ஞாயிறு, 31 மே, 2009

வானம் வசப்படும்

எல்லையில்லா வானத்தில்
எழில்கோளம் நிறைந்திடவே
பிள்ளைநிலா துணைகொண்டு
பூகோளம் சுழன்றிடவே

செம்பரிதி ஒளியாலே
செம்மையான பூவுலகில்
செங்குருதி தான்வழிய
செழித்து வந்த மண்ணுலகில்


மனிதரெல்லாம் தழைத்து வந்தார்
மாண்புறவே நிலைத்து வென்றார்
புனிதரெல்லாம் பூத்துவர
பூவுலகில் புதுமை கண்டார்


கொடுமை கொண்டு
கோலாட்சி செய்துவந்த மன்னவரும்
கடுமைகண்டு கணப்பொழுதில்
மடிந்துவிட்டார் அன்னவரும்


அடிமையென தமிழினத்தின்
அடிவேரை அறுப்பவரும்
ஆரியனின் வழிவந்த
அரக்கன் என்று அறிவானா


கந்தக தனங்களின்
கற்பென்ற வெம்மையினால்
வெந்தன்று தணிந்ததே
மாமதுரை அழிந்ததே


எத்தனை கண்ணகிகளின்
எழில் இன்று வீழ்ந்தது
எரியவில்லை தென்தீவு
நீதி எங்கே ஒளிந்தது


பூமியே உனக்கு
பிளவுஒன்று வாராதா
பூபாலம் கேட்க வேண்டாம்
புதைந்துவிடு வானத்தில்


வனம் கூட வசப்பட
வாய்க்கவில்லை எங்களுக்கு
வானம் வசப்படும்
வார்த்தை மட்டும் இனிக்கிறது.

இமயம் பெரிதோ ?

தன்னம்பிக்கை விதைகளை
தனக்குள்ளே விதைத்தால்
முன்நம்பிக்கைகள் முகிழ்த்துவந்த
முன் கதைகளைப் பின்தள்ளி
விண்ணோக்கி நடைபோடும்
வீரமது விளைந்திட
மண்ணிலே நிலைபெற்ற
இமயம் பெரிதோ


ஊனமதைக் குறையென்று
ஊளையிடும் மாந்தருக்கு
வானம் வசப்படும்
வழிகள் பலஉண்டென்று
ஊமையான இசைக்கலைஞன்
உலகம் வென்ற பீத்தோவன்
உரைத்ததென்ன இமயம் பெரிதோ


உள்ளமதை உருக்குலைக்கும்
ஊனமதை உடுத்திவிட்டால்
உதயமதை என்னவென்று
உணர்வாயா உள்மனமே
வெள்ளமென கரைபுரளும்
உள்மனதை நெறிப்படுத்த
குள்ளமென உருவெடுத்த
இமயம் பெரிதோ

தமிழர் புத்தாண்டு

தமிழருக்குத் திருநாளாம் தரணியிலே ஒருநாளம்
உழவரெல்லாம் உளமார உவகையுற வரும்நாளாம்
உலகுக்கு உணவளித்த உத்தமர்கள் ஒன்றுசேர
பொங்கிவரும் கங்கைபோல் பொன்மனமும் குளிர்ந்துவர
பொங்கலெனும் திருநாளை போற்றிவைத்தார் பூவுலகில்
நிலமகளின் மேனியிலே வியர்வையோடு நீரிட்டு
குலமகளும் குலவைபாட விதைநெல்லைத் தூவிவிட்டு
மனம்மகிழ உழைத்திருப்பார் அறுவடைக்குக் காத்திருப்பார்
அறுவடையில் பூத்தநெல்லை ஆசையுடன் பொங்கவைப்பார்
ஆதவனின் முன்னிலையில் விளைந்ததெல்லாம் படையல்வைப்பார்
ஆநிரையும் வாய்நிறைய அமுதுபொங்கல் விருந்தளிப்பார்
உலகுக்கு உணவளிக்கும் உழவர்கள் மனம்நின்று
உதித்து வந்த தைதானே உழவருக்குப் புத்தாண்டு
உழவருக்குப் பின்னாலே உலகெல்லாம் செல்லுமென்றால்
தமிழருக்குத் தைதானே தரணியிலே புத்தாண்டு
மாதங்கள் பன்னிரெண்டு வகுத்து வைத்தார் முன்னின்று
சோகங்கள் கண்ணிரண்டு கலைந்தோடும் தை அன்று
நிலமகளை வணங்குகின்ற புவிபோற்றும் புத்தாண்டு
உளமாற ஏற்றிடுவோம் உழவர்தம் வழி நின்று

மனமெங்கும் மண்வாசம்

ஆடம்பரம் அலங்காரம் அனுதினமும் உல்லாசம்
மாடங்கள் மணிமகுடம் மண்மீது தினம்வேசம்

வானவரும் வந்தாலும் வதைக்கப்படும் வன்மோசம்
ஆனவரும் போனவரும் அடைவாரோ விண்தேசம்


காலம்வரும் கனிந்துவரும் கலங்கவில்லை கடல்தேசம்
ஞாலம்வரும் வேழம்வரும் கலைந்தோடும் நரிவேசம்


இருப்பதை இயன்றதை ஈந்தாலே புவிபேசும்
மறுப்பதை வெறுக்கின்ற மனதாலே மனநேசம்


மலர்கின்ற மலர்களின் மகரந்தம் மணம்வீசும்
புலர்கின்ற புல்லின்மேல் புன்னகைக்கும் பனிபேசும்


இடிக்கின்ற இருள்மழையும் இறங்கிவந்தால் மண்வாசம்
வெடிக்கின்ற வெண்பரிதி வெண்ணிலவின் ஒளிநீசம்


அசைந்தாடும் அலைகாற்றால் ஆழ்கடலும் அலைபூசும்
இசைந்தாடும் இளமனதில் இயல்பான கலைநேசம்


மங்கையவள் மலர்மொழியால் மயிலிறகாய் மணம்கூசும்
தன்கையவள் தளிர்மேனி தவழ்கையிலே தனிப்பாசம்


பொல்லாத பொய்நெஞ்சால் புவியாவும் குலநாசம்
செல்லாகிச் செரித்தாலும் செழித்துவரும் தமிழ்தேசம்