வியாழன், 3 டிசம்பர், 2009

சோ(ஆ)று

மண்ணில் பூத்த
மணிநீர் இந்த சோறு
மானிட வாழ்வில்
மாபெரும் வரலாறு


நிலவு காட்டி
அன்னை ஊட்டிய
நிலாச் சோறு


நினைவு காட்டி
தந்தை ஊட்டிய
பலாச் சோறு


பால்ச்சோறு தயிர்சோறு
நெய்ச்சோறு இருப்பவர்
வாழ்வில் பலநூறு



கண்ணீரு செந்நீறு
கால்வயிறு இல்லாதவர்
வாழ்விற்குக் காரணம்யாரு



மனைவி உண்ட
மண்சோறு மணிமேகலை
கண்ட மந்திரச்சோறு

அரியும் சிவனும்
இணைந்த சோறு
அரிதாகி வருகிற
அவலத்தைப் பாரு


சோமாலியாவிலும்
ஓடியதோர் ஆறு
சோகங்கள் நிறைந்த
பஞ்சத்தின் ஆறு


பஞ்சங்கள் மறைவதற்குப்
படைக்கப்பட்ட ஆறு
மஞ்சத்திலே திளைத்திருந்தால்
மகிமை புரியாது


பாலாறு தேனாறு
பலப்பல ஆறு
காணாமல் போனது
யார்செய்த கோளாறு



வைத்த கை எடுத்ததால்
வைகை ஆறு
வறண்டு போய்
வடிக்கிறது கண்ணீறு


கா விரிந்து ஓடியதால்
காவிரி ஆறு
கலகத்திற்குக் காரணமான
கானல் நீறு


வடக்கிலே ஓடிவரும்
மூவாறு வற்றாது
வலம்வந்த வானாறு
நாகரீக நலப்பாட்டால்
நலிந்ததைப் பாரு


நதிகள் இணைப்பை
நவில்ந்தவர் நம்ம
பாரதியாரு

ஆறில்லா ஊருக்கு
ஆழகு பாழ் என்பது
ஔவை மொழி


சோறில்லா ஊருக்கு
சுகமில்லை என்பது
சோகத்தின் வ(ஒ )லி .