புதன், 26 ஜூன், 2013

சீனா தானா.







மஞ்சளான காமாலை
மனிதருக்கு வந்துவிட்டால்
கொஞ்சமேனும் தாமதிக்கா
கொடுக்கவேண்டும் அரும்மருந்தை

வஞ்சமான சீனதேசம்
வல்லரசாய் ஆகவேண்டி
கொஞ்சநஞ்சம் செய்யவில்லை
கொடுஞ்செயல்கள் வையகத்தில்

தரம்குறைந்த பொருளனைத்தும்
தகைவில்லாமல் செய்துவித்து
நிரந்தரமாய் வணிகச்சந்தை
நிர்மூலம் ஆக்கிவைத்தார்

வரம்தருமே சாமியென்று
வல்லூறு சிங்களனும்
நிரந்தரமாய் தங்கிடவே
நேசக்கரம் நீட்டிவிட்டான்

கருவறுத்தக் கதைதனைதான்
கண்ணீராய் கவிவடித்தோம்
அருவறுத்த பெளத்தத்தினால்
அனுதினமும் உயிர்துடித்தோம்

பாதமதில் சீழ்பிடித்தால்
பக்குவமாய் நீக்கவேண்டும்
சேதமின்றி சீக்கிரமாய்
சேமநலம் காக்கவேண்டும்

பாரதத்தின் பாதத்திலே
படைபலத்தை நிறுத்திவிட்டான்
பாரமென்று மீனவரை
பாவியவன் விரட்டிவிட்டான்

சாரமின்றி சகலருமே
சலம்புகின்ற வேளையிலே
ஓரமாக இமயமதின்
உச்சந்தலை உலுக்கிவிட்டான்

நேரமில்லை இந்தியனே
நீண்டதுயில் களைத்துவிடு
தூரமில்லை சாவுனக்கு
துணிந்துவிடின் பிழைத்துவிடு.

(லடாக் பகுதியை சீனராணுவம் கைப்பற்றியபொழுது என்னுள் பற்றியது)

செவ்வாய், 25 ஜூன், 2013

பெரும்பி(ம)ழை








 பெரும்பி(ம)ழை


மேகமது வெடிப்புண்டு
மேவியதோ மாமழையும்
தாகமதைத் தீர்த்திடவே
தரணியிலே மழைபொழியும்

தேகமதில் மூன்றுபங்காய்
தேக்கிவைத்த நீரதனை
யாகமது  வளர்த்திங்கு
யாசகமும் செய்கின்றோம்

மோகமது கொண்டிடவே
கருக்கொண்ட முகில்கூட்டம்
யூகமது இல்லாமல்
உதிர்த்த‌தன்றோ உத்ரகாண்டில்

வேகமாகப் பாய்ந்துவந்த
வேங்கையான வெள்ளத்தினால்
வேதனையாய் மக்களெல்லாம்
வியனுலகை எய்துவிட்டார்

விதியிதுவா எண்ணிடுவீர்
வாழுகின்ற மானிடமே
நதிகளெல்லாம் ஒன்றிணைத்து
நாடெங்கும் பாய்ச்சிவிட்டால்


சதிஇதுபோல் நடந்திடுமா
சங்கரனைப் பழித்திடுமா
மதியுகமாய் மண்ணுலகில்
நதிகளெல்லாம் ஒன்றிணைப்போம்

மறுபடியும் மழைபொழிந்தால்
மரணமதின் நடையடைப்போம்.