ஞாயிறு, 27 நவம்பர், 2011

பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியத்தை ஒழிப்போம் .

நெல்லுக்கு இறைத்தநீர்
வாய்க்கால் வழிஓடிப்
புல்லுக்கும் ஆங்கே
புசியுமாம் . தொல்லுலகில் ,


புல்லானப் பலமொழியை
பூந்தமிழில் புகுத்தலாமோ
நெல்லான நம்மொழியின்
நெஞ்சத்தை உறுத்தலாமோ

விழிகளிலே பழுதென்றால்
வேறுவிழி பொருத்திடலாம்
தமிழ்மொழியில் பழுதென்றால்
எவ்வாறு தடுத்திடலாம்

ஒண்டவந்த பிடாரியெல்லாம்
ஊர்பிடாரியை விரட்டிடுமாம்
ஒண்டமிழின் புகழைக்கூட
அதுபோலக் கெடுத்திடுமாம்

அண்டவிட வேண்டாமே
அருந்தமிழைக் காத்திடுவோம்
வண்டமிழின் சோலைதனில்
வண்ணமாகப் பூத்திடுவோம்

தாய்மொழியும் நாய்மொழியும்
தரத்தினிலே ஒன்றிடுமா
வாய்மொழியாய் வந்ததெல்லாம்
வள்ளுவத்தை வென்றிடுமா

கற்றிடலாம் பலமொழிகள்
கற்பதிலே குறையுமில்லை
நற்றமிழில் நடவுசெய்தல்
நியாயமென்ன சொல்லிடுவீர்

உண்டிதனில் கலப்படங்கள்
உண்டவர்க்கு நஞ்சாகும்
அண்டிவரும் அயல்மொழியால்
அனைத்தமிழ் அழகுகெடும்

செங்குருதி ஓட்டத்திலும்
சிலவேறு பிரிவுஉண்டு
அங்கேனும் கலப்படத்தால்
அப்பொழுதே உயிர்பிரியும்


பைந்தமிழில் நுழைந்துள்ள
பார்த்தீனியக் களையெடுப்போம்
நைந்துவிடா நம்தமிழை
நாள்தோறும் நாம்வளர்ப்போம் .

ஞாயிறு, 13 நவம்பர், 2011

நூலகம் ஓர் ஆலயம் .

நூலகமும் ஆலயமும்
ஒன்றிணைந்த திருவடிவாய்
வேலனவன் தமிழ்மொழியை
வேய்ந்துவைத்த மன்னவராம்

ஞாலமெலாம் போற்றுகின்ற
ஞானமொழி சொன்னவராம்
காலமெல்லாம் கவிவடிக்கும்
வீரபாண்டித் தென்னவராம்

தலைமைக்கு முதல்வணக்கம்
தகையோர்க்கும் தலைவணக்கம்
கலைபடிக்கும் நூலகத்தின்
கதவுகளைத் திறப்போமா

ஆறில்லா ஊருக்கு
அழகதுவும் பாழென்று
அறிவுருத்திச் சென்றாளே
ஔவையவள் மூதாட்டி

ஊருக்கு அழகென்றால்
ஒருஆறு போதுமங்கே
தேருக்கு அழகென்றால்
தெய்வமது வேண்டுமங்கே

தெய்வங்கள் உறைந்திருக்கும்
திருவிடங்கள் பலவும்உண்டு
மெய்யதுவும் கோவிலாகும்
மேன்மையினை அறிந்திடுவீர்

பொய்மைதனை நீக்கிடவே
பொறையின்றி கற்றிடுவீர்
உய்வதற்கு முன்னாலே
உயர்வுநிலை எட்டிடுவீர்

கண்ணிற்குத் தெரியாத
கடவுளர்கள் கற்சிலையில்
மண்ணிலே உலவிவரும்
மகத்துவத்தை அறிவீரோ

அன்பே சிவமென்றால்
அறிவன்றோ தெய்வமாகும்
முன்பதனை வழிமொழிந்து
மூத்தவர்கள் சொல்லிவைத்தார்

