வெள்ளி, 21 ஜனவரி, 2011

வீரத்தைப் போற்றிடுவோம் .



தென்றலோடு தேன்கலந்து
தேமதுரத் தமிழ்குழைந்து
மன்றத்திலே கவிபாடும்
மாமதுரைக் கவிஞரிவர்


குன்றிலிட்ட மணிவிளக்காய்
குரலினிலே இடிமுழங்க
நன்றமர்ந்த நாயகரே
நரைத்த இளஞ்சூரியரே


வீரபாண்டித் தென்னவரே
வணக்கமைய்யா முன்னவரே
சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்
செவிமடுக்க அவையோரை



வங்கமண் வளர்த்தெடுத்த
வரலாற்று நாயகனாம்
மங்காதப் புகழ்படைத்த
மாவீரர் நேதாஜி


அடிமையென விலங்குபூட்டி
ஆளவந்த கூட்டத்தின்
அடிமடியைக் கலங்கடித்த
ஆற்றல்மிகு வீரமகன்



தன்மானம் சுயவேட்கை
தளராத செயல்வேகம்
எந்நாளும் போற்றிடவே
எழுந்துவந்த மதியூகம்


வெட்டிபேச்சில் வீண்பேச்சில்
விடியாது என்றெண்ணி
பட்டதெல்லாம் போதுமென்று
பாய்ச்சல்கண்ட வங்கப்புலி


பக்கிங்காம் பளபளக்க
பாரதத்தாய் கண்ணீர்சிந்த
கொக்கரித்துக் கோபங்கொண்டு
கொதித்தெழுந்த கொள்கைவீரர்


பேச்சினிலே புயல்வேகம்
பெருங்கூட்டம் சேரக்கண்டு
மூச்சதனை நிறுத்திடவே
முயன்றவர்கள் தோல்வியுற்றார்


தாய்நாட்டின் விடுதலையை
நாய்களிடமா கேட்பதென்று
சாய்த்திடவே எண்ணியவர்
சரித்திரத்தை மாற்றிவிட்டார்

சிங்கைநகர் சீரமைத்த
சீற்றமிகு படையாலே
சங்கநாத ஒலிஎழுப்பி
சமுத்திரத்தைக் கலங்கடித்தார்

பொங்குதமிழ் மறவரெல்லாம்
புடைசூழ்ந்து பின்தொடர
மங்கையரும் பங்குபெற்ற
மகத்தான யுகப்புரட்சி


இளைஞரெல்லாம் எழுச்சியுற்று
எழுந்துவந்த எரிமலையாய்
அலைஅலையாய் திரண்டுவந்து
அணிவகுத்தப் பெருங்கூட்டம்


மிடுக்கான உடையமைப்பில்
மிரண்டுபோன பகைவரெல்லாம்
நடுக்கமுடன் எதிர்கொண்டு
நாளெல்லாம் போரிட்டார்


வஞ்சகங்கள் ஒன்றுசேர
வாய்ப்புக்காக பின்வாங்கி
துஞ்சாமல் துயிலாமல்
தூரதேசம் சென்றுவிட்டார்


விடியலாகப் பின்னாலே
விடுதலையைப் பெற்றபோதும்
விடிவெள்ளி வீரமதை
விதைநெல்லாய் தூவிச்சென்றார்


இறந்துவிட்டார் என்றெண்ணி
இறுமார்ந்த ஓநாய்கள்
பிறந்துவந்த பிள்ளைதனின்
பெயரதனை அறிவாரோ


வீரனுக்கு மரணமில்லை
வெகுண்டெழுவார் வேலுப்பிள்ளை
பிரபாவதி பெற்றெடுத்து
பேராண்மை பெற்றவரே


மறவாது இவ்வுலகம்
மகத்தான வீரமதை
இறவாத புகழ்வாழ்க
இலங்கையிலும் தமிழ்மீள்க


பஞ்சத்திற்கு அடிபணியும்
பரதேசிக் கூட்டம்போல
வ்ஞ்சகத்தில் வழிதவறி
வாக்களித்துச் சென்றிடாதீர்


கொள்ளையிட்ட பணம்கோடி
கொள்கையெல்லாம் தெருக்கோடி
வெள்ளையனே தேவலடா
விளங்கவில்லை லட்சங்கோடி


ஆட்டுமந்தைக் கூட்டமல்ல
அறிந்திடுவீர் தோழர்களே
நோட்டுவிந்தைக் காட்டினாலும்
நேர்மையுடன் நின்றிடுவீர்


உரிமைக்காக உயிர்நீத்த
உத்தமர்கள் பூமியிது
நரிகலெல்லாம் நாடாண்டால்
நாணிலமும் தாங்காது


அஞ்சாத நெஞ்சத்தின்
அருஞ்சொற்பொருள் அறிந்திடுவீர்
நெஞ்சார வீரத்தை
நேசித்துப் போற்றிடுவீர் .

கவிஞர் .மதுரா .வேள்பாரி

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

பந்தயம் .


