செவ்வாய், 28 ஜூலை, 2015

                                           ஆகாயம் சென்ற அக்கினிச் சிறகுகளுக்கு ஆத்மார்த்த அஞ்சலி
காலமானவரேஏழ்மையானக் குடிபிறந்து
ஏற்றம்கண்ட எளியவரே
வாழ்வாங்கு வாழ்ந்திங்கு
விண்ணுலகம் சென்றவரே

ஆல்போன்றுத் தழைத்திங்கு
அரும்பணிகள் செய்தவரே
பால்வடியும் முகத்தவரே
பசுவானக் குணத்தவரே

நீள்வானம் படித்தவரே
நெடுஅம்பு விடுத்தவரே
தாழ்வான எண்ணங்களை
தவிடாக்கத் துடித்தவரே

பிள்ளைகளின் மனம்கவர்ந்த‌
பெருங்கனவுக் கொண்டவரே
வெள்ளைநிலா மேனிதீண்டி
விஞ்ஞானம் விண்டவரே

அக்கினியாய்ச் சிறகுபூத்து
அதிசயமாய் நின்றவரே
முக்கனியாம் வள்ளுவத்தை
முடிந்தவரைத் தின்றவரே

கொக்கரித்த நாடுகளின்
கொடுவாயை அடைத்தவரே
பொக்ரானில் அணுகுண்டைப்
பொடிவைத்து வெடித்தவரே

மக்களின் அதிபதியாய்
மணிமகுடம் தரித்தவரே
மானங்கெட்டத் தலைவர்களின்
முகத்திரையைக் கிழித்தவரே

பக்கபலம் துணைவெறுத்து
பதக்கங்களைக் குவித்தவரே
நிற்பதற்கும் நேரமின்றி
நெருப்பாகித் தகித்தவரே

மக்குகின்ற காலம்வரை
மாணவராய் உழைத்தவரே
எக்குலமும் போற்றுகின்ற
எடுத்துக்காட்டாய் நிலைத்தவரே

திக்கெல்லாம் புகழ்பரப்பித்
தமிழருல் மேலானவரே
எக்காலமும் இயம்பிடுமே
அப்துல் காலமானவரே

ஞாயிறு, 2 நவம்பர், 2014

வாக்குறுதி
வாக்குறுதி


கொடுப்பது மட்டுமல்ல‌
நிறைவேற்றப்பட‌ வேண்டிய‌
நிதர்சனம்


அரசியல் வா(வியா)திகள்
கிண்டிடும் ஆ(கா)(தா)ய அல்வா

காலங் கடத்தும்
கடன்காரர்களின்
கண்ணீர்க் கடிதம்

பணம் படைத்தவர்களின்
பகுதிநேரப் பாசாங்கு

குணம் கொண்டவர்களால்
ஏற்றப்படும் குன்றிலிட்ட‌
விளக்கு

காயப்பட்ட மனங்களுக்கு
நாவினால் தடவப்படும்
நக்கீர மருந்து

கொடுப்பவர்களுக்கு மட்டுமே
தெரிந்த குழப்பமான‌
குர(லி)ளி வித்தை

நம்மியவர்கள் மட்டும்
எதிர்பார்க்கும் நாளைய‌
ராசிபலன்

இதயத்திலிருந்து
இயம்பவில்லை என்றால்
ஈயம் பித்தளைக்குப்
பேரீச்சம்பளம்.

வெள்ளி, 31 அக்டோபர், 2014

புகழ்


புகழ்

ஆண்டவன்முதல்
மாண்டவன்வரை
அடைய நினைக்கும்
அதிசய இலக்கு

வெற்றிக் கோப்பைகளில்
ஊற்றப்படும் மயக்கம்தரும்
மதுபானம்

தலைக்கு ஏறிவிட்டால்
இறக்கமுடியாத இன்னல்தரும்
தலைச்சுமை

இதயகளுக்கு இதமளிக்கும்
என்கிறமட்டும் இன்பம்தரும்
இனிமையான மருந்து

தன்னைத்தானே என்றால்
தவிர்க்க வேண்டிய
தொழுநோய்

முகத்துதி பாடுபவர்கள்
முன்னேற்றத்திற்குப் போடும்
முறையற்ற மூலதனம்

கொண்டதனைக் கொடுத்து
கோமாளிகள் செய்யும்
வினோத விளம்பரம்

களங்கப்படாதவரை
காலங்கள் போற்றும்
கற்புக்கரசி.