அன்பினாலே அனுதினமும்
ஆலயங்கள் செல்வோரே
பண்பதனை அறிந்திடவே
பாடசாலை சென்றிடுவீர்

மலர்விட்டு மலர்தாவி
மகரந்தம் தனைநீவி
உலர்வதற்கு முன்னாலே
உள்கூட்டில் சேர்த்திடுமாம்

சிறுதேனி ஆனாலும்
சிந்தையெல்லாம் தினந்தேடல்
ஒருநாளும் சோர்வுயில்லை
ஒலித்திடுமே குறும்பாடல்

ஈயாத தேட்டையெல்லாம்
தீயவர்கள் கொள்வாராம்
ஈவதற்கு இங்குண்டு
இயன்றவர்கள் எடுத்திடுவீர்

திரட்டிவைத்த தேன்கூடாய்
திரவியங்கள் பலவுமுண்டு
புரட்சிகளின் வரலாறும்
புதையலாக இங்குண்டு

அறிவையெல்லாம் அடைகாக்கும்
ஆலயத்தைக் கண்டிடுவீர்
அறிந்தவர்கள் அதன்சிறப்பை
அனைவருக்கும் சொல்லிடுவீர்

புறமெல்லாம் நூற்பதற்கு
பூவுலகில் கோடியுண்டு
அகமதனை நூற்பதற்கு
நூலகமே தேவைஇன்று

அர்சனைகள் இங்குஇல்லை
அபிசேகம் தேவையில்லை
அனுமதியாய் சிறப்புச்சீட்டு
அலுவலர்கள் தருவதில்லை

சாதிமத பேதமில்லை
சடங்குகளும் நடப்பதில்லை
நீதிஒன்றே சாமிஇங்கு
நிந்தனைகள் ஏதுமில்லை

மதங்கள்கூட தடையுமில்லை
மனிதநேயம் சுடவுமில்லை
உதயமதை வேண்டுவோர்கள்
உளமுடனே சென்றிடலாம்

ஆலயமும் தொழுவதென்றால்
அதுவன்றோ சாலமாகும்
நூலகமும் ஆலயமே
நூல்படிக்கச் செல்லலாமா .

தீக்குச்சி .


அழிவி்ற்காகவே அடைக்கப்பட்ட
ஆச்சர்யக்குறிகள்

ஒற்றைக்காலில் படுத்துறங்கும்
ஒசாமா பின்லேடன்கள்

சிரசுகள் உரசப்படும்போதெல்லாம்
தீக்குளிக்கும் பே(சீ )தைகள்

கந்தகச்சுமை தலைக்கேறியதால்
கரியாகிப்போகும் கடன்காரன்கள்

க(இ)ல்லாத குழந்தைகளின்
களவாடப்பட்ட விரல்கள்

வரங்கள் சாபங்களானதால்
நிறங்கள் மாறிய மரங்கள்.

குப்பைத்தொட்டி .


கழிவுகளை மட்டுமே
கையேந்தும் கருணைஇல்லம்

கழிப்பறைக் கருவறைகளால்
கண்ணியமான காப்பகம்

பிச்சைக்காரர்களுக்கும் உணவளிக்கும்
அட்சயப் பாத்திரம்

பிறர்செய்த பாவங்களைச்
சுமந்துநிற்க தே(வை )வ
இந்த தூதன்.

பார்வை .


கொங்கை வனப்பதனில்
கோடிஇன்பம் கண்டிருந்தேன்

முல்லை இவளல்லோ
மோகத்தீ மூட்டினாளே

கள்ளைக் குடித்ததுபோல்
கலவிடவே ஆவல்கொண்டேன்

தொல்லை கொடுத்தாளே
தொலைவில் அவள் இருந்தாலும்

நெல்லைத் தூற்றியதால்
பறந்துவந்த பதரதுவும்

வெள்ளை விழியதனை
வேதனையில் ஆழ்தியதே

பிள்ளைப் பாலூற்ற
பிரிந்திடுமாம் வலியெல்லாம்

பல்லை இளித்துநானும்
பார்த்த அந்தப்பார்வையெல்லாம்

எல்லை தாண்டிடவே
எதார்த்தம் விளங்கியது .