சனி, 18 அக்டோபர், 2014




குழந்தையுடன் ஒருநாள்


புலருகின்ற நாளெல்லாம்
புன்னகையாய் கழிந்திருக்க‌
வளருகின்ற குழந்தையுடன்
ஒருநாளைக் களி(ழி)த்திருப்போம்

இயந்திரமாய் மனிதரெல்லாம்
இயங்குகின்ற வேளைதனில்
உறங்கிடவும் நேரமின்றி
ஓடிஓடி தினம்களைத்தோம்

இல்லறத்தின் மகிழ்சிக்காக
இயன்றளவு நாம்உழைத்தோம்
உள்ளத்திலே ஒருநாளும்
மகிழ்வுண்டா சொல்லிடுவீர்

கள்ளமில்லாக் கடவுளினைக்
கலியுகத்தில் கண்டிடலாம்
வெள்ளையுள்ளம் கொண்டதினால்
குழந்தைகளைச் சொல்லிடலாம்

பிள்ளைநிலா கண்திறக்கும்
பிரியமான வேளைதனில்
மழலையது வாய்திற‌ந்து
அம்மாவை அழைத்திருக்கும்

குவளையத்தில் கொடுமையதாம்
பொல்லாத அடிமையதாம்
அவல‌த்திலே பெருஅவலம்
அடிவயிற்றுப் பசியதுவாம்

அதையறிந்து அம்மாவும்
அன்புடனே அமுதளிப்பாள்

கும்பியது நிரம்பிவிடின்
குதூகளிக்கும் குழந்தையது
எம்பிஎம்பிக் குதித்திடுமாம்
எமனைக்கூட மிதித்திடுமாம்

கோகுலத்தில் கண்ணனவன்
கோமுகியைக் கொன்றதுபோல்
தன்பசியும் அடங்கியதும்
தானாகச் சிரித்துவிடும்

கடைவாயில் வழிந்திருக்கும்
கற்கண்டுப் பாலமுதை
அடடடடாக் கள்வனென‌
அன்போடு துடைத்திடுவாள்

படைதிரட்டும் மன்னவரும்
பால்முகத்தைக் கண்டுவிடின்
உடைவாளை உருவிடவே
ஒருகணமும் திகைத்திடுவார்

கடைக(ன்னி)ண்ணிப் பாவையரின்
கனிவாயின் இதழ்ச்சுவையும்
மழலையதன் சிரிப்பொலியில்
மன்றாடித் தோற்றுவிடும்

குழலிசையும் யாழிசையும்
இனிதில்லை இங்கேதான்
மழலையது வாய்திறந்தால்
மகிழ்ச்சியது அங்கேதான்

பொக்கைவாய் பூபூக்கும்
பொதிகை மலைச்சாரலெனெ
தக்கைவாய் தமிழ்பேசத்
தாயுள்ளம் களித்திருக்கும்

நண்பரென்றும் பகைவரென்றும்
நாள்கிழமை இதுவென்றும்
கண்திறந்த நாள்முதலாய்
கடவுளுக்குத் தெரியாது

உள்ளதனைக் காட்டுகின்றக்‌
கள்ளமில்லாக் கண்ணாடி
பிள்ளைகளே இவ்வுலகில்
கடவுளுக்கும் முன்னோடி

படைத்தவனும் காத்தவனும்
பாருலகை அழித்தவனும்
பட்டபாடு அறிவீரா
அனுசுயாவைத் தெரிவீரா

பதிவிரதைப் பத்தினியாம்
அனுசுயா தேவியரைப்
பரதேசிக் கோலங்கொண்டு
அனுகினர் மூவருமே

ஆடையின்றி அமுதூட்ட
அழைத்தஅந்த மூர்த்திகளைக்
கீர்த்தியினால் குழந்தகளாய்
மாற்றிவிட்டாள் தந்திரத்தால்

கண்கலங்கி தேவியர்கள்
மன்றாடிக் கேட்டதினால்
குழந்தைகளைக் கடவுள்களாய்
கனிவோடு மாற்றிவிட்டாள்

படைத்தவனும் தன்நிலையை
மறக்கவைத்த நிலையதுவே
பாருலகில் பெருமகிழ்ச்சி
மழலையெனும் பெருமகிழ்வே

கையசைத்துக் காலசைத்துக்
கொஞ்சும் மொழிபேசிவிடும்
கைபிசைந்த சாதமதை
சந்தனமாய் பூசிவிடும்