அறிவு
அறிவு
கால்நடைகளை
மேல்நடைகளாக்கிய‌
காலதேவனின்
மந்திரக்கோல்
பகுத்தறியத் தெரிந்து
படைப்புகள் போற்றவேண்டிய‌
பண்பட்ட தெய்வம்
எட்டும்வரை வகைபடுத்தப்பட்ட‌
ஏற்றம்தந்த ஏணி
அனுபவச் சாலையின்
ஆற்றல்மிகு ஆசான்
ஆசைமேகங்களால்
அடிக்கடி மறையும்
அழகிய அம்புலி
உச்சத்தை எட்டிவிடின்
ஒளிவெள்ளம் பாய்ச்சும்
ஒப்பற்றச் சூரியன்
சிந்தனைக் குளத்தினில்
செழுமைகள் சேர்ந்தால்
அன்றன்று மலரும்
அபூர்வ‌ ஆம்பல்
அன்பென்ற நாரில்
அழகாகக் கோர்த்தால்
என்றென்றும் வாடா
எழிலான மாலை

செவ்வாய், 28 அக்டோபர், 2014

பால்விலை உயர்வுபால் விலை உயர்வு
கட்டிப்போட்ட கொட்டகையில்
கால்நீட்டிப் படுத்திருந்தோம்
கன்னுக்குட்டி கயிற்றவிழ்க்க‌
கணப்பொழுதில் எழுந்துநின்றோம்
வாட்டமில்லாக் கொட்டகையில்
வால்நீட்ட முடியலையே
கூட்டமாகக் கிளப்புனீங்க‌
குதுகுலமா புறப்பட்டோம்
வயல்வரப்பக் காட்டூவீங்க‌
வக்கனையா மேயாலாமுனு
வாயில்லாச் சீவனுங்க
வரிசையாக வந்தோங்க‌
சாலையில போகையில
சத்தியமாத் தெரியாது
மறியல் செய்யப்போறோமுனு
மனுசப்பய சொல்லலையே
விலையேத்த வேணுமுனு
விண்ணதிரக் கத்துனீங்க‌
கலயத்துலக் கரந்தபால‌
சாலையில ஊத்துனீங்க‌
பசியால வந்தகன்னும்
பாலப்பாத்து ஏங்குது
பச்சப்பிள்ள பாதிபேரு
பாலில்லாம தூங்குது
பாலோடு தண்ணிசேத்து
பணங்காசு சேத்தீங்க
பாடையில போகும்வரை
பொருளாதாரம் பார்த்தீங்க‌
ஒரேஒரு கேள்விமட்டும்
உங்ககிட்ட கேட்கிறேன்
என்பால விலையேத்த
நீங்களெல்லாம் யாருடா
கட்டிலில படுத்தாலும்
கட்டையில போனாலும்
கடைவாயில் ஊத்துற‌து
கடைசியாகப் பாலுடா.


 இவர்களெல்லாம்.


வணிகக் கூட்டத்திற்கு
வாசல்களைத் திறந்துவைத்தார்
தனியே பிரித்தாண்டு
தாழ்பணிந்து விருந்துவைத்தார்

மானவீரர்களை காட்டிவித்து
மனம் மகிழ்ந்தார்
ஈனப்பிறவிகளாய் இழிபிறப்பாய்
தொடர்கின்றார்

கொட்டிவைத்தச் செல்வங்களை
கொள்ளையிட்டுச் சென்றவர்கள்
விட்டுவைத்த வித்துக்களே
இத்தரையின் சத்ருக்களே

ஊழலென்னும் கறைபிடித்து
உள்ளமெல்லாம் சீழ்பிடித்து
காலமெல்லாம் பதுக்கிவைத்தீர்
கருப்புப்பணம் வங்கியிலே

காய்ப்பதெல்லாம் கனியுமென்று
இளவமரக் கிளிபோல‌
மாற்றமதை வேண்டியிங்கு
மையதனை விரலிலிட்டோம்

வாய்ப்பந்தல் வீரர்களும்
வரலாற்றுச் சூரர்களாய்
வாய்ப்பதனைப் பயன்படுத்தி
அரியணையில் ஏறிவிட்டார்

வாக்குறுதி தந்தவர்கள்
வாய்மொழிந்த வார்த்தையென்ன
ஆக்கமெல்லாம் செய்திடவே
அகழ்ந்திடுவோம் கருப்புப்பணம்

