திங்கள், 29 ஜூன், 2009

அணு



அணு ஒப்பந்தம்
அமெரிக்க நிர்பந்தம்
ஆராய வேண்டிய சம்பந்தம்
செர்பியாவின் உலைக்கழிவு
நாகசாகியில் உயிர்க்கழிவு
போபாலிலும் நடந்த நிகழ்வு
போதுமடா நம்மஇழவு
உலகம் உயர்வுர
ஓட்ட வேண்டும் உழவு
உண்மையான வளர்ச்சிக்கு
செய்ய வேண்டிய செலவு
அழிவைத்தருவது அணு உலை
பொழிவைத்தருவது அன்புஉலை
கொதிக்கவில்லை அரிசி உலை
சகிக்க வில்லை பொருளாதாரநிலை
நிர்மூலமா மக்களின் நிலை
ஓட்டவேண்டியது உழவு
அணுவுக்கா இவ்வளவு செலவு
அழுகிறது நிலவு கீலியத்தின் விளைவு
அணு என்பது ஆக்கசக்தியா
அண்டத்தை அழித்திட புதிய யுக்தியா
அவனின்றி அணுவும் அசையா
அணு என்பது அகிலத்தின் பசியா
வருகின்ற தலைமுறைக்கு மின்சாரக்குறையா
வரிசையாக சொல்கிறார்கள் காரணம் நிறையா
வளங்கள் இருக்கிறது பூமியில் நிறைய
வளர்ச்சிக்குப் பயன் படுத்துவோம்
புரிந்துணர்ந்து சரியா .

தேசிய நாள் .

தேசியநாள் தேசத்தில் உரிமைகள் பேசியநாள்
தேசத்தில் சுதந்திரத் தென்றல் வீசியநாள்
சுதந்திரம் என்பது பரிணாம வளர்ச்சி
சூரியக்குடும்பமும் அதற்கோர் சாட்சி
கோள்கள் பிரிந்து ஐந்நூறு பில்லியன் ஆண்டுகளாயின
கோள ஆய்வுகள் புள்ளிவிபரங்கள் சொல்லின
மானிடம் தழைத்திட யுகங்கள் பலநூறு கடந்தன
மானமது பிறந்திட மறைகளும் தோன்றின
ஆணவப் பேய்களும் அரியணை ஏறின
அகந்தையின் தலைமையில் அரசாங்கம் அமைத்தன
அடிமை சாசனத்தை ஆயுள்வரை வளர்த்தன
அடங்கி பணிசெய்ய ஆணைகளும் பிறந்தன
ஒடுங்கிய கூட்டமெல்லாம் ஓர்நாள் கிளர்ந்தன
நடுங்கிய நாட்களெல்லாம் விடைசொல்லி நகர்ந்தன
சிந்தியக் குருதியில் தேசங்கள் நனைந்தன
முந்திய தலைமுறைகள் முகவரிகள் தந்தன
சுதந்திரத் தென்றல் சுகந்தமாக வீசின
சுற்றிவரும் பூமிகூட சொந்தக் கதை பேசின
சுயநலம் அற்றவர்கள் தலைவர்கள் ஆகினர்
பயநலம் அற்றவர்கள் தியாகிகள் ஆகினர்
சுதந்திரம் என்பது பரிணாம வளர்ச்சி
பரிணாமம் என்பது படிப்படி முயற்சி
பரந்தாமனும் எடுத்த அவதாரப் புரட்சி
பாமரனின் வாழ்விலும் பாசமுள்ள உணர்ச்சி
தேசியநாள் என்பது தேசத்தின் மகிழ்ச்சி
பேசியநாள் எல்லாம் தேகத்தில் கிளர்ச்சி
போற்றிக் காக்கவேண்டிய பொன்னான வளர்ச்சி .

நினைவான கனவு.

