திங்கள், 6 ஜூலை, 2009

மானம்

மஞ்சள் கயிற்றிலே
மணி ஊஞ்சல் ஊக்குகள்
கால்சட்டைக் கிழிந்தபோது
காரணம் புரிந்தது .

ஞாயிறு, 5 ஜூலை, 2009

சுமை

என்னைச் சுமந்தவள்
காலமாகிப் போனால்
என்னைக் கரைத்துக்
கொண்டிருக்கிறது காலம்
நான் அவளைச் சுமந்தபடி .

தழும்பேறிய உன்கைகளால்
களிம்பிடும் கணங்களில்
தழும்பிடும் கண்ணீரால்
கரைந்திடும் என்சுமை.


கரைந்தோடும் கண்ணீரால்
கலங்கிடும் உன்நெஞ்சில்
கணமேனும் குறையுமா
நீ பட்ட வேதனை.

அமாவாசை-பவுர்ணமி ._ _



அமாவாசை .

வெண்ணிலவை விரல்காட்டி
அன்னையவள் சோறு ஊட்ட
பார்க்க வைத்து உண்டாதாலே
பால்நிலவும் பொலிவிழந்து .


பவுர்ணமி .

பொலிவிழந்த வெண்ணிலவும்
பொறுக்கித்தின்றப் பருக்கையினால்
வலுவடைந்து வந்துவிட்டான்
வானத்திலே பவுர்ணமி .

தாவணி


கிராமத்துக் கிளிகளின்
பருவத்தை பறைசாற்றும்
பண்பாட்டுப் பட்டயம் .

தாவும் வணிதைகளால்
மேவிடும் பொழுதெல்லாம்
லாவணி படித்திடும்
தாவணிக் கவிதைகள் .


தேவதைகளின் தேசத்தில்
தேர்தல்கள் நடப்பதில்லை
அணிந்தவர் அனைவரும்
அலங்கரிக்கப்பட்டவர்கள் .

வட்டுச் சோறு

அமிர்தத்தை கடைந்ததாய்
அமுதூட்டிச் சொன்னாயே
கடைந்த அமிர்தமெது
கண்டுகொண்டேன் இப்பொழுது
கைகுழைத்து வழித்தாயே
கடைசியாக அமிர்தத்தை .