ஞாயிறு, 26 மே, 2013

காதலெனப்படுவது










பார்வையின் பரிமாற்றத்தில்
பதியமிடப்பட்ட உணர்வு

எனக்காகவும் உனக்காகவுமான‌
எதிர்பார்ப்புகளுக்கான உறவுகளின்
காத்திருப்புகளுக்கிடையே

நான் உனக்காகவும்
நீ எனக்காகவும்
காத்திருப்பதற்கான‌
காரணப் பெயர்

திரவியத் தேடலுக்கும்
திமிலோகப்பட்ட வாழ்க்கையின்
தீராத ஓட்டத்தினூடேயும்
ஏற்படும் திட்டமிடாத்திருப்பம்

இரவோடு பகலதும்
இமயமாய் தோன்றிடும்
உறவோடு பகைவந்து
ஊமையாய் நின்றிடும்

பருவத்தின் வாசலில்
பசலையும் படர்ந்திடும்
பார்ப்பவை யாவுமே
பாரமாய் தொடர்ந்திடும்

உயிரதன் எடைதனை
உணர்ந்திடக் கூடலாம்
ஒவ்வொரு நாளதும்
உடலது வாடலாம்

நான்கறை இதயமும்
நான்மறை ஆகலாம்
நாணமும் வெட்கமும்
நலிந்தே போகலாம்

ஏக்கமும் தாக்கமும்
இருவருக்கும் உண்டெனில்
இதுதான் காதலாம்
இதயத்தால் மோதலாம்.       

அஞ்சலி



அஞ்சலி

சிங்கநாதக் குரலொலியில்
சங்கநாதத் தமிழ்முழங்கும்
வெங்கலத்துச் சுடராகி
வேணுகானம் இசைத்தமகன்

பொங்கிவரும் புணல்அழகாய்
பொதிகைமலைத் தமிழழகாய்
எங்கெங்கினும் ஏழிசையால்
இசைத்தமிழை வளர்த்தமகன்

சுந்தரமாய் தமிழ்புழங்கி
மந்திரமாய் அதில்விளங்கி
சந்ததிகள் கடந்திடினும்
சரித்திரத்தை விதைத்தமகன்

பரமனுக்கும் குரல்கொடுத்தாய்
பாமரனின் துயர்படித்தாய்
வாமனனாய் உருவெடுத்து
வையகத்தில் இடம்பிடித்தாய்

எந்திரமாய் போனவரையும்
இளக்கிவிடும் குரலழகா
இங்கிருந்து போனதேனோ
இசைத்தமிழும் உரு(அழு)குதய்யா.


இறைவனடி சேர்ந்தவருக்கு 
இதயம் கனிந்த அஞ்சலி.