நிலவைத் தொட்டுவிட நீண்டநாள் கனவு
நீலவானம் காட்டிட அன்னை ஊட்டிய உணவு
ஆகாய வீதியிலே தமிழனின் பயணம்
அறிவியல் பாதையை அடைவதா கடினம்
அழைப்பிற்கு ஓடிவரும் அழகான நிலவு
அம்புலியில் ஓட்டவேண்டும் அழகுதமிழ் உழவு
கதையிலும் கற்பனையிலும் ஆடிவந்த நிலா
கார் இருளில் காட்சிஎன்றால் வானமெங்கும் விழா
வடைசுடும் பாட்டிகதை வலம்வந்த காலம் நீங்கி
கடைபோடும் பாட்டிகளும் கவின் நிலவில் தினமும்தங்கி
வருங்காலம் வர்ணனைக்கும் வளமைக்கும் பஞ்சமில்லை
வஞ்சிகளை நிலவென்றால் மாமனுக்கு மஞ்சமில்லை
கவிகளினால் பாடப்பெற்ற கன்னித்தமிழ் நிலா
கலம் ஏறிச்சென்றுவிட்டான் நம்தமிழன் உலா
எட்டாத காலங்களில் ஏடுகளில் எழுதிவைத்தோம்
எட்டிவிட்டோம் எட்டையபுரத்து கனவு தீர்த்தோம்
தேசியக் கொடியையும் தேன்நிலவில் பதித்து விட்டோம்
தேசத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தி விட்டோம்
ஆகாய வீதியிலே தமிழனின் பயணம்
அறிவியல் பாதையை அடைவதா கடினம்
நிலவத் தொட்டுவிட நீண்டநாள் கனவு
நிறைவேறிவிட்டது நினைவான கனவு .

கை

திறந்து இருப்பதில்லை பிறந்த குறுங்கை
இறந்து கிடக்கையில் இறுதியில் வெறுங்கை
கடந்து நடக்கையில் தாழ்ந்த நம்கை
கரந்து கொடுக்கையில் சிவந்த நன்கை
நிமிர்ந்து நடக்கிறது உயர்ந்த சிங்கை
உதிர்ந்த வியர்வை உணர்த்திடும் பங்கை
அதிர்ந்து கிடக்கிறது அமெரிக்க மாளிகை
அதிசயம் நடந்தது ஒபாமா வருகை
பிளந்து வெடிக்கிறது எம்மினத்து வாழ்க்கை
எழுந்து நடக்க வேண்டும் நன்மினத்து இலங்கை
சுரந்து எழவேண்டும் செந்தமிழர் வேட்கை
பரந்து ஆளவேண்டும் நம்தமிழர் உலகை .

ஞாயிறு, 28 ஜூன், 2009

நந்தவன நாட்கள் .

