புதன், 27 மே, 2009

சிறைப்பறவை

உடல் கூட்டில் தங்கிச் செல்லும் உயிர்ப்பறவை
உடல்விட்டு பறக்கையில் நினைக்குமா தன்உறவை
தான்கட்டா கூட்டிலே தவமிருக்கும்
தனக்காக மட்டுமே சிறகுவிரிக்கும்
கூட்டோடு சேர்ந்துமே குணம்வளரும்
கூடுகையில் ஆர்ந்துமே தினம்புலரும்
ஆண்பறவை ஆனாலும் முட்டையிடும்
அடைகாத்து எண்ணங்களை எட்டிவிடும்
தான் இருக்கும் வரையில்தான் கூடுஇருக்கும்
வான் பறக்க நினைக்கையிலே கூடு இறக்கும்
பார்வைக்குத் தெரியாமல் பறந்துதிரியும்
பார்த்தவர் யார் என்றால் எண்ணம்விரியும்
ஆம்பலின் இலைநீர்போல ஒன்றிவாழும்
சாம்பலாகிப் போனாலே அன்றிவீழும்
உடல் கூட்டில் தங்கிச்செல்லும் அறைப்பறவை
உடல் விட்டுநீந்திச் செல்லும் சிறைப்பறவை

மலர்கள் பேசினால்

மலர்கள் இங்கே பேசுகின்றன
மனிதர்களைப் பார்த்து ஏசுகின்றன
காதலியை மயக்க கனகாம்பரம் மல்லி
கடவுளை வணங்க கதம்பம் அல்லி
இறந்தவர்களைப் புதைக்க நாங்கள்
இங்கே இறக்கின்றோம்
சுதந்திரம் என்றுபேசும் சுயநலவாதியே
எங்கள் சுதந்திரம் எங்கே

இளைய பாரதம்.

எங்கு செல்கிறாய் என் இளையபாரதமே
நம் தேசத்தின் புகழ்மறந்தாய் விழிமனமே


அடிமைத் தளையை அறுத்தெடுக்க
ஆயிரம் தலைவர்கள் உயிரீந்தார்
விடுதலை வேள்வியின் விளக்கெரிக்க
வீடு மனையாள் நலம்மறந்தார்


கொடியின் மரபை காப்பதற்கே
கொட்டியக் குருதியில் தினம்நனைந்தார்
உறவுக் கொடியின் வேரறுக்கவா
உன்னைச் சுமந்து பெற்றெடுத்தார்


தேசத்தின் பெருமையை நினைப்பாயா
மோசத்தில் வீழ்ந்து கிடப்பாயா
கல்விச் சாலையிலே கலவரம் புரிந்தாய்
கலங்கி இருப்பாளே கருசுமந்த உன்தாய்


நாளைய பாரதத்தின் முதுகெலும்பே அறிவாயா
நாமிருக்கும் இடமெல்லாம் நற்பெயரை பெறுவாயா
விண்ணிலும் நம்கொடி பட்டொளி வீசுதே
மண்ணிலே அடிதடி விட்டொழி நல்லது


காந்தியப் பாதையின் சாந்தியத்தை அறிந்திடு
ஏந்திய ஆயுதத்தை அடுப்பெரிக்க தந்துவிடு
சுயநலத் தேரின் வடம்பிடிக்க மறுத்துவிடு
சுட்டெரிக்கும் சூரியனாய் தேசஇருள் நீக்கிவிடு


கல்லூரிச் சாலையா கலவர பூமியா
காரணம் யார்சொல் சாதியா மதமா
சட்டங்கள் வகுத்தாரே சமூகத்தின் நீதியாய்
சண்டையிட்டு மடியாதீர் நீதியறியா பேதையாய்


மானிடம் என்பது மகத்தான பிறப்பு
மாணவன் என்பவன் தேசத்தின் உயிர்ப்பு
பாரத தேசத்தின் பண்பட்ட சிறப்பு
பார்போற்ற வேண்டுமே அதுதானே பொறுப்பு



கொற்றவன் குடை இங்கு தாழ்ந்தது
குலமக்கள் நலன்களும் அழிந்தது
சீழ்பிடித்த மனங்களினால் விளைந்தது
கோல் பிடிக்க வேண்டிய குணமது


எழுதுகோல் பிடிக்க வேண்டிய இனமுனது
விழுதுபோல் நிலைக்க வேண்டிய மனமது
யார் மீது கோபமடா சொல்வாயா
பார்மீது எம்மினமே வெல்வாயா


உரிமைக்காக உண்மையில் நீபோராடு
உன் உணர்வுகளை உண்மையின் உறையிலிடு
சகோதரப் பண்பை உன்மனதிலிடு
சண்டாள குணத்தை நீவென்றுவிடு


எங்கு செல்கிறாய் என் இளையபாரதமே
நம் தேசத்தின் புகழ் மறந்தாய் விழி மனமே


சட்டங்கள் படித்திடச் சென்ற நீ
மரச்சட்டங்களை அல்லவா ஏந்துகிறாய்
சாதியின் பெயரால் மோதுகின்றாய்
சகோதரனைக் கொல்லவா வாழ்கின்றாய்


இயற்கை கூடஇயங்கிடச் சட்டமுண்டு
இளமனமே அறிவாயா அதைக்கண்டு
வளமான வாழ்வுக்கு வகுக்கப்பட்டது சட்டம்
வழிதவறிப் போகிறாயே இதுவா உன்திட்டம்


