புதன், 30 டிசம்பர், 2009

பிறப்பு.




இறப்பிற்கும் சிறப்பிற்கும்
திறக்கப்பட்ட முதல் கதவு


இல்லற வினாவின்
விடை தெரியாத விடை


பூமிப்பந்தை உதைக்க
வந்த மனிதசக்தி


அனாதை இல்லங்களுக்கும்
ஆரம்பிக்கப்பட்ட திறப்பு விழா


வாடகைத் தாயின் வசூலால்
குப்பைத் தொட்டிக்கும் கிடைத்த வட்டி


இல்லாமையை இனிப்பாக்கும்
இனிமையான வரவு


ஆதாயம் படைத்தவருக்கு
ஆண்டுதோறும் கொண்டாட்டம்


வறுமைக்கும் சிலசமயம்
வாய்ப்புகள் கொடுக்கும் பெருமை


மந்தை மந்தையாய் பிறந்தாலும்
விந்தையாகவும் சில மனிதநேய பிறப்புகள்.

சிங்கை .


சிங்கை என்பது போதிமரம்
சிருங்காரம் நிறைந்திட்ட சீர்நகரம்


உழைப்பினால் உயர்ந்திட்ட அலைநகரம்
உயர்வுக்கு ஏற்றத் தலைநகரம்


பலஇன மொழி நிறைந்திட்ட கலைநகரம்
பாட்டாளி மக்களின் உழை(லை)நகரம்


புதுமைக்குப் பெயர்போன புதுநகரம்
வறுமைக்கு விடை சொல்லும் வளநகரம்


பூச்சோலை நிறைந்திட்ட பூ நகரம்
பாச்சோலை நிறைந்திட்ட பா நகரம்


தமிழுக்கு இடம் தந்த தமிழ்நகரம்
தரணியில் உயர்ந்திடும் தளிர்நகரம்


வணிகச் சந்தையினால் பணநகரம்
வளர்ந்து வரும் நாடுகளுக்கு முன்னுதாரணம்

வாய்ப்பிருந்தால் நீங்கள்
ஒருமுறையேனும் வரவேண்டும் .

வரப்பிரசாதம்.


தவங்கள் வேண்டி தனிமையில் தனித்திருந்தேன்
தரிசனம் கிடைத்ததால் தவம் கலைந்தேன்


புன்னகை இதழ்மலர பூரித்திருந்தேன்
பூவாய் மொழிகேட்டு தினம் மகிழ்ந்தேன்


குறுநகைப் பார்வையில் குதுகளித்தேன்
கூந்தல் போர்வையில் துயில் களைந்தேன்


இதழ்வழித் தேனில் நனைந்திருந்தேன்
இளமையைப் பரிமாற உயிர்த்தெழுந்தேன்


வசந்தத்தின் வாசலை அடைந்திருந்தேன்
வளமெல்லாம் பெருகிட வாழ்ந்திருந்தேன்


மெளனமாகிப் போனதால் உயிர்இழந்தேன்
வாழ்வியல் அர்த்தத்தை இன்றுணர்ந்தேன்


சுகமானது மட்டுமே சுகப்பிரசவம் அல்ல
வலிகள் கூட வரப்பிரசாதம்தான்.