எதிபார்ப்பு இல்லாத இளமையின்காலம்
புவியீர்ப்பு அறியாத புலமையின்கோலம்
அன்னையும் தந்தையும் அறிந்திட்ட முதல் உலகம்
என்னையும் கேள்விகேட்டு என் தங்கை வந்தநேரம்
திண்ணையும் கதைசொல்லும் திருவிழா தோறும்
புன்னையும் புங்கையும் தூளிகட்டி ஆடும்
மண்ணையும் என்னையும் பிரித்ததில்லை யாரும்
தங்கையின் தலைவாரி மஞ்சள் முகம் மலர்சூடி
பள்ளி செல்வோம் நடையோடி பாசத்தோடு விளையாடி
மாட்டு வண்டி பின்னாலும் மணிக்குறவர் பின்னாலும்
பார்த்த கதை பல உண்டு பார்வையிலே பதிந்ததுண்டு
கொன்னை மரஇலைஎடுத்து குருவிப்பழ விதை எடுத்து
சேர்த்து வைத்து மென்றிடுவோம் சிவந்தா வெற்றிலை என்றிடுவோம்
ஈச்சம்பழம் இலந்தைப்பழம் சூராம்பழம் நாவல்பழம்
தேடிச் சென்று பறித்திடுவோம் தேனீயைப்போல் திறிந்திடுவோம்
காலையிலே கண் விழித்தால் கருப்பட்டி நீர்இருக்கும்
பால் என்று கேட்டிருந்தால் வானமது வெளுத்திருக்கும்
தட்டிலே சோறிட்டால் ஒட்டாமல் கையிருக்கும்
அனையவள் சோறூட்ட ஆ என்று வாய்திறக்கும்
எத்தனையோ உணவுகளை இதுவரை நான் உண்டதுண்டு
அன்னையவள் கைவன்னம் இன்றுவரை கண்டதில்லை
உண்ட மண்ணில் உலகம் உருட்டி
அண்டங்கள் யாவும் கண்ணில் காட்டிட
வாயடைத்துப் போனால் கோகுலத்து யசோதை
உருட்டிய சோற்றில் உலகம் காட்டி
உண்மையும் அன்பும் சேர்ந்திட உருட்டி
உண்பதற்குக் கொடுப்பாள் என் அன்னை தேவதை
செவ்வாயும் வெள்ளியும் வீட்டின் தரை நனைக்கும்
கோமாதா பசுஞ்சாணம் கோரைப்பாயை விரிக்கும்
அன்னையவள் கைவண்ணத்தில் அழகு தரை சிரிக்கும்
ஆகாயம் இறங்கி வந்து அயர்ந்து தூங்கநினைக்கும்
மாலையிலே கருவானில் வெள்ளிகளும் முளைக்கும்
வாசலிலே பாய்விரிக்க பல கதைகள் பிறக்கும்
அம்புலியும் கதைகேட்டு முகில்செவியைத் திறக்கும்
செம்புளியும் காற்றில் ஆட நல்லிசையும் பிறக்கும்
இன்று வரை கிட்டவில்லை அந்த இனிமையான உறக்கம்
வென்று புகழ் எட்டினாலும் மறந்திடாத கிறக்கம்
ஆத்தங்கரை குளத்தங்கரை அழகான கண்மாய்கரை
புல்தரையில் பூத்தகறை வெண்பனியால் வெளுத்ததரை
வேடுவன் போல்நின்ற நாரை வேய்இலையால் வேய்ந்த கூரை
காடுகரை காய்ந்தபாறை எழுதி வைத்தோம் எங்கள் பெயரை
கற்றாழைப் பழம் பறித்து கட்டாந்தரையில் தேய்த்து
தொண்டைமுள் பிரித்தெடுத்து பங்குவைப்போம் பதம்பிரித்து
அய்யனார் கோவில்மணி ஆறுமணிக்கு ஒலித்திடும்
தொன்னையிலே தரும் பொங்கலை நினைக்கையிலே இனித்திடும்
குதிரையிலே அய்யனாறு பார்ப்பதற்குச் சிலிர்த்திடும்
வானம் அதிரையிலே கையிலுள்ள கருப்பருவா பளிச்சிடும்
மாம்பலம் திருடச்சென்று முள்வேலி குடைந்ததுண்டு
தோள்பலம் துணையாக தோழிகளும் வந்ததுண்டு
தோழனோடு தமக்கையும் கூட்டிச்சென்று பறித்ததுண்டு
பாதியிலே காவல்காரன் கட்டிவைத்து புடைத்ததுண்டு
இளமையிலும் என்மனதில் ஈரம்வந்து கசிந்ததுண்டு
கோலமயில் தோழியவள் நினைவுகளால் நனைந்ததுண்டு
பசுமையான களங்கமில்லா இளவயது நேசம்
பார்க்கவில்லை இதுவரையில் பால்மனது பாசம்
சொந்தவன சோகத்தில் பாதையெல்லாம் முட்கள்
வெந்து வனம் போனாலும் நரைப்பதில்லை
என் நந்தவனநாட்கள்.

திங்கள், 22 ஜூன், 2009

தீபாவ(லி )ளி

இனிக்க வில்லை இன்பத் தீபாவளி
இந்திய இதயங்களில் இவ்வருடம் தீராதவலி
இமயத்தின் எல்லைகளில் ஏனோ இத்தனை உயிர்பலி
உயிர்களை இழந்தவரும் உடைமைகளைத் தொலைத்தவரும்
உறுப்புகள் அறுந்தவரும் உயிருடன் புதைந்தவரும்
நிலமகள் நடுக்கத்தால் நித்திரையில் கூட மரண ஒலி
பாக் எல்லைகளும் பயங்கரவாதப் பள்ளிகளும்
பாவமறியாத பச்சிளங்கிள்ளைகளும்
பகுத்துண்ட பகுதியிலே காலன் தொகுத்துண்டு போனதுவோ
இத்தனை இன்னல்களிலும் இருகரம் நீட்டிய
இந்திய நெஞ்சங்களை இடைநிறுத்தி
இறுமாப்பு காட்டியது பயங்கரவாதத்தை மட்டுமே
பாடமாகக் கொண்ட பாகித்தானியக் களை
குலுங்கி நிறுத்திய குங்கும நெற்றியில்
கூட்டம் நிறைந்திட்ட தலைநகர் டெல்லியில்
குண்டுகள் வெடித்ததால் குழப்பங்கள் நிறைந்ததால்
சாய்ந்தன சில உயிர்கள்குருதிச் சகதியில்
இயற்கைச் சக்கரம் இயல்பென சுழன்றிட
வாழ்கைச் சக்கரம் ஓர்நாள் கழன்றிடும்
பிரிவினை வாதத்தைப் பிற்போக்கில் தள்ளிவிடு
அன்பாக வாழ்ந்திடுவோம் இனியாவது தோள்கோடு
இனி நேரவேண்டாம் இதுபோன்றதொரு ப(லி)ழி
அப்போது ஏற்றிடுவோம் தீபமெனும் திவ்ய ஓளி.