பிஞ்சுவிரல் அஞ்சுகமாய்
நெஞ்சத்திலே தீண்டிவிடும்
வஞ்சிகளின் மஞ்சமது
வாசல்படித் தாண்டிவிடும்

கொஞ்சமல்ல குழந்தையின்பம்
கோடியுண்டு சொல்வதற்கு
நெஞ்சம் விண்டுபோகுதிங்கே
நீதிஎங்கு சென்றிருக்கோ

பஞ்சமென்று குழந்தைகளைப்
பரிதவிக்க வைப்பவரும்
வஞ்சங்கொண்டு குழந்தைகளை
கொன்றொழிக்கும் பாவிகளும்

ஒன்றிணைந்த கொடுமையடா
ஈழத்து நிலமையடா
கருவறுக்க ஒன்றிணைந்த
கருங்காலிக் கூட்டங்களே

நீபெற்ற பிள்ளைகளை
ஒருநிமிடம் நினைப்பாயா

இசுரேலும் ஆப்கானும்
இதுகாறும் மட்டுமல்ல‌
புவியெங்கும் பூக்களென்னும்
குழந்தைகளைக் கொய்யாதீர்

தீச்சுடராய் திருவிளக்காய்
தழைத்துவரும் தலைமுறையை
தீக்குச்சி அடுக்குகின்ற‌
தவறிழைக்கச் செய்யாதிர்

குழந்தையென்னும் தெய்வங்களே
இவ்வுலகில் வெகுமானம்
குழந்தைகளின் சம்பளந்தான்
மறக்கவொண்ணா அவமானம்

மனஉளைச்சல் கொண்டவரும்
மருத்துவரைக் கண்டவரும்
பணம்பெருத்து உடல்கொழுத்து
பெரும்புள்ளியாய் நின்றவரும்

தினம்உழைத்து உடல்இளைத்து
துரும்பாகிப் போனவரும்
மனம்இனிக்க வேண்டுமென்றால்
மழலைகளைக் கொஞ்சிடுவீர்

புன்னகையாய் ஒருநாளைக்
குழந்தையுடன் நாம்களித்தோம்
உள்ளமதைக் குழந்தையாக்கி
வரும்நாளில் மகிழிந்திருப்போம். ‌‌

















சொந்தம்


கடலுக்குச் சொந்தமெனக்
கரைஅலையைச் சொல்லலாமா
படகுக்குச் சொந்தமெனப்
பாய்மரமும் எண்ணலாமா

புடலுக்குச் சொந்தமெனப்
புவியதனைச் சொல்லலாமா
படலுக்குச் சொந்தமெனப்
பாகற்காய் எண்ணலாமா

குடலுக்குச் சொந்தமெனக்
கொடும்பசியைச் சொல்லலாமா
திடலுக்குச் சொந்தமெனத்
திரள்வோரும் எண்ணலாமா

மடலுக்குச் சொந்தமென
மனமதனைச் சொல்லலாமா
குடமுழுக்குச் சொந்தமெனக்‌‌
கோபுரங்கள் எண்ணலாமா

கடவுக்குச் சொந்த‌மெனக்
காலமதைச் சொல்லலாமா
நடவுக்குச் சொந்தமென‌
நாற்றாங்கால் எண்ணலாமா

உடலுக்கு உயிர்கூட
ஒருநாளில் சொந்தமில்லை
உடனிருக்கும் உறவுகளே
உங்களுக்கு எந்தநிலை

கடனாக இவையாவும்
கடவுளவன் தந்தவினை
அடப்போடா காத்திருக்கு
அறுவடைக்கு இந்தத்தினை.











அடைகாத்தாய்


உடற்சூட்டை உள்ளிறக்கி
அடைகாக்கும் உயிர்கோழி
இடர்பாட்டை எதிர்கொண்டு...
எழுச்சிகண்டாய் நீ வாழி


இருபத்தியொரு நாளில்
குஞ்சுகளைப் பொரித்திடுமாம்
இருபத்தியொரு நாளில்
மீண்டுவந்தாய் சரித்திரமாய்

ஊழலென்னும் வழக்கிற்கா
உன்னையவர் அடைத்துவைத்தார்
உத்தமரா உண்மையிலே
உன்மேலே வழக்குரைத்தார்

காலமம்மா கலங்காதே
கலிகாலம் அப்படித்தான்
தங்கத்தையே தரம்பார்க்க‌
உரசிடுவார் இப்படித்தான்

புடம்போட்டத் தங்கமென‌
புதுப்பொழிவாய் வந்திடுவாய்
தடம்பதித்துத் தரணியிலே
தங்கத்தாரகையே மின்னிடுவாய்.