ஞாயிறு, 31 மே, 2009

வானம் வசப்படும்

எல்லையில்லா வானத்தில்
எழில்கோளம் நிறைந்திடவே
பிள்ளைநிலா துணைகொண்டு
பூகோளம் சுழன்றிடவே

செம்பரிதி ஒளியாலே
செம்மையான பூவுலகில்
செங்குருதி தான்வழிய
செழித்து வந்த மண்ணுலகில்


மனிதரெல்லாம் தழைத்து வந்தார்
மாண்புறவே நிலைத்து வென்றார்
புனிதரெல்லாம் பூத்துவர
பூவுலகில் புதுமை கண்டார்


கொடுமை கொண்டு
கோலாட்சி செய்துவந்த மன்னவரும்
கடுமைகண்டு கணப்பொழுதில்
மடிந்துவிட்டார் அன்னவரும்


அடிமையென தமிழினத்தின்
அடிவேரை அறுப்பவரும்
ஆரியனின் வழிவந்த
அரக்கன் என்று அறிவானா


கந்தக தனங்களின்
கற்பென்ற வெம்மையினால்
வெந்தன்று தணிந்ததே
மாமதுரை அழிந்ததே


எத்தனை கண்ணகிகளின்
எழில் இன்று வீழ்ந்தது
எரியவில்லை தென்தீவு
நீதி எங்கே ஒளிந்தது


பூமியே உனக்கு
பிளவுஒன்று வாராதா
பூபாலம் கேட்க வேண்டாம்
புதைந்துவிடு வானத்தில்


வனம் கூட வசப்பட
வாய்க்கவில்லை எங்களுக்கு
வானம் வசப்படும்
வார்த்தை மட்டும் இனிக்கிறது.

இமயம் பெரிதோ ?

தன்னம்பிக்கை விதைகளை
தனக்குள்ளே விதைத்தால்
முன்நம்பிக்கைகள் முகிழ்த்துவந்த
முன் கதைகளைப் பின்தள்ளி
விண்ணோக்கி நடைபோடும்
வீரமது விளைந்திட
மண்ணிலே நிலைபெற்ற
இமயம் பெரிதோ


ஊனமதைக் குறையென்று
ஊளையிடும் மாந்தருக்கு
வானம் வசப்படும்
வழிகள் பலஉண்டென்று
ஊமையான இசைக்கலைஞன்
உலகம் வென்ற பீத்தோவன்
உரைத்ததென்ன இமயம் பெரிதோ


உள்ளமதை உருக்குலைக்கும்
ஊனமதை உடுத்திவிட்டால்
உதயமதை என்னவென்று
உணர்வாயா உள்மனமே
வெள்ளமென கரைபுரளும்
உள்மனதை நெறிப்படுத்த
குள்ளமென உருவெடுத்த
இமயம் பெரிதோ

தமிழர் புத்தாண்டு

தமிழருக்குத் திருநாளாம் தரணியிலே ஒருநாளம்
உழவரெல்லாம் உளமார உவகையுற வரும்நாளாம்
உலகுக்கு உணவளித்த உத்தமர்கள் ஒன்றுசேர
பொங்கிவரும் கங்கைபோல் பொன்மனமும் குளிர்ந்துவர
பொங்கலெனும் திருநாளை போற்றிவைத்தார் பூவுலகில்
நிலமகளின் மேனியிலே வியர்வையோடு நீரிட்டு
குலமகளும் குலவைபாட விதைநெல்லைத் தூவிவிட்டு
மனம்மகிழ உழைத்திருப்பார் அறுவடைக்குக் காத்திருப்பார்
அறுவடையில் பூத்தநெல்லை ஆசையுடன் பொங்கவைப்பார்
ஆதவனின் முன்னிலையில் விளைந்ததெல்லாம் படையல்வைப்பார்
ஆநிரையும் வாய்நிறைய அமுதுபொங்கல் விருந்தளிப்பார்
உலகுக்கு உணவளிக்கும் உழவர்கள் மனம்நின்று
உதித்து வந்த தைதானே உழவருக்குப் புத்தாண்டு
உழவருக்குப் பின்னாலே உலகெல்லாம் செல்லுமென்றால்
தமிழருக்குத் தைதானே தரணியிலே புத்தாண்டு
மாதங்கள் பன்னிரெண்டு வகுத்து வைத்தார் முன்னின்று
சோகங்கள் கண்ணிரண்டு கலைந்தோடும் தை அன்று
நிலமகளை வணங்குகின்ற புவிபோற்றும் புத்தாண்டு
உளமாற ஏற்றிடுவோம் உழவர்தம் வழி நின்று