வெள்ளி, 19 ஜூன், 2009

இனிவரும் நூற்றாண்டே..

இனிவரும் நூற்றாண்டே
இளைஞர்களின் புத்தாண்டே


கணிப்பொறிகள் கவிபாடும்
கற்பணைகள் வழிந்தோடும்

விண்ணிலே உலா வருவோம்
வியத்தகு சாதனைகள் செய்வோம்

சுற்றும் பூமியை
சுழன்றிட வைப்போம்

சூரியப் பாதையின்
சூட்சுமம் அறிவோம்

மருந்தில்லா நோய்களை
விருந்துண்ணச் செய்வோம்

எயிட்சு என்னும் நோயை
எமனிடம் அனுப்புவோம்

மரணத்தின் வாசலை
மன்றாடி அமைப்போம்

மகத்துவம் நிறைந்திட்ட
மனிதராய் இருப்போம்

வீசும் தென்றலை
வீட்டினில் அடைப்போம்

வீதிகள் தோறும்
சோலைகள் அமைப்போம்

எந்திர வாழ்விலும்
கவிபல படைப்போம்

ஏற்றம் பெற எந்நாளும்
தமிழ் வழி நடப்போம்

பூமியைப் புரட்டி
புத்தகம் வரைவோம்

புதியதோர் உலகம்
பூத்திடச் செய்வோம்

புரட்சிகள் பல
புதுமையுடன் செய்வோம் .

தீ






தீயே உனக்குத் தீராத பசியா
மயானத்தில் நீ அறியாத மானிட ருசியா
வாழ்ந்தவர் வரவில்லை என்று
வந்தாயோ வாழைக் குருத்தழிக்க
ஏழைகளின் அடுப்பில் நீ எரியவில்லை
அநீதி செய்பவரை நீ அழிக்கவில்லை
அனாகரிகமற்ற அரசியல் கூடங்களை அணுகவில்லை
ஏடெடுத்துச் சென்ற கிள்ளைகளை எரியூட்டிவிட்டாய்
உன் செந்நிற நாக்குகளால் பிள்ளைக் கறிச் சுவைபார்த்தாய்
இனி வரும் காலம் இதுபோல் நிகழவேண்டாம்
இறைவா இதற்கு நீ தான் அருளவேண்டும் .

வியாழன், 18 ஜூன், 2009

ஆர்

அலைகடல் தாலாட்டும் புதுவையிலே
ஆர்என்ற தேன்கூட்டில் அருந்தமிழே
அழகாக ஓன்றிணைந்து செந்தமிழை
ஆராய்ந்து தருகிறார்கள் நம்தமிழை
ஆண்டொருமுறை சங்கமிக்கும் அருட்ச்சோலை
வண்டுகளாகி உண்டுகளிக்கும் தமிழ்ப்பாலை
பாவேந்தர் பா வடித்த பூமியிலே
பாரதியும் நடைபயின்ற பாண்டியிலே
பார் போற்ற பைந்தமிழன் தேரினிலே
ஆர் ஆகிப்பாய்கிறது வேரினிலே
அறவாணர் தோற்றுவித்த ஆரினிலே
அறம்போல தழைக்கவேண்டும் பாரினிலே
ஆசிரியரும் மாணவரும் நேரினிலே
ஆய்ந்து வந்து தருவார்கள் ஆய்வினிலே
புடம் போட்டு வார்த்தெடுக்கும் பூந்தமிழை
வடம் பிடித்து இழுக்க வாரீர் புதுவையிலே
யார் யாரோ வந்தாரே மண்மேலே
பேர் வாங்கிச் சென்றாரோ விண்மேலே
அருகு போல் வேரோடிய நம்தமிழை
சிறகுகளைச் செப்பனிடும் ஆர்சாலை
ஆறு என்றால் சங்கமிக்கும் கடலினிலே
கடல் கூட பொங்கநினைக்கும் ஆரினிலே
ஆறில்லா ஊருக்கு அழகு பாழா
ஆய்வரிந்து காக்கட்டும் ஆர் அமைப்பு வாளா .

