புதன், 17 ஜூன், 2009

கவிதை நதி

நதியைப் பற்றி எத்தனையோ கவிதை
கவிதையே நதியாகி நனைந்தது சிங்கை
மனித நதியாக மாறியிருந்தாலும்
புனித நதியாகி அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறது
எத்தனையோ ஓடங்கள் இந்த நதியைக் கடந்ததுண்டு
அத்தனை பாரங்களையும் அகம்மகிழ சுமந்துகொண்டு
இருப்பதை நனைத்து நதிபெரும் நடப்பு
இதயத்தை நனைப்பது இந்நதியின் சிறப்பு
மனைவியின் மடியில் கிடப்பவரும்
நினைவின் பிடியில் நடப்பவரும்
நிழல்மடி படித்தால் வரும் வியப்பு
நின் நிழல் மடி கண்டமுதல் உன்மேல் ஈர்ப்பு
விசையுறு பந்தினைப் போல் செல்லும் உளம்கேட்டார்
விடியலைப் போல்வந்த எந்தன் பாரதி
விசயங்கள் பலகொண்டு கவிதந்தார்
விரும்புகின்ற அண்ணன் விசயபாரதி
நிழல் மடியின் நித்திரையில் இருந்து
நீங்கள் அள்ளிவந்த ஆற்றுமணலை
காற்று வெளியில் தூவியதால் என்னவோ
ஊற்று வெளிகள் பலஇங்கே திறந்துகொண்டன
சோகங்களைச் சுமந்துதிரியும் இந்தக்குயில்
சோலைக்குச் சென்றது கவிச் சோலைக்குச் சென்றது
நதியின் நீர்பட்டுத்தானோ இந்தக்குயிலும் பூப்பெய்தது
நாளிதழில் நான் பார்த்தது கவிதைநதியிடையில் பெயர்பூத்தது
நல்லதோர் வீணையாகி இசைய வந்தாய்
ந . வீ. விசயபாரதியாக நடை பயின்றாய்
ஆண் நதி என்றாலே அரிதானது ஆனால்
அண்ணன் நதியும் அல்லவா இங்கே அரங்கேறுது
பிரித்தால் பொருள் தராதது இரட்டைக்கிளவி
பிரித்தாலும் பொருள் தந்திடும் இரட்டைநதி
திரவிய தேசத்தின் பூட்டுகளை உன்
தீந்தமிழ்ச் சாவியால் திறந்து வைத்தாய்
தீக்கணலின் கீற்றையா திலகமாக
உன் நெற்றியில் இட்டாய்
நெருப்பைச் சூடிய கவிநதியே
நதியில் நெருப்பனையாதது புதுவிதியே
சிங்கையை அந்த ஆகாயநதி கூட
அவ்வளவு நனைத்திருக்காது
கவிதை நதியின் கால்பட்டதால் என்னவோ
சிங்கைகூட தமிழால் சிவந்திருக்கிறது
தமிழுக்கு விழா என்றால் தோரணம் கட்டுவார் சிலர்
தமிழையே தோரணம் கட்டித் தொங்கவிடுவார் இவர்
நதி என்றால் நடப்பதாகத் தானே சொல்வார்கள் ஆனால்
ஒலிவாங்கி முன்னே ஒருநதி ஊறிக்கொண்டிருப்பதாக
கருப்படிக் கவிஞனும் கவிதை சொன்னான்
உன் உதடுகளின் உச்சரிப்பினால் ஒலிவாங்கிக்கும்
உள் காய்ச்சல் வந்ததை நீ அறிவாயா
ஓய்வாக இருக்கும் போது உலாவரும் காற்றிடம் கேள்
ஒத்தடம் கொடுத்துவிட்டு வந்து
ஒலிவாங்கியின் கதை சொல்லும்
தமிழ்க் காய்ச்சல் வந்து தமிழ்பேசியதைச் சொல்லும்
சிங்கையிலே இந்த நதி சீராகப் பாயட்டும்
கங்கையிலே பொங்குவதுபோல் கவிச் சங்கை ஊதட்டும்
சிற்றாருகளை அணைத்துக்கொண்டு
சி(ங்)ந்தை நதி நடக்கட்டும்
வற்றாத நதியாகி வளம்பெற்று
தமிழ் கடலில் கலக்கட்டும் .