ஆச்சர்யமாய் இருக்கிறது
ஆள்பவரின் ஆய்வறிக்கை
கூச்சமின்றிக் குழப்புகின்றார்
கோடிகளின் வரிவிலக்கை

காக்கின்ற பூதங்களின்
கிணறுகளை வெட்டினராம்
மூக்குமட்டும் தெரிந்ததினால்
முரசறிந்தார் மூன்றுபேரை

முக்கியமாய் புள்ளிகளை
முடிந்தவரை தேடினராம்
சிக்கியவர் சில்லரைதான்
சிகரங்களைக் காணலையாம்

பார்க்கும்வரை பதுக்கிவைக்க‌
பாலகரா அவர்கலளெல்லாம்
யார்க்குமிங்கே தெரியுமடா
அரசியல்வாதி இவர்களெல்லாம்.

செவ்வாய், 21 அக்டோபர், 2014
      ஒளிவிளக்கு


     இல்லாமை இருள்நீங்கி
     இல்லத்திலே பொருள்நிறைய‌
     கல்லாமைக் காரிருளில்
     கல்வியெனும் மழைபொழிய‌


     வெள்ளாமை வயல்நிறைய‌
     விஞ்ஞானம் வானுயர‌
     பொல்லாமை நீங்கிடவே
     பூமியெங்கும் செழித்திடட்டும்
    
    
     கொல்லாமை நன்றென்னும்
     கொள்கையினைப் பற்றிடவே
     வல்லானைக் கண்டிடலாம்
     வானுயரச் சென்றிடலாம்


     கள்ளாமை அரக்கனெனும்
     கசடுகளும் அழிந்திடவே
     இந்நாளில் ஏற்றிடுவோம்
     இன்பமெனும் திருவிளக்கு

     எந்நாளும் எரிந்திடட்டும்
     இதயமதில் ஒளிவிளக்கு 


    அனைவருக்கும் என் இதயங்கனிந்த‌
    தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துகள்
                      வாழ்க வளமுடன்.

சனி, 18 அக்டோபர், 2014
குழந்தையுடன் ஒருநாள்


புலருகின்ற நாளெல்லாம்
புன்னகையாய் கழிந்திருக்க‌
வளருகின்ற குழந்தையுடன்
ஒருநாளைக் களி(ழி)த்திருப்போம்

இயந்திரமாய் மனிதரெல்லாம்
இயங்குகின்ற வேளைதனில்
உறங்கிடவும் நேரமின்றி
ஓடிஓடி தினம்களைத்தோம்

இல்லறத்தின் மகிழ்சிக்காக
இயன்றளவு நாம்உழைத்தோம்
உள்ளத்திலே ஒருநாளும்
மகிழ்வுண்டா சொல்லிடுவீர்

கள்ளமில்லாக் கடவுளினைக்
கலியுகத்தில் கண்டிடலாம்
வெள்ளையுள்ளம் கொண்டதினால்
குழந்தைகளைச் சொல்லிடலாம்

பிள்ளைநிலா கண்திறக்கும்
பிரியமான வேளைதனில்
மழலையது வாய்திற‌ந்து
அம்மாவை அழைத்திருக்கும்

குவளையத்தில் கொடுமையதாம்
பொல்லாத அடிமையதாம்
அவல‌த்திலே பெருஅவலம்
அடிவயிற்றுப் பசியதுவாம்

அதையறிந்து அம்மாவும்
அன்புடனே அமுதளிப்பாள்

கும்பியது நிரம்பிவிடின்
குதூகளிக்கும் குழந்தையது
எம்பிஎம்பிக் குதித்திடுமாம்
எமனைக்கூட மிதித்திடுமாம்

கோகுலத்தில் கண்ணனவன்
கோமுகியைக் கொன்றதுபோல்
தன்பசியும் அடங்கியதும்
தானாகச் சிரித்துவிடும்

கடைவாயில் வழிந்திருக்கும்
கற்கண்டுப் பாலமுதை
அடடடடாக் கள்வனென‌
அன்போடு துடைத்திடுவாள்

படைதிரட்டும் மன்னவரும்
பால்முகத்தைக் கண்டுவிடின்
உடைவாளை உருவிடவே
ஒருகணமும் திகைத்திடுவார்