மனமெங்கும் மண்வாசம்

ஆடம்பரம் அலங்காரம் அனுதினமும் உல்லாசம்
மாடங்கள் மணிமகுடம் மண்மீது தினம்வேசம்

வானவரும் வந்தாலும் வதைக்கப்படும் வன்மோசம்
ஆனவரும் போனவரும் அடைவாரோ விண்தேசம்


காலம்வரும் கனிந்துவரும் கலங்கவில்லை கடல்தேசம்
ஞாலம்வரும் வேழம்வரும் கலைந்தோடும் நரிவேசம்


இருப்பதை இயன்றதை ஈந்தாலே புவிபேசும்
மறுப்பதை வெறுக்கின்ற மனதாலே மனநேசம்


மலர்கின்ற மலர்களின் மகரந்தம் மணம்வீசும்
புலர்கின்ற புல்லின்மேல் புன்னகைக்கும் பனிபேசும்


இடிக்கின்ற இருள்மழையும் இறங்கிவந்தால் மண்வாசம்
வெடிக்கின்ற வெண்பரிதி வெண்ணிலவின் ஒளிநீசம்


அசைந்தாடும் அலைகாற்றால் ஆழ்கடலும் அலைபூசும்
இசைந்தாடும் இளமனதில் இயல்பான கலைநேசம்


மங்கையவள் மலர்மொழியால் மயிலிறகாய் மணம்கூசும்
தன்கையவள் தளிர்மேனி தவழ்கையிலே தனிப்பாசம்


பொல்லாத பொய்நெஞ்சால் புவியாவும் குலநாசம்
செல்லாகிச் செரித்தாலும் செழித்துவரும் தமிழ்தேசம்

வெள்ளி, 29 மே, 2009

தழைத்திடும் தமிழினம்!

அன்பைப் போதித்த கைகளிலே
ஆயுதம் கொடுத்த கயவர்களே
எண்பை உருக்கி மண்பதைக் காத்த
எழில்குலம் அழிக்கும் நரகர்களே
முன்பே உதித்த முக்கனித் தமிழர்
முகவரி என்பதை அறிவீரோ
முடைகளின் வழிவந்த மூர்க்கன்
மகிந்தா(ஷா)சுரன் நம்படை
அழிக்க நாள்குறித்தான்
கடைவழி போகும்முன் உன்கணக்கினை
முடிப்பான் களத்தமிழ் மறவன் அறிவாயா
உன்படைகுடி வாழ்ந்திட
எம்மினம் அழிவதா எங்ஙனம் சொல்வாய் அடிமடையா
ஆரியன் வழிவந்து அரக்கனின் குடிசேர்ந்த
நரபலி நடத்தும் கலிநரனே
உன் கதையினை முடிக்க புலிவடிவெடுக்க
பிறந்திட்ட மறவன் தமிழ்ச்சிவனே
வெடிபடை கொண்டு வான்படை
நடத்தி வெந்தணல் அள்ளிவீசுகின்றாய்
பொடிபொடியாய் ஆனாலும் புத்துயிர்பெற்று
எழுந்து நடந்திடும் எம்மினமே
உன் அடிமடி கலங்கிட ஆணவம்அழிந்திட
அரும்பித் தழைத்திடும் என்தமிழினமே.

புதன், 27 மே, 2009

சிறைப்பறவை

உடல் கூட்டில் தங்கிச் செல்லும் உயிர்ப்பறவை
உடல்விட்டு பறக்கையில் நினைக்குமா தன்உறவை
தான்கட்டா கூட்டிலே தவமிருக்கும்
தனக்காக மட்டுமே சிறகுவிரிக்கும்
கூட்டோடு சேர்ந்துமே குணம்வளரும்
கூடுகையில் ஆர்ந்துமே தினம்புலரும்
ஆண்பறவை ஆனாலும் முட்டையிடும்
அடைகாத்து எண்ணங்களை எட்டிவிடும்
தான் இருக்கும் வரையில்தான் கூடுஇருக்கும்
வான் பறக்க நினைக்கையிலே கூடு இறக்கும்
பார்வைக்குத் தெரியாமல் பறந்துதிரியும்
பார்த்தவர் யார் என்றால் எண்ணம்விரியும்
ஆம்பலின் இலைநீர்போல ஒன்றிவாழும்
சாம்பலாகிப் போனாலே அன்றிவீழும்
உடல் கூட்டில் தங்கிச்செல்லும் அறைப்பறவை
உடல் விட்டுநீந்திச் செல்லும் சிறைப்பறவை

