திங்கள், 25 மே, 2009

காலக் கருவறையில்

காலக் கருவறையில் கண்மூடிக்கிடப்போம்
ஞாலக் கவியாலே பலகவிகள் வடிப்போம்

நீலக் கடல்வானின் நிலவொளியைக் குடிப்போம்
வாழப் புவிமேலே சிலவேளை நடிப்போம்

சோலைக் குயில்போல சோகங்கள் மறப்போம்
சேலைக் குயில்களுக்கும் புதுராகம் படைப்போம்

வாழைக் கன்றாகவா நம்வாழ்வை அமைப்போம்
பாலைச் சோலையிலே பசுந்தளிராய் பூப்போம்

நாளைக்கு மூன்றுவேளை வயிறாரப் புடைப்போம்
வேளைக்குக் கிடைக்காவிடில் வேதனையில் துடிப்போம்

காலைக் கதிரவனைப் போல் கடமைக்காக உதிப்போம்
மாலைக்கு ஏங்குகின்ற மடமைகளைத் துதிப்போம்

ஈழத்துக் கருவறையில் ஒருமுறையேனும் தரிப்போம்
வேரற்ற நம்மினத்து வேதனையை உரிப்போம்

போரற்ற புதுஉலகை புன்னகையால் திறப்போம்
யாரற்றுப் போனாலும் நாம் புதிதாய்ப் பிறப்போம்

தேர்தல்

குடவோலை முறையிலே வாக்கெடுப்பு அன்று
குடலுருவி நடந்திடும் வகுந்தெடுப்பு இன்று
ஊர்கூடி ஒன்றிணைந்து நடத்திடுவார் தேர்தல்
ஊர்கேடி இன்றிணைந்து நடப்பதுவா தேர்தல்
தேர்ந்தெடுக்கத் தள்ளுகிறார்கள் வீடுதோறும் பணத்தை
தூர்ந்தெடுக்க வேண்டும் உங்கள் தூய்மைகெட்ட மனத்தை
குடத்துக்குள் சீட்டிட்டு குலுக்குவார்கள் அன்று
சீட்டிற்கு குடம்கொடுத்து பழக்குகிறார்கள் இன்று
ஆன்மாவில் தலைவர்களைத் தேடியது மலையேறி
சினிமாவில் தலைவர்கள் வந்துவிட்டார் குடியேறி
கொள்கையில் இருப்பவரை கோடியுலும் தேடுங்கள்
கொட்டகையில் தேடுவதை உடனடியாய் நிறுத்துங்கள்
சேவைகளில் திளைப்போரை மனதிலே தல்
பாவைகளில் திளைப்போரை கனவிலும் கொல்
மேடையில் உரைத்தாலும் சிந்தித்துக்கேள்
பாடையில் படுக்குமுன் சந்தித்துவெல்
தேவைகளைத் தீர்ப்பதுக்கு வருவதா தேர்தல்
தேசத்தின் நலன்காக்க வருவதுதான் தேர்தல்
சாதிகளின் பெயர்சொல்லி நடக்கின்ற மோதல்
சண்டையிட்டு மடிந்திடும் போர்களமா தேர்தல்
நீதியின் தேர்தானே பவனிவரும் தேர்தல்
அநீதி செய்பவரை களைந்தெடுப்பதே தேர்தல்

இரவின் நிழல்கள்

இயங்கிக் களைத்தப் பூமிக்கு
இயற்கைச் சூடிய இருள்போர்வை
இரவினில் பூத்த வெள்ளிகளோ
நிலவினில் உதிர்ந்த பால்வியர்வை
உழைத்துக் களைத்த மனிதருக்கு
இரவின் நிழலேதரும் நிறைவை
இரையைத் தேடியப் பறவைகளும்
இரவினில் அடைந்திடும் அதனுறவை
உறவைப் பிரிந்திடும் உள்ளங்களும்
முள்ளாய் நினைத்திடும் நிழல்யிரவை
பிரிவைத் தாங்கிடும் உள்ளங்களும்
வெல்ல நினைக்கும் அதன்வரவை
பகலிலும் நிழல்கள் வருவதுண்டு
பார்வையில் அவைகள் நிலைப்பதில்லை
இரவின் நிழல்களில் இயக்கமுண்டு
அவை எப்போதும் மனங்களில் நிலைப்பதுண்டு

புல்லாங்குழல்


துவாரங்களாய்த் துளைத்தாலும் துன்பமில்லை உனக்கு
துவாரகையின் துயில்கலைத்த பங்குஉனக்கிருக்கு
துளிர்க்கும்போது உன்மேனி சொந்தமில்லை உனக்கு
தூதுவனாய் காற்று வந்தால் கவிபடிப்பாய் அனைத்து
புல்லாகிப் போனபோது பூக்காத உன்மேனி
புண்ணாகிப் போனாலும் புன்னகைக்கும் புதுஞானி
வில்லாகிப் போனபோது பாடாத இசைத்தேனீ
கல்லாகிப் போனவரையும் கரைத்துவிடும் கவிஞானி