வெள்ளி, 12 ஜூன், 2009

புலி வருது

வாயிலிலே மணிகட்டி வழக்குரைக்க வந்தவரை
நோயிலே போகுமுன் நேர்த்தியுடன் தீர்ப்புரைத்து


கன்றிழந்த பசுவிற்கும் கண்ணீரைத் துடைத்திடவே
கொன்றொழித்தார் தன்மகனை கோமகனார் மனுநீதி


எங்கொளிந்து போனதைய்யா எங்குலத்துப் பெருமையெல்லாம்
பொங்குதமிழ் மறவனுமே போர்முறையை மீறவில்லை


வெந்தழிந்த மக்களெல்லாம் வேதனையில் காத்திருந்தோம்
பந்தமென தமிழ்நாட்டின் பாசக்கரம் நீளுமென்று


முதல்வரென ஆட்சிசெய்யும் முத்தமிழ் பண்டிதரும்
புதல்வர்களின் நலமன்றி புரிந்ததென்ன சொல்வீரே


கருணாநிதி பெயர்கொண்ட காரணத்தைப் புரிந்துகொண்டோம்
கருணை நீதி எதிர்பார்த்து களப்பலியும் நிறையக்கண்டோம்


நீதிமன்ற வளாகத்தில் சாதிச்சண்டை மூண்டதுபோல்
நாதியற்று வழக்குரைஞர் வன்முறையில் போராட்டம்

காவல்துறை கடுமைகாட்ட கைகலப்பில் முடிந்ததன்றோ
ஏவல் செய்யும் உங்களுக்கே ஏதுமில்லை பாதுகாப்பு


உள்ளிருக்கும் நீதித்தாயும் உண்மையிலே அழுதிருப்பாள்
வெள்ளையுடை நனைந்திடவே வேதனையில் துடித்திருப்பாள்


கறுப்புத்துணி அவிழ்த்தஅவள் கணப்பொழுதில் நினைத்திருப்பாள்
பொருப்பறிந்து தென்இலங்கை பொடிநடையாய் போயிருப்பாள்


கண்டபல காட்சியினால் கதறியவள் அழுதிருப்பாள்
பிண்டமாகச் சிதறியவள் பிறப்பை எண்ணி தொழுதிருப்பாள்


புதுமை பெற்று நீதித்தாயும் புதுஉடையில் வந்திடுவாள்
பதுமையாக நின்றஅவள் பலிவாங்கிச் சென்றிடுவாள்

காத்திருப்போம் காலம்வரும் கரைந்தோடும் கருப்புவெள்ளை
பூத்திருப்போம் புன்னகையுடன் புறப்படுவார் வேலுபிள்ளை ..

அக(தீ)தி

உள்ளத்தில் நெருப்பைச் சுமந்து
இல்லத்து உடமைகளை இழந்து
எல்லைகள் எதுவென்ற ஏக்கத்தில்
தொல்லைகள் தொடர்ந்திடும் இவர்களுக்கு
உலகே நீ வைத்தபெயர் அகதி



யுகங்கள் பலநூறாய் பூமியிலே
சுகங்கள் தடைபட வாழ்ந்திருந்தோம்
முகங்களாய் முத்தமிழ் முடிசூடி
அகங்களில் தீ எரியும் எங்களுக்கு
உலகே நீ வைத்த பெயர் அகதி



பண்பாடு கலாச்சாரம் பறைசாற்றி
எண்போடு நரம்பாய் உரமேற்றி
மண்பெருமை காத்திட்ட மறவர்குலம்
மாண்புகள் அழிந்திட துணைபுரிந்து
உலகே நீ வைத்த பெயர் அகதி



அழித்திட எண்ணியா எங்களுக்கு
ஒலித்திட வைத்தீர் பெயர் மட்டும்
ஒழித்திட ஒன்றாய் இணைந்தாலும்
பலித்திடும் ஓர்நாள் தமிழ் ஈழம்


புறங்களில் தீவைத்தால் அணைந்துவிடும்
அகங்களில் வைத்த தீ கொழுந்துவிடும்
அணையாமல் எரிந்திடும் இந்தத் தீ
அடையும் வரை எரிந்திடும் அக(தீ )தி.