செவ்வாய், 23 மார்ச், 2010

இ(தழ்)லைகளின் மேல் ஒரு அமுதமழை.


விதையாகி மண்ணிலே
புதையுண்ட காலம்முதல்
தவமாக நானிருந்து
தளிர்த்து வந்தேன் பூமியிலே

செடியாகச் செழித்துவந்த
சின்னஞ்சிறு பருவத்திலே
மடியாக நான்நினைத்து
மனம் மகிழ்ந்தேன் மண்மீது

ஆகாய மழைதூவி
அதுவந்து எனைத்தழுவி
பூவாகப் போகுமுன்னே
பிடுங்கிவிட்டார் போதுமென்று

நாற்றாங்கால் மறுநடவாய்
நட்டுவைத்தார் தொட்டியிலே
மாற்றங்கள் இதுதானா
சொல்லிடுவாய் மானிடமே

நினைக்கின்ற நேரங்களில்
எனக்காக நீருற்றி
அணைக்கின்ற ஆதவனை
அளவோடு தினம்காட்டி

அலுவலக நேரங்களில்
வீட்டிற்குள் எனைப்பூட்டி
அய்யகோ என்னசெய்வேன்
அறைக்குள்ளா என்வாழ்வு

ஆறுதலாய் காற்றுவந்து
அனுதினமும் தழுவிடவே
தேற்றிக்கொண்டேன் என்மனதை
மாற்றமாக புதுவாழ்வு

வளர்ந்து விட்டேன் கொடியாக
மகரந்தச் செடியாக
பூத்துவிட்டேன் ஓர்நாளில்
வண்ணமிகு மலர்கள்தாங்கி

இதழ்களிலே தேன்துளிகள்
முதல்மழையாய் நினைவலைகள்
வண்டுவந்து தீண்டிடுமா
உண்டவுடன் சென்றிடுமா

கட்டுக்குள் அடைபட்ட
கன்னிமலர் இ(தழ்)லைகளிலே
சிந்துகின்ற அமுதமழை
கண்ணீரின் அவலநிலை.


சனி, 20 மார்ச், 2010

பெண்ணின் பெருமை .

முறத்தாலே துரத்தினாளாம்
முன்னாளில் பெண்ணொருத்தி
புறங்காட்டி ஓடியதாம்
புலியதுவும் உயிர்வருத்தி


தன்னுயிரைக் காத்திட்ட
தமிழச்சி வரலாறு
மண்ணிலே இன்றுவரை
மங்காதப் புகழாக


அந்நாளின் பெருமைதனை
அடியோடு தகர்த்தெறிய
இந்நாளில் புறப்பட்ட
இளநங்கை சுகந்தியவள்


பள்ளிசென்ற வாகனமும்
பள்ளத்தில் விழுந்திடவே
துள்ளிச்சென்று ஓடிவிட்டார்
துயரறியா ஓட்டுனரும்


முடிந்தவரைப் போராடி
மூச்சடக்கி நீர்தேடி
மழலைகளை காத்துச்சென்ற
மாண்புதனை என்னசொல்ல


உள்ளங்களிலே உறுதிகொண்ட
உனைப்போன்ற பெண்களாலே
பெண்ணினத்தின் பெருமையெல்லாம்
பெயர்பெற்று வாழுமடி


கண்ணியத்தின் கடவுளாக
கடைசிவரை போற்றுமடி
கண்களிலே நீர்கசிந்து
காலடியில் வீழுமடி .

உல்லாச உலகம் .


முன்னொரு காலத்தில்
கடவுளெல்லாம் கண்முன்னே
கணநேரம் முன்வந்து
களைந்திடுமாம் துயரெல்லாம்


ஊமைக்குப் பாலுட்டி
ஆமைக்கும் வழிகாட்டி
அழகுதமிழ்ச் சீராட்டி
ஆன்மீகம் வளர்ந்ததையா


தனிமனித ஒழுக்கங்கண்டு
கனிகள்தரும் மரங்கள்கூட
கணிவாக வரங்கள் தந்து
பணிவாக நின்றதன்று


சுயநலமாய் மனிதமனம்
சுருங்கிவிட்ட காரணத்தால்
பயங்கொண்டு கடவுள்களும்
பாறைகளில் பதுங்கிவிட்டார்


ஒதுங்கிவிட்ட அவர்புகழை
ஓதுவதாய் இவர்சொல்லி
ஓராயிரம் போதகர்கள்
ஓயாமல் வந்துவிட்டார்


தன்மனத்தை அறியாமல்
தத்துவங்கள் புரியாமல்
தஞ்சமென இவர்பின்னே
தரணியெங்கும் பெருங்கூட்டம்


தேகத்தினை முன்னிறுத்தி
தேவைகளுக்கு தினம்ஒருத்தி
மடிகளிலே தவழ்கின்றார்
நடிகைகளும் குலவுகின்றார்


கருவறையில் காமலீலை
கடவுள்களும் அங்கில்லை
பதுங்கிவிட்ட கடவுள்களும்
பத்திரமாய் தூங்குகின்றார்



பக்திஎன்ற பெயர்சொல்லி
பாழாய்ப்போன இவர்பின்னே
புத்தியினை அடகுவைத்து
புலம்புவதை விட்டுவிட்டு


கடந்து உள்ளே சென்றிடுவீர்
கடவுளினைக் கண்டிடலாம்
மடங்களிலே மண்டியிடும்
மடமையினை வென்றிடலாம்


சல்லாப சாமிகளின்
உல்லாச உலகமடா
கல்லாகிப் போனாலும்
கடவுள்கள் பாவமடா .