நாளைய பாரதத்தின் நம்பிக்கை நீயே
நடமாடும் மாணவப் பருவத்தின் தீயே
நல்வழிப் பாதையிலே இன்றுமுதல் நடைபோடு
நாளைய வரலாறு நமதென்று புகழ்பாடு

புன்னகை


இதழ் தோகை விரிகையில்
இதய மயில் ஆடுகிறது
இளமையும் கூடுகிறது


செய்கூலி இல்லை
சேதாரம் உண்டு
யாவரும் அணியலாம்


இந்த முகவரிக்கு
அனைத்துத் தபால்களும்
தாமதமின்றி பட்டுவாடா


வசீகரிக்க வாய்க்கப்பெற்ற
அர்த்தங்கள் ஆயிரமுள்ள
அழகியல் மொழி


உறவுப் பாலத்திற்கு
ஒப்பந்தமிலாமல் போடப்படும்
உடனடிப் பத்திரம்


வேதனைக் குளத்தில்
வீசிய வலையிலும்
வந்துவிழும் விசித்திரமீன்



தேசங்களின் கதவுகளையும்
நேசங்களின் கதவுகளையும்
வரையறையின்றி திறக்கும் சட்டம்


மன நோய்களை
பணம் ஏதுமின்றி
குணமாக்கிடும் மருந்து


மனச் சேர்க்கையினால்
வாய்ப்புகள் கிடைக்கும்போது
மலரும் வாய்ப் பூ



அணிந்தவருக்குக் கேடயம்
பிரிந்தவருக்கு விரயம்
நொடிப் பொழுதில் உதயம்


அவசரத்திற்கு அடகு வைக்கலாம்
அசலோடு திரும்பக் கிடைக்கும்
அதிசயக் கடன்


மழலை என்றால் விடை
மங்கை என்றால் வினா
மனிதம் என்றால் அன் பூ பு


திறந்துக் கொள்ளை அடித்தாலும்
காவல்துறை கைதுசெய்யாத
கண்ணியமான திருடன்


இதழ் கடிதம் பிரிகையில்
அன்புள்ள என்று சொல்லும்
முதல் செய்தி


மனக் காயங்களுக்கு
மருந்திடும் மென்மையான
மயிலின் இறகு


உள்ளக் களிக்கையை உடனுக்குடன்
அரங்கேற்றம் செய்யும்
நாட்டியக்காரி


மானாவாரியாக மலர்ந்தாலும்
மனதிற்கு மட்டுமே தெரிந்த
மர்மதேசத்து மகாராணி

பதங்கமாதல்

காதலில் மட்டுமே
சாத்தியம் இதயம்
பதங்கமாதல்

முத்தம்

இதழ்களின் மோதலால்
இனிமையான கச்சேரி
முத்தம்

புதிதாய் பிறப்போம்


புன்னகையை இதழ்களில் பூத்திருப்போம்
மண்பகையை மனங்களில் துடைத்தொழிப்போம்


பூக்களில் வண்டாகித் தேனேடுப்போம்
பாக்களால் விண்டேகி வான்துடைப்போம்


காற்றிடம் காதலின் நயம் படிப்போம்
ஆற்றிடம் நாணலின் மடிகிடப்போம்


பறவையின் சிறகாகி படபடப்போம்
புரவியின் உறவாகி புவிகடப்போம்


மழலையின் வடிவாக மனம் அமைப்போம்
குழலையும் யாழையும் குணம் அமைப்போம்


சிந்தனை உளிகளால் சிலைவடிப்போம்
நிந்தனை செய்தாலும் கலைபடைப்போம்



கவலை விறகுகளை அடுப்பெரிப்போம்
திவலைச் சூரியனாய் சுட்டெரிப்போம்



இதயக் கதவுகளைத் திறந்துவைப்போம்
உதய நினைவுகளை விருந்து வைப்போம்


எப்போது சுயநலத்தை நாம் மறப்போம்
அப்போது புதிதாய் நாம்பிறப்போம்

பறந்து விருந்து

பூட்டிவைத்த என்வீட்டில்
புகுந்துவிட்டான் ஒருதிருடன்
பூட்டை அவன் உடைக்கவில்லை
பொன்பொருளைத் திருடவில்லை


ஆடைமேலே ஆசைகொண்ட
அர்ப்பமான திருடன்போலும்
என்ஆடை அணிந்துவிட்டு
கலைந்து போட்டான் சேரவில்லை


அடுக்களையில் சிறுதடயம்
பாவம் அவனுக்கு பசிபோல
பாத்திரத்தை உருட்டிவிட்டு
புசிக்கவில்லை நல்லவேளை


வாசம் மட்டும் போதுமென்று
பாசத்தோடு விட்டுச் சென்றான்
நேசமுள்ள திருடன்போல
நெஞ்சத்தைத் தொட்டுவிட்டான்


நூல்படிக்கும் ஆர்வமுள்ள
நூதனமான திருடன்போல
நான்படித்த புத்தகத்தை
நான்குபக்கம் படித்திருப்பான்


தான் பிடித்த வாசம்தனின்
தன்மைதனை உணர்ந்திருப்பான்
நூல்படித்துச் சென்ற அவன்
அடுத்த வீட்டில் சமைத்திருப்பான்


போகட்டும் விட்டுவிட்டேன்
வேலையில்லா வெட்டிப்பயல்
ஆகட்டும் பார்க்கலாம்
அடுத்து வந்தால் கேட்டிடலாம்

எப்படி என்சமையல்