கடைக(ன்னி)ண்ணிப் பாவையரின்
கனிவாயின் இதழ்ச்சுவையும்
மழலையதன் சிரிப்பொலியில்
மன்றாடித் தோற்றுவிடும்

குழலிசையும் யாழிசையும்
இனிதில்லை இங்கேதான்
மழலையது வாய்திறந்தால்
மகிழ்ச்சியது அங்கேதான்

பொக்கைவாய் பூபூக்கும்
பொதிகை மலைச்சாரலெனெ
தக்கைவாய் தமிழ்பேசத்
தாயுள்ளம் களித்திருக்கும்

நண்பரென்றும் பகைவரென்றும்
நாள்கிழமை இதுவென்றும்
கண்திறந்த நாள்முதலாய்
கடவுளுக்குத் தெரியாது

உள்ளதனைக் காட்டுகின்றக்‌
கள்ளமில்லாக் கண்ணாடி
பிள்ளைகளே இவ்வுலகில்
கடவுளுக்கும் முன்னோடி

படைத்தவனும் காத்தவனும்
பாருலகை அழித்தவனும்
பட்டபாடு அறிவீரா
அனுசுயாவைத் தெரிவீரா

பதிவிரதைப் பத்தினியாம்
அனுசுயா தேவியரைப்
பரதேசிக் கோலங்கொண்டு
அனுகினர் மூவருமே

ஆடையின்றி அமுதூட்ட
அழைத்தஅந்த மூர்த்திகளைக்
கீர்த்தியினால் குழந்தகளாய்
மாற்றிவிட்டாள் தந்திரத்தால்

கண்கலங்கி தேவியர்கள்
மன்றாடிக் கேட்டதினால்
குழந்தைகளைக் கடவுள்களாய்
கனிவோடு மாற்றிவிட்டாள்

படைத்தவனும் தன்நிலையை
மறக்கவைத்த நிலையதுவே
பாருலகில் பெருமகிழ்ச்சி
மழலையெனும் பெருமகிழ்வே

கையசைத்துக் காலசைத்துக்
கொஞ்சும் மொழிபேசிவிடும்
கைபிசைந்த சாதமதை
சந்தனமாய் பூசிவிடும்

பிஞ்சுவிரல் அஞ்சுகமாய்
நெஞ்சத்திலே தீண்டிவிடும்
வஞ்சிகளின் மஞ்சமது
வாசல்படித் தாண்டிவிடும்

கொஞ்சமல்ல குழந்தையின்பம்
கோடியுண்டு சொல்வதற்கு
நெஞ்சம் விண்டுபோகுதிங்கே
நீதிஎங்கு சென்றிருக்கோ

பஞ்சமென்று குழந்தைகளைப்
பரிதவிக்க வைப்பவரும்
வஞ்சங்கொண்டு குழந்தைகளை
கொன்றொழிக்கும் பாவிகளும்

ஒன்றிணைந்த கொடுமையடா
ஈழத்து நிலமையடா
கருவறுக்க ஒன்றிணைந்த
கருங்காலிக் கூட்டங்களே

நீபெற்ற பிள்ளைகளை
ஒருநிமிடம் நினைப்பாயா

இசுரேலும் ஆப்கானும்
இதுகாறும் மட்டுமல்ல‌
புவியெங்கும் பூக்களென்னும்
குழந்தைகளைக் கொய்யாதீர்

தீச்சுடராய் திருவிளக்காய்
தழைத்துவரும் தலைமுறையை
தீக்குச்சி அடுக்குகின்ற‌
தவறிழைக்கச் செய்யாதிர்

குழந்தையென்னும் தெய்வங்களே
இவ்வுலகில் வெகுமானம்
குழந்தைகளின் சம்பளந்தான்
மறக்கவொண்ணா அவமானம்

மனஉளைச்சல் கொண்டவரும்
மருத்துவரைக் கண்டவரும்
பணம்பெருத்து உடல்கொழுத்து
பெரும்புள்ளியாய் நின்றவரும்

தினம்உழைத்து உடல்இளைத்து
துரும்பாகிப் போனவரும்
மனம்இனிக்க வேண்டுமென்றால்
மழலைகளைக் கொஞ்சிடுவீர்

புன்னகையாய் ஒருநாளைக்
குழந்தையுடன் நாம்களித்தோம்
உள்ளமதைக் குழந்தையாக்கி
வரும்நாளில் மகிழிந்திருப்போம். ‌‌