மலர்கள் பேசினால்

மலர்கள் இங்கே பேசுகின்றன
மனிதர்களைப் பார்த்து ஏசுகின்றன
காதலியை மயக்க கனகாம்பரம் மல்லி
கடவுளை வணங்க கதம்பம் அல்லி
இறந்தவர்களைப் புதைக்க நாங்கள்
இங்கே இறக்கின்றோம்
சுதந்திரம் என்றுபேசும் சுயநலவாதியே
எங்கள் சுதந்திரம் எங்கே

இளைய பாரதம்.

எங்கு செல்கிறாய் என் இளையபாரதமே
நம் தேசத்தின் புகழ்மறந்தாய் விழிமனமே


அடிமைத் தளையை அறுத்தெடுக்க
ஆயிரம் தலைவர்கள் உயிரீந்தார்
விடுதலை வேள்வியின் விளக்கெரிக்க
வீடு மனையாள் நலம்மறந்தார்


கொடியின் மரபை காப்பதற்கே
கொட்டியக் குருதியில் தினம்நனைந்தார்
உறவுக் கொடியின் வேரறுக்கவா
உன்னைச் சுமந்து பெற்றெடுத்தார்


தேசத்தின் பெருமையை நினைப்பாயா
மோசத்தில் வீழ்ந்து கிடப்பாயா
கல்விச் சாலையிலே கலவரம் புரிந்தாய்
கலங்கி இருப்பாளே கருசுமந்த உன்தாய்


நாளைய பாரதத்தின் முதுகெலும்பே அறிவாயா
நாமிருக்கும் இடமெல்லாம் நற்பெயரை பெறுவாயா
விண்ணிலும் நம்கொடி பட்டொளி வீசுதே
மண்ணிலே அடிதடி விட்டொழி நல்லது


காந்தியப் பாதையின் சாந்தியத்தை அறிந்திடு
ஏந்திய ஆயுதத்தை அடுப்பெரிக்க தந்துவிடு
சுயநலத் தேரின் வடம்பிடிக்க மறுத்துவிடு
சுட்டெரிக்கும் சூரியனாய் தேசஇருள் நீக்கிவிடு


கல்லூரிச் சாலையா கலவர பூமியா
காரணம் யார்சொல் சாதியா மதமா
சட்டங்கள் வகுத்தாரே சமூகத்தின் நீதியாய்
சண்டையிட்டு மடியாதீர் நீதியறியா பேதையாய்


மானிடம் என்பது மகத்தான பிறப்பு
மாணவன் என்பவன் தேசத்தின் உயிர்ப்பு
பாரத தேசத்தின் பண்பட்ட சிறப்பு
பார்போற்ற வேண்டுமே அதுதானே பொறுப்பு



கொற்றவன் குடை இங்கு தாழ்ந்தது
குலமக்கள் நலன்களும் அழிந்தது
சீழ்பிடித்த மனங்களினால் விளைந்தது
கோல் பிடிக்க வேண்டிய குணமது


எழுதுகோல் பிடிக்க வேண்டிய இனமுனது
விழுதுபோல் நிலைக்க வேண்டிய மனமது
யார் மீது கோபமடா சொல்வாயா
பார்மீது எம்மினமே வெல்வாயா


உரிமைக்காக உண்மையில் நீபோராடு
உன் உணர்வுகளை உண்மையின் உறையிலிடு
சகோதரப் பண்பை உன்மனதிலிடு
சண்டாள குணத்தை நீவென்றுவிடு


எங்கு செல்கிறாய் என் இளையபாரதமே
நம் தேசத்தின் புகழ் மறந்தாய் விழி மனமே


சட்டங்கள் படித்திடச் சென்ற நீ
மரச்சட்டங்களை அல்லவா ஏந்துகிறாய்
சாதியின் பெயரால் மோதுகின்றாய்
சகோதரனைக் கொல்லவா வாழ்கின்றாய்


இயற்கை கூடஇயங்கிடச் சட்டமுண்டு
இளமனமே அறிவாயா அதைக்கண்டு
வளமான வாழ்வுக்கு வகுக்கப்பட்டது சட்டம்
வழிதவறிப் போகிறாயே இதுவா உன்திட்டம்


