் பாதைபற்றி பவனிவந்த அறிஞரவர்
தறிநெய்யும் காஞ்சிநகர் தென்னகத்து பெர்னாட்சா

கரகரத்த இவர்குரலின் கனிந்துவரும் பேச்சழகில்
கரமொலிக்கக் கேட்டிருப்பர் கனமழையில் நனைந்திடவே

இடியிடித்த மேகமென இளகிவரும் உரையிடையில்
போடிபோடும் வேகமது பொதிந்திருக்கும் விரலிடையில்

உருவத்திலே பார்ப்பதற்கு உன்மேனி குள்ளமென
உருவகித்தால் உன்புலமை மடைதிறந்த வெள்ளமென

நாடகத் துறையினிலே நடைபயின்றாய் ஞானியென
ஊடகங்கள் போற்றிடுமே எழுத்துலகின் தோணியென

துப்பாக்கி விரல்காட்டித் துரிதமாகச் சொன்னாலே
தப்பாமல் செய்திடுவர் தம்பியர்கள் பின்னாலே

நம்பியவர் உன்பின்னே நாடெங்கும் சேர்ந்திடவே
தம்பியவர் துணைகொண்டு உன்னாட்சி மலர்ந்ததன்று

பற்றில்லா வாழ்வினிலே பகுத்தறிவைக் கடைபிடித்தாய்
புற்றுநோய் வந்ததினால் பூமித்தாயின் மடிபுகுந்தாய்

தமிழுலகம் இன்றுவரை தவமிருக்குத் தலைவா
தமிழ் படைக்கத் தரணியிலே தளிர்த்து மீண்டும் வா வா ..