புதன், 17 ஜூன், 2009

கவிதை நதி

நதியைப் பற்றி எத்தனையோ கவிதை
கவிதையே நதியாகி நனைந்தது சிங்கை
மனித நதியாக மாறியிருந்தாலும்
புனித நதியாகி அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறது
எத்தனையோ ஓடங்கள் இந்த நதியைக் கடந்ததுண்டு
அத்தனை பாரங்களையும் அகம்மகிழ சுமந்துகொண்டு
இருப்பதை நனைத்து நதிபெரும் நடப்பு
இதயத்தை நனைப்பது இந்நதியின் சிறப்பு
மனைவியின் மடியில் கிடப்பவரும்
நினைவின் பிடியில் நடப்பவரும்
நிழல்மடி படித்தால் வரும் வியப்பு
நின் நிழல் மடி கண்டமுதல் உன்மேல் ஈர்ப்பு
விசையுறு பந்தினைப் போல் செல்லும் உளம்கேட்டார்
விடியலைப் போல்வந்த எந்தன் பாரதி
விசயங்கள் பலகொண்டு கவிதந்தார்
விரும்புகின்ற அண்ணன் விசயபாரதி
நிழல் மடியின் நித்திரையில் இருந்து
நீங்கள் அள்ளிவந்த ஆற்றுமணலை
காற்று வெளியில் தூவியதால் என்னவோ
ஊற்று வெளிகள் பலஇங்கே திறந்துகொண்டன
சோகங்களைச் சுமந்துதிரியும் இந்தக்குயில்
சோலைக்குச் சென்றது கவிச் சோலைக்குச் சென்றது
நதியின் நீர்பட்டுத்தானோ இந்தக்குயிலும் பூப்பெய்தது
நாளிதழில் நான் பார்த்தது கவிதைநதியிடையில் பெயர்பூத்தது
நல்லதோர் வீணையாகி இசைய வந்தாய்
ந . வீ. விசயபாரதியாக நடை பயின்றாய்
ஆண் நதி என்றாலே அரிதானது ஆனால்
அண்ணன் நதியும் அல்லவா இங்கே அரங்கேறுது
பிரித்தால் பொருள் தராதது இரட்டைக்கிளவி
பிரித்தாலும் பொருள் தந்திடும் இரட்டைநதி
திரவிய தேசத்தின் பூட்டுகளை உன்
தீந்தமிழ்ச் சாவியால் திறந்து வைத்தாய்
தீக்கணலின் கீற்றையா திலகமாக
உன் நெற்றியில் இட்டாய்
நெருப்பைச் சூடிய கவிநதியே
நதியில் நெருப்பனையாதது புதுவிதியே
சிங்கையை அந்த ஆகாயநதி கூட
அவ்வளவு நனைத்திருக்காது
கவிதை நதியின் கால்பட்டதால் என்னவோ
சிங்கைகூட தமிழால் சிவந்திருக்கிறது
தமிழுக்கு விழா என்றால் தோரணம் கட்டுவார் சிலர்
தமிழையே தோரணம் கட்டித் தொங்கவிடுவார் இவர்
நதி என்றால் நடப்பதாகத் தானே சொல்வார்கள் ஆனால்
ஒலிவாங்கி முன்னே ஒருநதி ஊறிக்கொண்டிருப்பதாக
கருப்படிக் கவிஞனும் கவிதை சொன்னான்
உன் உதடுகளின் உச்சரிப்பினால் ஒலிவாங்கிக்கும்
உள் காய்ச்சல் வந்ததை நீ அறிவாயா
ஓய்வாக இருக்கும் போது உலாவரும் காற்றிடம் கேள்
ஒத்தடம் கொடுத்துவிட்டு வந்து
ஒலிவாங்கியின் கதை சொல்லும்
தமிழ்க் காய்ச்சல் வந்து தமிழ்பேசியதைச் சொல்லும்
சிங்கையிலே இந்த நதி சீராகப் பாயட்டும்
கங்கையிலே பொங்குவதுபோல் கவிச் சங்கை ஊதட்டும்
சிற்றாருகளை அணைத்துக்கொண்டு
சி(ங்)ந்தை நதி நடக்கட்டும்
வற்றாத நதியாகி வளம்பெற்று
தமிழ் கடலில் கலக்கட்டும் .