ஊரெல்லாம் ஒன்னுகூடி
ஒருநாளைக் குறிச்சாக
பெயரெல்லாம் கொடுத்தாக
பெருமையான பயமக்க


ஆகாரம் ஒருமாதம்
அளவில்லாம கொடுத்தாக
சேதாரம் ஆகுமுன்னு
செவியோரம் சொல்லலையே


நீச்சலெல்லாம் அடிச்சேங்க
நிச்சியமாய் நம்புங்க
பாய்ச்சலுக்குத் தயாராகி
பந்தயமும் வந்ததுங்க


வண்டியில பூட்டிவிட்டு
வாட்டமாக ஏறுனாக
சண்டிப்பய ரெண்டுபேரு
சத்தியமும் செஞ்சாங்க

முதல்பரிசு இணைப்பாக
முப்பதாயிரம் ரூபாயாம்
அதமட்டும் வாங்கிடனும்
அவ்வளவுதான் சொல்லிப்புட்டேன்


விசிலெல்லாம் அடிச்சாக
விலாஎலும்ப ஒடிச்சாக
பசியெல்லாம் மறந்தநானும்
பருந்தாகப் பறந்தேங்க


என்னோட இனஞ்சேர்ந்த
இளவட்ட மாடுக
முன்னோட கோபமாக
முறுக்குனாக என்வாலை


கண்ணீரு பெருக்கெடுத்து
கரைபுரண்டு ஓடுனத
கண்டுகொள்ளா மனுசபய
கைதட்டிக் குதிச்சாக


மூத்திரமும் ஒழுகிடவே
மூனுகிலோமீட்டர் ஓடினேங்க
ஆத்திரமும் வந்ததுங்க
அடிமையென்ன செய்வேங்க


பின்னால குத்துனாக
பிருட்டமெல்லாம் புண்ணாக
தன்னால குருதிவழிய
தசையெல்லாம் வலிச்சதுங்க


ஒருவழியா ஓடிநானும்
உச்சக்கோட்டை தொட்டேங்க
மறுபிறவி எடுத்ததுபோல்
மயங்கிப்போய் நின்னேங்க


பரிசெல்லாம் வாங்கிக்கிட்டு
பந்தாவாகச் சொன்னாக
சரிசரி நேரமாச்சு
செவலைக்குத் தண்ணிகாட்டு


நாவறண்டு நான்குடிச்சேன்
நாலுவாயித் தண்ணி
போதுமடாசாமி புலம்புகிறேன்
என்பொறப்பை எண்ணி .

திங்கள், 10 ஜனவரி, 2011

தை மகளே .


கலப்பைதனை கையில்ஏந்தி
கனவுகளை நெஞ்சில்தாங்கி
நிலப்பைதனின் நெஞ்சைக்கீறி
நீரிடுவர் விதையைத்தூவீ


பகலவனின் ஒளியைவாங்கி
பசுந்தழைகள் மண்ணைநீவி
பகலிரவாய் வளர்ந்துவரும்
பாரெங்கும் பஞ்சம்தீர


வியர்வைதனை நித்தம்சிந்தி
விடியுமென்றே சித்தம்எண்ணி
உயர்வுதனை அறியாமல்
உழைக்கின்ற உழவர்மக்கள்


நிலமகளை வணங்குகின்ற
நிறைவான பெருநாளாம்
குலம்வாழ குடிவாழ
குளிர்ந்துவரும் தைநாளாம்


பழமைகளை தீயிலிட்டு
பாதையிலே கோலமிட்டு
வளமைமிகு வசந்தத்தை
வரவேற்று வாழ்த்திடுவர்


மாவிலைத் தோரணமும்
மஞ்சள்கொத்து சூடிடவே
பூஇலை வாழைகட்டி
புடம்போட்ட பானையிலே


பச்சரிசி பனைவெல்லம்
பசும்பாலும் சேர்ந்திடவே
உச்சிவெயில் வரும்முன்னே
உவகையுடன் பொங்கல்வைப்பர்


பொங்கிவரும் வேளையிலே
பெண்மணிகள் குலவையிட
தங்கிடவே செல்வமெல்லாம்
தரணிக்கே சொல்லிடுவார்


பொங்கலோ பொங்கலென்று
பூரித்துக் கும்பிடுவார்
அங்கமெல்லாம் சிலிர்த்துவிடும்
அருந்தமிழ்ப் பண்டிகையாம்

காய்கனிகள் தேங்காயும்
கறும்போடு தேனினையும்
பாய்போல வாழையையும்
படையலுக்கு வைத்திடுவர்


கதிரவனைத் துதிபாடி
காணிக்கை செலுத்திடுவர்
புதிதாக நூலாடை
பூமிக்கும் சூடிடுவர்


காடுகழனி உழைக்கின்ற
கால்நடைக்கும் நன்றிசொல்லி
சூடிடுவார் குங்குமமும்
சூரணமும் சந்தனமும்


ஆநிரைக்கும் அழகுசேர்த்து
அமுதுபொங்கல் விருந்தளித்து
வாய்நிறைய வாழ்த்துச்சொல்லி
வணங்கிடும் பொ(ந)ன்னாளே

ஆண்டாண்டு வருவாயே
அகம்யாவும் மகிழ்ந்திடவே
வேண்டிடுவோம் தைமகளே
வேதனைகள் களைந்திடுவாய் .