திங்கள், 1 ஜூன், 2009

நிழல் தேடி


ஆய்வுகள் நடத்திடும் ஆகாயச்சூரியன்
ஓய்வின்றி உழைத்தானாம்


உழைத்துக் களைத்தவன் ஓய்வினைவிரும்பி
திளைக்க வந்தானாம்


கானகம் மலைகள் கார்முகில் கடந்து
கானங்கள் கேட்டானாம்


வாழ்விங்கு சுவையென வாழநினைத்தவன்
வானகம் மறந்தானாம்

வனங்களின் செழிப்பின் வல்லமைகண்டு
மனமது நிறைந்தானாம்


பயணக் களைப்பில் பாதங்கள்நோக
அயர்ந்து போனானாம்


கனமழை பெய்திட கார்முகில் கரைந்திட
கனவொன்று கண்டானாம்


தாகம் எடுத்திட தண்ணீர் குடித்திட
தேகம் நனைத்தானாம்


வீழ்ந்த மழையில் விண்ணவன் நனைய
ஆழ்ந்து போனானாம்


கடமையைச் செய்திடும் கதிரவன் கனவிலும்
மடமையை நினைப்பானா


நிழல் மடித்தேடி நித்திரை நாடி
தழல் ஒளி மறைப்பானா


வெம்மை தாளாமல் வெய்யோன் மறையும்
உண்மையை அறிவானா


கதிரவன் மறையும் கார்யிருல் நிழலை
புதிரவன் அவிழ்ப்பானா.

நிழல் தேடும் சூரியன்

தமிழ்ச் சூரியன் ஒன்று
தடம் மாறிப்போனது
நிழல் தேடிக் கைகளினால்
நிறம்மாறிப் போனது


நம்மொழியை அரியணையில்
செம்மொழியாய் பதித்தது
தமிழ் வானில் தனக்காக
தனி முத்திரை பொதித்தது


தன்கும்பம் தன்பிள்ளை
தமிழன் துயர்மறந்தது
தவிக்கின்ற எம்மினத்தை
தளிரோடு அழித்தது


அரசியல் புனிதத்தை
அழுக்காக்கிப் ப(பு)ழுத்தது
ஆதாயம் பலதேடி
அழகாக நடித்தது



சுற்றிவரும் சூரியனும்
சுயநலத்தைப் பார்த்தது
வெட்கப்பட்டு வேதனையில்
வெந்தணலில் வெந்தது


மறைவதற்கு இடம்தேடி
மண்ணுலகம் வந்தது
நிலமெல்லாம் உன்நிழலாம்
நிர்வாணமாய் அலைந்தது


நிழல் தேடிவந்த சூரியன்
நீலவானம் பார்த்தது
விண்ணுலகச் சூரியனுக்கு
தன்னிலைமை உரைத்தது


மண்ணில் வாழும் சூரியனுக்கு
கை நிழல்தான் கிடைத்தது
நம்பிக்கைச் சூரியனும்
நம்பி(க்)கை பிடித்தது


கை நிழல் சூரியனே
காலம் உன்னைப் பழித்தது
சூரியன்கள் நிழல் தேட
சுயத்தன்மை இழந்தது