ஞாயிறு, 14 ஜூன், 2009

இ(ரை)றைவன்.

எழுத்தறிவித்தவன் இறைவன்
எழுத்தை அறிந்துவித்தவன் இரைவன்.

வெள்ளி, 12 ஜூன், 2009

புலி வருது

வாயிலிலே மணிகட்டி வழக்குரைக்க வந்தவரை
நோயிலே போகுமுன் நேர்த்தியுடன் தீர்ப்புரைத்து


கன்றிழந்த பசுவிற்கும் கண்ணீரைத் துடைத்திடவே
கொன்றொழித்தார் தன்மகனை கோமகனார் மனுநீதி


எங்கொளிந்து போனதைய்யா எங்குலத்துப் பெருமையெல்லாம்
பொங்குதமிழ் மறவனுமே போர்முறையை மீறவில்லை


வெந்தழிந்த மக்களெல்லாம் வேதனையில் காத்திருந்தோம்
பந்தமென தமிழ்நாட்டின் பாசக்கரம் நீளுமென்று


முதல்வரென ஆட்சிசெய்யும் முத்தமிழ் பண்டிதரும்
புதல்வர்களின் நலமன்றி புரிந்ததென்ன சொல்வீரே


கருணாநிதி பெயர்கொண்ட காரணத்தைப் புரிந்துகொண்டோம்
கருணை நீதி எதிர்பார்த்து களப்பலியும் நிறையக்கண்டோம்


நீதிமன்ற வளாகத்தில் சாதிச்சண்டை மூண்டதுபோல்
நாதியற்று வழக்குரைஞர் வன்முறையில் போராட்டம்

காவல்துறை கடுமைகாட்ட கைகலப்பில் முடிந்ததன்றோ
ஏவல் செய்யும் உங்களுக்கே ஏதுமில்லை பாதுகாப்பு


உள்ளிருக்கும் நீதித்தாயும் உண்மையிலே அழுதிருப்பாள்
வெள்ளையுடை நனைந்திடவே வேதனையில் துடித்திருப்பாள்


கறுப்புத்துணி அவிழ்த்தஅவள் கணப்பொழுதில் நினைத்திருப்பாள்
பொருப்பறிந்து தென்இலங்கை பொடிநடையாய் போயிருப்பாள்


கண்டபல காட்சியினால் கதறியவள் அழுதிருப்பாள்
பிண்டமாகச் சிதறியவள் பிறப்பை எண்ணி தொழுதிருப்பாள்


புதுமை பெற்று நீதித்தாயும் புதுஉடையில் வந்திடுவாள்
பதுமையாக நின்றஅவள் பலிவாங்கிச் சென்றிடுவாள்

காத்திருப்போம் காலம்வரும் கரைந்தோடும் கருப்புவெள்ளை
பூத்திருப்போம் புன்னகையுடன் புறப்படுவார் வேலுபிள்ளை ..

அக(தீ)தி

உள்ளத்தில் நெருப்பைச் சுமந்து
இல்லத்து உடமைகளை இழந்து
எல்லைகள் எதுவென்ற ஏக்கத்தில்
தொல்லைகள் தொடர்ந்திடும் இவர்களுக்கு
உலகே நீ வைத்தபெயர் அகதி



யுகங்கள் பலநூறாய் பூமியிலே
சுகங்கள் தடைபட வாழ்ந்திருந்தோம்
முகங்களாய் முத்தமிழ் முடிசூடி
அகங்களில் தீ எரியும் எங்களுக்கு
உலகே நீ வைத்த பெயர் அகதி