நாளைய பாரதத்தின் நம்பிக்கை நீயே
நடமாடும் மாணவப் பருவத்தின் தீயே
நல்வழிப் பாதையிலே இன்றுமுதல் நடைபோடு
நாளைய வரலாறு நமதென்று புகழ்பாடு

புன்னகை


இதழ் தோகை விரிகையில்
இதய மயில் ஆடுகிறது
இளமையும் கூடுகிறது


செய்கூலி இல்லை
சேதாரம் உண்டு
யாவரும் அணியலாம்


இந்த முகவரிக்கு
அனைத்துத் தபால்களும்
தாமதமின்றி பட்டுவாடா


வசீகரிக்க வாய்க்கப்பெற்ற
அர்த்தங்கள் ஆயிரமுள்ள
அழகியல் மொழி


உறவுப் பாலத்திற்கு
ஒப்பந்தமிலாமல் போடப்படும்
உடனடிப் பத்திரம்


வேதனைக் குளத்தில்
வீசிய வலையிலும்
வந்துவிழும் விசித்திரமீன்



தேசங்களின் கதவுகளையும்
நேசங்களின் கதவுகளையும்
வரையறையின்றி திறக்கும் சட்டம்


மன நோய்களை
பணம் ஏதுமின்றி
குணமாக்கிடும் மருந்து


மனச் சேர்க்கையினால்
வாய்ப்புகள் கிடைக்கும்போது
மலரும் வாய்ப் பூ



அணிந்தவருக்குக் கேடயம்
பிரிந்தவருக்கு விரயம்
நொடிப் பொழுதில் உதயம்


அவசரத்திற்கு அடகு வைக்கலாம்
அசலோடு திரும்பக் கிடைக்கும்
அதிசயக் கடன்


மழலை என்றால் விடை
மங்கை என்றால் வினா
மனிதம் என்றால் அன் பூ பு


திறந்துக் கொள்ளை அடித்தாலும்
காவல்துறை கைதுசெய்யாத
கண்ணியமான திருடன்


இதழ் கடிதம் பிரிகையில்
அன்புள்ள என்று சொல்லும்
முதல் செய்தி


மனக் காயங்களுக்கு
மருந்திடும் மென்மையான
மயிலின் இறகு


உள்ளக் களிக்கையை உடனுக்குடன்
அரங்கேற்றம் செய்யும்
நாட்டியக்காரி


மானாவாரியாக மலர்ந்தாலும்
மனதிற்கு மட்டுமே தெரிந்த
மர்மதேசத்து மகாராணி

பதங்கமாதல்

காதலில் மட்டுமே
சாத்தியம் இதயம்
பதங்கமாதல்

முத்தம்

இதழ்களின் மோதலால்
இனிமையான கச்சேரி
முத்தம்

புதிதாய் பிறப்போம்


புன்னகையை இதழ்களில் பூத்திருப்போம்
மண்பகையை மனங்களில் துடைத்தொழிப்போம்


பூக்களில் வண்டாகித் தேனேடுப்போம்
பாக்களால் விண்டேகி வான்துடைப்போம்


காற்றிடம் காதலின் நயம் படிப்போம்
ஆற்றிடம் நாணலின் மடிகிடப்போம்


பறவையின் சிறகாகி படபடப்போம்
புரவியின் உறவாகி புவிகடப்போம்


மழலையின் வடிவாக மனம் அமைப்போம்
குழலையும் யாழையும் குணம் அமைப்போம்


சிந்தனை உளிகளால் சிலைவடிப்போம்
நிந்தனை செய்தாலும் கலைபடைப்போம்



கவலை விறகுகளை அடுப்பெரிப்போம்
திவலைச் சூரியனாய் சுட்டெரிப்போம்



இதயக் கதவுகளைத் திறந்துவைப்போம்
உதய நினைவுகளை விருந்து வைப்போம்


எப்போது சுயநலத்தை நாம் மறப்போம்
அப்போது புதிதாய் நாம்பிறப்போம்

பறந்து விருந்து

பூட்டிவைத்த என்வீட்டில்
புகுந்துவிட்டான் ஒருதிருடன்
பூட்டை அவன் உடைக்கவில்லை
பொன்பொருளைத் திருடவில்லை


ஆடைமேலே ஆசைகொண்ட
அர்ப்பமான திருடன்போலும்
என்ஆடை அணிந்துவிட்டு
கலைந்து போட்டான் சேரவில்லை


அடுக்களையில் சிறுதடயம்
பாவம் அவனுக்கு பசிபோல
பாத்திரத்தை உருட்டிவிட்டு
புசிக்கவில்லை நல்லவேளை


