செவ்வாய், 26 மே, 2009

காதல்

பூமியின் சுழற்சிக்கு
புத்துணர்வு தந்திடும்
கிரியாவூக்கி


மனிதத்தை மாண்புறச் செய்யும்
பாசமுள்ள உணர்ச்சி


சாதி மதத்தை ஒழித்திடும்
சமதர்மக் கடவுள்


மனம் என்ற தோட்டத்தில்
மணம் கமழும் மல்லிகைப்பூ


தலையெழுத்தை மாற்றிவிடும்
மூன்ரெழுத்து


பருவத்தையும் உருவத்தையும்
மாற்றிவிடும் மாயக்காரி


அகிலமே அகப்படும்
இந்த அதிசய வலையில்

காற்று

கண்ணிற்குத் தெரியாத
கடவுளின் மூச்சு

தென்றலாகத் தீண்டினால்
தேமதுரக் காதலன்

புயலாகச் சீறினால்
புறப்பட்ட காலன்

மலர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு
தூது செல்லும் மன்மதன்

காலச் சக்கரம் சுழன்றிட
இதுவுமோர் காரணி

உடல் என்ற கூட்டில்
உலவிவரும் ஞாநி

இசை என்ற இன்பத்தை
ஏந்தி வரும் தோணி

உப்பு

சூரியன் சுண்டக்காய்ச்சிய
சுவைதரும் பால்

நெய்தல் நிலத்தில்
விளையும் மானப்பயிர்

பாத்திகட்டி பதியம் போடாத
வெள்ளாமை

வெய்யில் தறியில்
நெய்த வெண்ணிற ஆடை

சமையலறையில் வீற்றிருக்கும்
சர்வாதிகாரி

உடன் பிறப்புகளே

இனப்பெருக்கம் செய்யவந்த
இந்தியப் பறவைகள் அல்ல நாங்கள்
இல்லங்கள் செழிப்பதற்காக இங்குவந்த நாங்கள்
ஆசைக் கனவுகள் ஆயிரம் சுமந்து
ஆறாயிரம் வெள்ளியை முகவரிடம் ஈந்து
அன்னை தந்தை அன்புமார் பிரிந்து
சுற்றமும் நட்பும் கண்ணீர் சொரிந்து
சுலக் கருப்பனுக்கு முடிகாணிக்கை நேந்து
சிங்கைநகர் வந்தோம் சிறகுகளைப் பிரிந்து
வாங்கியக் கடனுக்கு ஓராண்டு
வட்டிக் கடனுக்கு ஓராண்டு
ஒப்பந்தக் காலம் ஓராண்டு
ஒத்துக் கொள்கிறோம் ஒவ்வொரு ஆண்டும்
அக்காவிற்குத் திருமணம் ஐம்பத்தோரு சவரனும்
அடுத்தது தங்கைக்கு அதுபோல தரவேணும்
இல்லத்திலே மகிழ்ச்சியென்றால்
உள்ளம் இங்கே களித்திடும்
உறவுகளுக்குத் துன்பமென்றால்
உள்ளமது வலித்திடும்
உறவுச் சிலுவைகளை உள்ளத்தில் சுமந்து
உழைக்க வந்த உடன்பிறப்புகளே
ஒருவகையில் பார்த்தால்
நீங்கள்கூட இயேசுநாதர்களே