பண்பாடு கலாச்சாரம் பறைசாற்றி
எண்போடு நரம்பாய் உரமேற்றி
மண்பெருமை காத்திட்ட மறவர்குலம்
மாண்புகள் அழிந்திட துணைபுரிந்து
உலகே நீ வைத்த பெயர் அகதி



அழித்திட எண்ணியா எங்களுக்கு
ஒலித்திட வைத்தீர் பெயர் மட்டும்
ஒழித்திட ஒன்றாய் இணைந்தாலும்
பலித்திடும் ஓர்நாள் தமிழ் ஈழம்


புறங்களில் தீவைத்தால் அணைந்துவிடும்
அகங்களில் வைத்த தீ கொழுந்துவிடும்
அணையாமல் எரிந்திடும் இந்தத் தீ
அடையும் வரை எரிந்திடும் அக(தீ )தி.

வியாழன், 11 ஜூன், 2009

கற்பு

கற்பு என்பது கால்களுக்கு இடையிலா
கண்ணகி எரித்த கந்தக முலையிலா
கலாச்சாரம் கற்பித்த கண்ணிய நடையிலா
காலச்சாரம் நூற்பித்த புண்ணிய உடையிலா
அனைவருக்கும் அமுதளிக்கும் பண்பாட்டுப் படையலா
ஆன்றோரும் சான்றோரும் அறிந்து சொன்ன வழியிலா
ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிவிகித சமையலா
ஆளுமைக்கு நான்என்ற அகந்தையின் மொழியிலா
அரிதாரம் பூசிவந்த அர்தமற்ற விடியலா
பரிகாரம் செய்து விட்டால் கிடைத்துவிடும் புதையலா
கற்பு என்பது வாழ்வியல் நெறி
காலங்கள் போற்றும் கனல் போன்றவரி
குறி தவறினால் இலக்கு அதுகடந்துவிடும்
நெறி தவறினால் இழுக்கு உன்னை அடைந்துவிடும் .

ஞாயிறு, 7 ஜூன், 2009

தமிழ்வேள் கோ .சாரங்கபாணி

பாடுபட்ட பைந்தமிழர் ஏடுபோற்ற வைத்தவர்
நாடுவிட்டு உழைக்கவந்து நம்தமிழைக் காத்தவர்

சிங்கை எங்கும் தமிழ்முழக்கம் முரசறிவித்தவர்
கங்கை பொங்கும் கணித்தமிழை சிரசில் ஏற்றிவித்தவர்

வீதிஎங்கும் தமிழ் முழக்கம் வேண்டுமென்று சொன்னவர்
சாதிமங்க தமிழ்செழிக்க தன்னைநீராய் விட்டவர்


அடிமையென்று வாழாதிருக்க அரும்பாடுபட்டவர்
குடியுரிமை வாங்கச்சொல்லி குலம்தழைக்க வைத்தவர்


முகில்கருத்த தலைமுடியை பிடரிவரைக் கொண்டவர்
அகில்மணக்கும் அழகுமுகம் சுடரொளியைப் போன்றவர்


தேரோடும் திருவாரூர் திருமகனாய் வளர்ந்தவர்
போராடும் குணத்தாலே தமிழ்தேரை இழுத்தவர்


யாரோடும் பகைமை இல்லை நட்பாகப் பழுத்தவர்
வேரோடும் நான்கினத்தில் உப்பாக நிலைத்தவர்



சிந்தனையால் செழுந்தமிழை வேர்பிடிக்கச் செய்தவர்
கந்தனைப்போல் தமிழ்வேளாய் பேர்கொடுத்துச் சென்றவர்



நான்முகத்தான் நாவினிலே வீற்றிருப்பாள் வாணி
நான்கினத்தின் நடுவினிலே சோதியானார் சாரங்கபாணி .