வாசம் மட்டும் போதுமென்று
பாசத்தோடு விட்டுச் சென்றான்
நேசமுள்ள திருடன்போல
நெஞ்சத்தைத் தொட்டுவிட்டான்


நூல்படிக்கும் ஆர்வமுள்ள
நூதனமான திருடன்போல
நான்படித்த புத்தகத்தை
நான்குபக்கம் படித்திருப்பான்


தான் பிடித்த வாசம்தனின்
தன்மைதனை உணர்ந்திருப்பான்
நூல்படித்துச் சென்ற அவன்
அடுத்த வீட்டில் சமைத்திருப்பான்


போகட்டும் விட்டுவிட்டேன்
வேலையில்லா வெட்டிப்பயல்
ஆகட்டும் பார்க்கலாம்
அடுத்து வந்தால் கேட்டிடலாம்

எப்படி என்சமையல்

செவ்வாய், 26 மே, 2009

காதல்

பூமியின் சுழற்சிக்கு
புத்துணர்வு தந்திடும்
கிரியாவூக்கி


மனிதத்தை மாண்புறச் செய்யும்
பாசமுள்ள உணர்ச்சி


சாதி மதத்தை ஒழித்திடும்
சமதர்மக் கடவுள்


மனம் என்ற தோட்டத்தில்
மணம் கமழும் மல்லிகைப்பூ


தலையெழுத்தை மாற்றிவிடும்
மூன்ரெழுத்து


பருவத்தையும் உருவத்தையும்
மாற்றிவிடும் மாயக்காரி


அகிலமே அகப்படும்
இந்த அதிசய வலையில்

காற்று

கண்ணிற்குத் தெரியாத
கடவுளின் மூச்சு

தென்றலாகத் தீண்டினால்
தேமதுரக் காதலன்

புயலாகச் சீறினால்
புறப்பட்ட காலன்

மலர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு
தூது செல்லும் மன்மதன்

காலச் சக்கரம் சுழன்றிட
இதுவுமோர் காரணி

உடல் என்ற கூட்டில்
உலவிவரும் ஞாநி

இசை என்ற இன்பத்தை
ஏந்தி வரும் தோணி

உப்பு

சூரியன் சுண்டக்காய்ச்சிய
சுவைதரும் பால்

நெய்தல் நிலத்தில்
விளையும் மானப்பயிர்

பாத்திகட்டி பதியம் போடாத
வெள்ளாமை

வெய்யில் தறியில்
நெய்த வெண்ணிற ஆடை

சமையலறையில் வீற்றிருக்கும்
சர்வாதிகாரி

உடன் பிறப்புகளே

இனப்பெருக்கம் செய்யவந்த
இந்தியப் பறவைகள் அல்ல நாங்கள்
இல்லங்கள் செழிப்பதற்காக இங்குவந்த நாங்கள்
ஆசைக் கனவுகள் ஆயிரம் சுமந்து
ஆறாயிரம் வெள்ளியை முகவரிடம் ஈந்து
அன்னை தந்தை அன்புமார் பிரிந்து
சுற்றமும் நட்பும் கண்ணீர் சொரிந்து
சுலக் கருப்பனுக்கு முடிகாணிக்கை நேந்து
சிங்கைநகர் வந்தோம் சிறகுகளைப் பிரிந்து
வாங்கியக் கடனுக்கு ஓராண்டு
வட்டிக் கடனுக்கு ஓராண்டு
ஒப்பந்தக் காலம் ஓராண்டு
ஒத்துக் கொள்கிறோம் ஒவ்வொரு ஆண்டும்
அக்காவிற்குத் திருமணம் ஐம்பத்தோரு சவரனும்
அடுத்தது தங்கைக்கு அதுபோல தரவேணும்
இல்லத்திலே மகிழ்ச்சியென்றால்
உள்ளம் இங்கே களித்திடும்
உறவுகளுக்குத் துன்பமென்றால்
உள்ளமது வலித்திடும்
உறவுச் சிலுவைகளை உள்ளத்தில் சுமந்து
உழைக்க வந்த உடன்பிறப்புகளே
ஒருவகையில் பார்த்தால்
நீங்கள்கூட இயேசுநாதர்களே