சொந்தம்


கடலுக்குச் சொந்தமெனக்
கரைஅலையைச் சொல்லலாமா
படகுக்குச் சொந்தமெனப்
பாய்மரமும் எண்ணலாமா

புடலுக்குச் சொந்தமெனப்
புவியதனைச் சொல்லலாமா
படலுக்குச் சொந்தமெனப்
பாகற்காய் எண்ணலாமா

குடலுக்குச் சொந்தமெனக்
கொடும்பசியைச் சொல்லலாமா
திடலுக்குச் சொந்தமெனத்
திரள்வோரும் எண்ணலாமா

மடலுக்குச் சொந்தமென
மனமதனைச் சொல்லலாமா
குடமுழுக்குச் சொந்தமெனக்‌‌
கோபுரங்கள் எண்ணலாமா

கடவுக்குச் சொந்த‌மெனக்
காலமதைச் சொல்லலாமா
நடவுக்குச் சொந்தமென‌
நாற்றாங்கால் எண்ணலாமா

உடலுக்கு உயிர்கூட
ஒருநாளில் சொந்தமில்லை
உடனிருக்கும் உறவுகளே
உங்களுக்கு எந்தநிலை

கடனாக இவையாவும்
கடவுளவன் தந்தவினை
அடப்போடா காத்திருக்கு
அறுவடைக்கு இந்தத்தினை.அடைகாத்தாய்


உடற்சூட்டை உள்ளிறக்கி
அடைகாக்கும் உயிர்கோழி
இடர்பாட்டை எதிர்கொண்டு...
எழுச்சிகண்டாய் நீ வாழி


இருபத்தியொரு நாளில்
குஞ்சுகளைப் பொரித்திடுமாம்
இருபத்தியொரு நாளில்
மீண்டுவந்தாய் சரித்திரமாய்

ஊழலென்னும் வழக்கிற்கா
உன்னையவர் அடைத்துவைத்தார்
உத்தமரா உண்மையிலே
உன்மேலே வழக்குரைத்தார்

காலமம்மா கலங்காதே
கலிகாலம் அப்படித்தான்
தங்கத்தையே தரம்பார்க்க‌
உரசிடுவார் இப்படித்தான்

புடம்போட்டத் தங்கமென‌
புதுப்பொழிவாய் வந்திடுவாய்
தடம்பதித்துத் தரணியிலே
தங்கத்தாரகையே மின்னிடுவாய்.


புதன், 6 நவம்பர், 2013

மங்கள்யான்

செவ்வாயால் தோசமென்று
செப்புகின்ற சோதிடமும்
அவ்வாயில் அமைத்ததன்று
அதற்குமொருப் பரிகாரம்

கொவ்வாயாய்ச் சிவந்துநிற்கும்
குமரிகளும் கோடியுண்டு
கொய்வதற்குக் குமரரில்லை
கொடுமையடா வகுத்தஎல்லை

இருவருக்கும் செவ்வாயா
இணைத்திடுவார் மங்களமாய்
இதுகாறும் ஒலித்தக்குரல்
இதயத்திலே வெங்கலமாய்

செவ்வாயில் நாள்குறித்துச்
செலுத்திவிட்டார் விண்கலத்தை
சேமமுறச் சென்றடையும்
செப்பிடுவார் நம்பலத்தை

செவ்வாயில் பொருள்வாங்கச்
செல்வமெல்லாம் பெருகிடுமாம்
செவ்வாயில் சென்றுவாங்கச்
சந்த‌திகள் மருகிடுமாம்

மங்களமாய்ப் பெயர்வைத்து
மண்ணுலகம் தாண்டிவிட்டோம்
மதுசூதனன் திருவடியில்
மண்டியிட்டு வேண்டிவிட்டோம்

நேசமென்று ஒன்றிருந்தால்
நெருங்கிடலாம் எவ்வாயும்
சுவாசம்வேண்டிக் காத்திருக்கு
சுத(ம)ந்திரமாய் செவ்வாயும்

வாசம்செய்யச் சென்றிடுவோம்
வான்வெளியில் தோழர்களே
தோசமென்று ஒன்றுமில்லை
துரத்திடுவோம் வீணர்களை

(செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஓரையில் செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் என்ற செவ்வாய் விண்கலம் அனுப்பப்பட்டது வாழ்த்துகள் மெய்ஞான விஞ்ஞானிகளே)