செவ்வாய், 23 மார்ச், 2010

இ(தழ்)லைகளின் மேல் ஒரு அமுதமழை.


விதையாகி மண்ணிலே
புதையுண்ட காலம்முதல்
தவமாக நானிருந்து
தளிர்த்து வந்தேன் பூமியிலே

செடியாகச் செழித்துவந்த
சின்னஞ்சிறு பருவத்திலே
மடியாக நான்நினைத்து
மனம் மகிழ்ந்தேன் மண்மீது

ஆகாய மழைதூவி
அதுவந்து எனைத்தழுவி
பூவாகப் போகுமுன்னே
பிடுங்கிவிட்டார் போதுமென்று

நாற்றாங்கால் மறுநடவாய்
நட்டுவைத்தார் தொட்டியிலே
மாற்றங்கள் இதுதானா
சொல்லிடுவாய் மானிடமே

நினைக்கின்ற நேரங்களில்
எனக்காக நீருற்றி
அணைக்கின்ற ஆதவனை
அளவோடு தினம்காட்டி

அலுவலக நேரங்களில்
வீட்டிற்குள் எனைப்பூட்டி
அய்யகோ என்னசெய்வேன்
அறைக்குள்ளா என்வாழ்வு

ஆறுதலாய் காற்றுவந்து
அனுதினமும் தழுவிடவே
தேற்றிக்கொண்டேன் என்மனதை
மாற்றமாக புதுவாழ்வு

வளர்ந்து விட்டேன் கொடியாக
மகரந்தச் செடியாக
பூத்துவிட்டேன் ஓர்நாளில்
வண்ணமிகு மலர்கள்தாங்கி

இதழ்களிலே தேன்துளிகள்
முதல்மழையாய் நினைவலைகள்
வண்டுவந்து தீண்டிடுமா
உண்டவுடன் சென்றிடுமா

கட்டுக்குள் அடைபட்ட
கன்னிமலர் இ(தழ்)லைகளிலே
சிந்துகின்ற அமுதமழை
கண்ணீரின் அவலநிலை.