திங்கள், 25 மே, 2009

காலக் கருவறையில்

காலக் கருவறையில் கண்மூடிக்கிடப்போம்
ஞாலக் கவியாலே பலகவிகள் வடிப்போம்

நீலக் கடல்வானின் நிலவொளியைக் குடிப்போம்
வாழப் புவிமேலே சிலவேளை நடிப்போம்

சோலைக் குயில்போல சோகங்கள் மறப்போம்
சேலைக் குயில்களுக்கும் புதுராகம் படைப்போம்

வாழைக் கன்றாகவா நம்வாழ்வை அமைப்போம்
பாலைச் சோலையிலே பசுந்தளிராய் பூப்போம்

நாளைக்கு மூன்றுவேளை வயிறாரப் புடைப்போம்
வேளைக்குக் கிடைக்காவிடில் வேதனையில் துடிப்போம்

காலைக் கதிரவனைப் போல் கடமைக்காக உதிப்போம்
மாலைக்கு ஏங்குகின்ற மடமைகளைத் துதிப்போம்

ஈழத்துக் கருவறையில் ஒருமுறையேனும் தரிப்போம்
வேரற்ற நம்மினத்து வேதனையை உரிப்போம்

போரற்ற புதுஉலகை புன்னகையால் திறப்போம்
யாரற்றுப் போனாலும் நாம் புதிதாய்ப் பிறப்போம்

தேர்தல்

குடவோலை முறையிலே வாக்கெடுப்பு அன்று
குடலுருவி நடந்திடும் வகுந்தெடுப்பு இன்று
ஊர்கூடி ஒன்றிணைந்து நடத்திடுவார் தேர்தல்
ஊர்கேடி இன்றிணைந்து நடப்பதுவா தேர்தல்
தேர்ந்தெடுக்கத் தள்ளுகிறார்கள் வீடுதோறும் பணத்தை
தூர்ந்தெடுக்க வேண்டும் உங்கள் தூய்மைகெட்ட மனத்தை
குடத்துக்குள் சீட்டிட்டு குலுக்குவார்கள் அன்று
சீட்டிற்கு குடம்கொடுத்து பழக்குகிறார்கள் இன்று
ஆன்மாவில் தலைவர்களைத் தேடியது மலையேறி
சினிமாவில் தலைவர்கள் வந்துவிட்டார் குடியேறி
கொள்கையில் இருப்பவரை கோடியுலும் தேடுங்கள்
கொட்டகையில் தேடுவதை உடனடியாய் நிறுத்துங்கள்
சேவைகளில் திளைப்போரை மனதிலே தல்
பாவைகளில் திளைப்போரை கனவிலும் கொல்
மேடையில் உரைத்தாலும் சிந்தித்துக்கேள்
பாடையில் படுக்குமுன் சந்தித்துவெல்
தேவைகளைத் தீர்ப்பதுக்கு வருவதா தேர்தல்
தேசத்தின் நலன்காக்க வருவதுதான் தேர்தல்
சாதிகளின் பெயர்சொல்லி நடக்கின்ற மோதல்
சண்டையிட்டு மடிந்திடும் போர்களமா தேர்தல்
நீதியின் தேர்தானே பவனிவரும் தேர்தல்
அநீதி செய்பவரை களைந்தெடுப்பதே தேர்தல்

இரவின் நிழல்கள்

இயங்கிக் களைத்தப் பூமிக்கு
இயற்கைச் சூடிய இருள்போர்வை
இரவினில் பூத்த வெள்ளிகளோ
நிலவினில் உதிர்ந்த பால்வியர்வை
உழைத்துக் களைத்த மனிதருக்கு
இரவின் நிழலேதரும் நிறைவை
இரையைத் தேடியப் பறவைகளும்
இரவினில் அடைந்திடும் அதனுறவை
உறவைப் பிரிந்திடும் உள்ளங்களும்
முள்ளாய் நினைத்திடும் நிழல்யிரவை
பிரிவைத் தாங்கிடும் உள்ளங்களும்
வெல்ல நினைக்கும் அதன்வரவை
பகலிலும் நிழல்கள் வருவதுண்டு
பார்வையில் அவைகள் நிலைப்பதில்லை
இரவின் நிழல்களில் இயக்கமுண்டு
அவை எப்போதும் மனங்களில் நிலைப்பதுண்டு