அழகின் சிரிப்பு

ஆகாயப் பந்தலிலே ஆதவனின் பொன்சிரிப்பு
அழகுநிலா பவனிவர வெள்ளிகளின் மின்மினுப்பு

கார்முகில்கள் தீண்டலினால் மின்னலென கண்திறப்பு
பார்மகளின் மேனியிலே பசுமையான புல்விரிப்பு

மழைத்துளிகள் மண்ணில்வீழ நிலமகளின் சூல்நிரைப்பு
தழைத்திடும் தளிராலே தரணியெங்கும் புதுவனப்பு

புலர்ந்துவரும் காலையிலே புல்நுனியில் பனிச்சிரிப்பு
மலர்ந்துவரும் மலர்களில் வண்டுகளின் தேனெடுப்பு

கழனியிலே குலவையிட்டு நாற்றுநாடும் பயிர்விளைப்பு
உளந்தனிலே உண்மையிலே இதைக்கண்டா நம்சிரிப்பு


நெகிழிகளின் வழிவந்த பூக்கள்இன்று கடைவிரிப்பு
நெகிழ்கிறது நெஞ்சமெல்லாம் இயற்க்கையது திரைமறைப்பு


காவிஉடை கொண்டவருக்கும் காசுஎன்றால் கனிச்சிரிப்பு
ஆவிவிட்டு போனபின்பு அடங்கிவிடும் அதன்சிரிப்பு


காகிதப் பணங்களில் காந்திகொண்ட கவின்சிரிப்பு
காண்கின்ற மனங்களில் சாந்திபூண்ட அழகின்சிரிப்பு .

திங்கள், 1 ஜூன், 2009

நிழல் தேடி


ஆய்வுகள் நடத்திடும் ஆகாயச்சூரியன்
ஓய்வின்றி உழைத்தானாம்


உழைத்துக் களைத்தவன் ஓய்வினைவிரும்பி
திளைக்க வந்தானாம்


கானகம் மலைகள் கார்முகில் கடந்து
கானங்கள் கேட்டானாம்


வாழ்விங்கு சுவையென வாழநினைத்தவன்
வானகம் மறந்தானாம்

வனங்களின் செழிப்பின் வல்லமைகண்டு
மனமது நிறைந்தானாம்


பயணக் களைப்பில் பாதங்கள்நோக
அயர்ந்து போனானாம்


கனமழை பெய்திட கார்முகில் கரைந்திட
கனவொன்று கண்டானாம்


தாகம் எடுத்திட தண்ணீர் குடித்திட
தேகம் நனைத்தானாம்


வீழ்ந்த மழையில் விண்ணவன் நனைய
ஆழ்ந்து போனானாம்


கடமையைச் செய்திடும் கதிரவன் கனவிலும்
மடமையை நினைப்பானா


நிழல் மடித்தேடி நித்திரை நாடி
தழல் ஒளி மறைப்பானா


வெம்மை தாளாமல் வெய்யோன் மறையும்
உண்மையை அறிவானா


கதிரவன் மறையும் கார்யிருல் நிழலை
புதிரவன் அவிழ்ப்பானா.

நிழல் தேடும் சூரியன்

தமிழ்ச் சூரியன் ஒன்று
தடம் மாறிப்போனது
நிழல் தேடிக் கைகளினால்
நிறம்மாறிப் போனது


நம்மொழியை அரியணையில்
செம்மொழியாய் பதித்தது
தமிழ் வானில் தனக்காக
தனி முத்திரை பொதித்தது


தன்கும்பம் தன்பிள்ளை
தமிழன் துயர்மறந்தது
தவிக்கின்ற எம்மினத்தை
தளிரோடு அழித்தது


அரசியல் புனிதத்தை
அழுக்காக்கிப் ப(பு)ழுத்தது
ஆதாயம் பலதேடி
அழகாக நடித்தது



சுற்றிவரும் சூரியனும்
சுயநலத்தைப் பார்த்தது
வெட்கப்பட்டு வேதனையில்
வெந்தணலில் வெந்தது


மறைவதற்கு இடம்தேடி
மண்ணுலகம் வந்தது
நிலமெல்லாம் உன்நிழலாம்
நிர்வாணமாய் அலைந்தது


நிழல் தேடிவந்த சூரியன்
நீலவானம் பார்த்தது
விண்ணுலகச் சூரியனுக்கு
தன்னிலைமை உரைத்தது


மண்ணில் வாழும் சூரியனுக்கு
கை நிழல்தான் கிடைத்தது
நம்பிக்கைச் சூரியனும்
நம்பி(க்)கை பிடித்தது


கை நிழல் சூரியனே
காலம் உன்னைப் பழித்தது
சூரியன்கள் நிழல் தேட
சுயத்தன்மை இழந்தது