புதன், 6 நவம்பர், 2013

மங்கள்யான்









செவ்வாயால் தோசமென்று
செப்புகின்ற சோதிடமும்
அவ்வாயில் அமைத்ததன்று
அதற்குமொருப் பரிகாரம்

கொவ்வாயாய்ச் சிவந்துநிற்கும்
குமரிகளும் கோடியுண்டு
கொய்வதற்குக் குமரரில்லை
கொடுமையடா வகுத்தஎல்லை

இருவருக்கும் செவ்வாயா
இணைத்திடுவார் மங்களமாய்
இதுகாறும் ஒலித்தக்குரல்
இதயத்திலே வெங்கலமாய்

செவ்வாயில் நாள்குறித்துச்
செலுத்திவிட்டார் விண்கலத்தை
சேமமுறச் சென்றடையும்
செப்பிடுவார் நம்பலத்தை

செவ்வாயில் பொருள்வாங்கச்
செல்வமெல்லாம் பெருகிடுமாம்
செவ்வாயில் சென்றுவாங்கச்
சந்த‌திகள் மருகிடுமாம்

மங்களமாய்ப் பெயர்வைத்து
மண்ணுலகம் தாண்டிவிட்டோம்
மதுசூதனன் திருவடியில்
மண்டியிட்டு வேண்டிவிட்டோம்

நேசமென்று ஒன்றிருந்தால்
நெருங்கிடலாம் எவ்வாயும்
சுவாசம்வேண்டிக் காத்திருக்கு
சுத(ம)ந்திரமாய் செவ்வாயும்

வாசம்செய்யச் சென்றிடுவோம்
வான்வெளியில் தோழர்களே
தோசமென்று ஒன்றுமில்லை
துரத்திடுவோம் வீணர்களை

(செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஓரையில் செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் என்ற செவ்வாய் விண்கலம் அனுப்பப்பட்டது வாழ்த்துகள் மெய்ஞான விஞ்ஞானிகளே)