புல்லாங்குழல்


துவாரங்களாய்த் துளைத்தாலும் துன்பமில்லை உனக்கு
துவாரகையின் துயில்கலைத்த பங்குஉனக்கிருக்கு
துளிர்க்கும்போது உன்மேனி சொந்தமில்லை உனக்கு
தூதுவனாய் காற்று வந்தால் கவிபடிப்பாய் அனைத்து
புல்லாகிப் போனபோது பூக்காத உன்மேனி
புண்ணாகிப் போனாலும் புன்னகைக்கும் புதுஞானி
வில்லாகிப் போனபோது பாடாத இசைத்தேனீ
கல்லாகிப் போனவரையும் கரைத்துவிடும் கவிஞானி

ஞாயிறு, 24 மே, 2009

ஆழிப்பேரலை

ஊழி பெருத்ததோ
உலகை உய்த்ததோ
ஆழி கிளர்ந்ததோ
அலைகளால் அழிந்ததோ
காளி பிறந்ததால்
தாலிகள் அறுந்ததோ
வேள்விகள் அழிந்ததால்
வேலிகள் உடைந்ததோ
சாதிகள் தெரிந்ததா
பிணசாதிகள் பார்க்கையில்
கேள்விகள் பிறந்ததோ
கேண்மைகள் புரிந்ததோ
இதுதானா இயற்கை
எப்போதுதீரும் இதன்வேட்க்கை

அகலிகை

மாமனின் சாபத்தால் கல்லாகி
ராமனின் பாதத்தால் பெண்ணானவள்

கலை மகனே

அமெரிக்க நாட்டினரின்
அரும்விருதாம் ஆசுக்கார்
எட்டாத கனியெனவே தமிழருக்கு இருந்துவந்த
கொட்டாவி விட்டவரும் வியப்பெய்து மகிழ்ச்சியுற
இரண்டாகப் பெற்றுவந்து சிறப்புற்ற ரகுமானே
இறவாத புகழடைந்த தமிழினத்தின் கலைமகனே
திசையாவும் கேட்கிறது உன்கீதம் தேன்மாரி
இசையாலே அவ்விருதை நீ பெற்றாய் நலம்வாழி
தசையாவும் சிலிர்த்தது நாங்கள் கேட்ட ஒருசெய்தி
தமிழ்பேசி அவ்விருதை பெற்றாயே புகழ்வாழ்க

முயற்சி

ஆறறிவு படைத்தமனிதா அழுவதை நிறுத்து
வீழ்ச்சியைக் கண்டு விசும்பாதே
வீழ்வது ஒன்றும் புதிதல்ல
பிறந்த குழந்தை உடனே நடப்பதில்லை
முயன்று தவழ்ந்துதான் நடக்கின்றது
முப்பருவங்களையும் அடைகின்றது
அருவியின் வீழ்ச்சி நதிகளே
அன்பின் வீழ்ச்சி அடிகளே
பதினேளுமுறை படைஎடுத்தான் கசினி
அதனை ஒருமுறை சிந்தித்துக் கவனி
எறும்பைப்பார் இயந்திரமாய் இயங்குகிறது
எதிர்வரும் மழையை எண்ணி
உணவை மண்ணில் சேர்க்கிறது
புயலின் வேகம் புறாக்களைத் தடுப்பதில்லை
புறப்பட்ட புறாக்கள் பயணத்தை நிறுத்துவதில்லை
பனிரெண்டு ஆண்டுக் கொருமுறை குருஞ்சி பூக்கிறது
பூத்தாலும் பூவுலகே மணக்கிறது
ஒவ்வொரு இரவும் விடியலை நோக்கிக் காத்திருக்கிறது
காத்திருப்பதில் வாழ்க்கை கசக்கிறது
கனிந்து வந்தால் வாழ்க்கை இனிக்கிறது
முயன்று முயன்று பார்க்கின்றாய்
முயற்சி செய்து தோற்கின்றாய்
துவழ விடாதே மனதை உயர்வாய்
வாழ்வில் ஓர் கணத்தே

பசுமரத்தாணி

ஆசிரியர் அடித்த ஆணி
அன்று அறியவில்லையே நீ
வாழ்க்கைச் சக்கரத்தின் கடையாணி
அடடா தமிழா நீ

பொன்னான வாழ்வைத்தேடி

காலையில் விழித்தோம் கதிரவனைத் தொழுதோம்
கடமைகளை முடித்தோம் கஞ்சியினைக் குடித்தோம்
கழப்பைதனை எடுத்தோம் கழணி சென்று உழைத்தோம்
வெய்யிலும் வந்தது வியர்வையும் உதிர்ந்தது
மாலையும் வந்தது மனதும் சோர்ந்தது
மாடுகளைப் பூட்டினோம் மனைசென்று மயங்கினோம்
மகன் ஒருவன் ஓடிவந்தான் மடியில் அமர்ந்து பாடுஎன்றான்
மனையாள் அவள் ஓடிவந்தாள் மகனைதூக்கி அரவணைத்தாள்
உணவு கொடுத்து உறங்க வைத்தாள்
உறவைத் தொடரஉளமுடன் வந்தாள்
பஞ்சனை தனைவிரித்தாள் மஞ்சத்திலே திளைத்தாள்
வாழ்க்கை என்பது இதுதானோ வாழ்ந்து பார்த்தால் சுவைதானோ
புலர்ந்தது பொழுது புறப்பட்டோம் புன்னகையுடன்
பொன்னான வாழ்வைத்தேடி

கண்ணீர் தேசம்



கண்ணீரைச் செந்நீராகச் சிந்துகின்ற கண்ணீர்தேசம்
குண்டுமழை பொழியும் குருதிப்புனலில் நனையும்தேசம்
ஆதிகாலம் முதல் அண்மைய காலம்வரை
அக்கிரமங்கள் நடக்கும் அநியாயதேசம்
சீதையை சிறைஎடுத்ததால் சீரழிந்த சிருங்காரதேசம்
நீதியை நிலைநாட்ட நிர்மூலமாகி வரும்தேசம்
உரிமைகள் மறுக்கப்பட்டதால் உக்கிரமானது எங்கள்நேசம்
தமிழனுக்குக் கிடையாத தன்னுரிமை வாசம்
ஒப்பணைக்கு ஒப்பாரிவைக்கும் ஓநாய்களின் வேசம்
ஊமைகளாகிப் போகினவோ உலகநாடுகளின் பாசம்
கந்தகக் கருக்கலை கருவறையில் சுமக்கும் கலியுகப்பெண்கள்
மனித வெடிகுண்டாகி மாண்டுபோகும் மானுடத்து மான்கள்
மண்ணுரிமைக்காக நித்தமும் நடக்கின்ற உயிர்பலி
உடல்சிதறி உயிர்நீத்திடும் விடுதலைப்புலி
உண்மையை உரைத்திட அனைவருக்கும் கிலி
உத்தமர்கள் உள்ளத்தில் மட்டுமே ஏற்படும்வலி
என்று பிறக்கும் எங்கள் வாழ்வுக்கு வழி

வரலாறுடைத்த வள்ளல்



இனக்கொடியை அறுத்தெடுக்க
இணையும் இரக்கமற்றவர்களின்
வன்கொடுமையை தாளாமல்
தன் குலமக்களின் அழிவை எண்ணி
உண்ணாமல் உறங்காமல்
உயிர்த்த முத்தே
முல்லைக்கொடிக்கு தேர்கொடுத்த
வள்ளலின் வரலாறுடைத்து
முல்லைத்தீவே வாடிவரும் வேளையில்
உன் உயிரை கரியாக்கி வான் சென்ற வித்தே
உன் கொளுந்துவிட்ட தேகத்தில்
எழுந்து சுட்ட தீயாவது
மழுங்கிவிட்ட இதயங்களை உலுக்கட்டும்
நம் மானமுள்ள இனத்தின் பாதை திறக்கட்டும்
இருகிவிட்ட என்கண்ணில் ஈரமது கசியவில்லை
கருகிவிட்ட உன்னை எண்ணி கை வடித்த கண்ணீர் இது.


குளத்தூர் முத்துக்குமார் தீக்குளித்துத் தன் இன்னுயிரை தியாகம் செய்தஅன்று எழுதிய அஞ்சலி.

வெள்ளி, 22 மே, 2009

தொப்புள்

மூடப்பட்ட முதல்வாய்
முத்தமிடத் துடிக்கும் முகவாய்

தாயிக்கும் சேயிக்கும் முதல்உறவாய்
ஊணுக்கு உயிர்தந்த கருக்குழல்வாய்

நாபிக் கமலத்தின் திருஉருவாய்
நான்முகனும் பிறந்திட்டான் அருள்வடிவாய்

சிரித்துப் பேசாத சின்னஞ்சிறுவாய்
சினிமாத் துறைக்குமட்டும் நல்லவருவாய்

எண்சான் உடம்பிற்கு நட்ட நடுவாய்
எந்நாளும் இருந்திடும் சுட்டவடுவாய்

ஆதாமிற்கும் ஏவாளுக்கும் இல்லாதவாய்
அனுதினமும் பொய்யே சொல்லாதவாய்