புதன், 30 டிசம்பர், 2009

பிறப்பு.




இறப்பிற்கும் சிறப்பிற்கும்
திறக்கப்பட்ட முதல் கதவு


இல்லற வினாவின்
விடை தெரியாத விடை


பூமிப்பந்தை உதைக்க
வந்த மனிதசக்தி


அனாதை இல்லங்களுக்கும்
ஆரம்பிக்கப்பட்ட திறப்பு விழா


வாடகைத் தாயின் வசூலால்
குப்பைத் தொட்டிக்கும் கிடைத்த வட்டி


இல்லாமையை இனிப்பாக்கும்
இனிமையான வரவு


ஆதாயம் படைத்தவருக்கு
ஆண்டுதோறும் கொண்டாட்டம்


வறுமைக்கும் சிலசமயம்
வாய்ப்புகள் கொடுக்கும் பெருமை


மந்தை மந்தையாய் பிறந்தாலும்
விந்தையாகவும் சில மனிதநேய பிறப்புகள்.

சிங்கை .


சிங்கை என்பது போதிமரம்
சிருங்காரம் நிறைந்திட்ட சீர்நகரம்


உழைப்பினால் உயர்ந்திட்ட அலைநகரம்
உயர்வுக்கு ஏற்றத் தலைநகரம்


பலஇன மொழி நிறைந்திட்ட கலைநகரம்
பாட்டாளி மக்களின் உழை(லை)நகரம்


புதுமைக்குப் பெயர்போன புதுநகரம்
வறுமைக்கு விடை சொல்லும் வளநகரம்


பூச்சோலை நிறைந்திட்ட பூ நகரம்
பாச்சோலை நிறைந்திட்ட பா நகரம்


தமிழுக்கு இடம் தந்த தமிழ்நகரம்
தரணியில் உயர்ந்திடும் தளிர்நகரம்


வணிகச் சந்தையினால் பணநகரம்
வளர்ந்து வரும் நாடுகளுக்கு முன்னுதாரணம்

வாய்ப்பிருந்தால் நீங்கள்
ஒருமுறையேனும் வரவேண்டும் .

வரப்பிரசாதம்.


தவங்கள் வேண்டி தனிமையில் தனித்திருந்தேன்
தரிசனம் கிடைத்ததால் தவம் கலைந்தேன்


புன்னகை இதழ்மலர பூரித்திருந்தேன்
பூவாய் மொழிகேட்டு தினம் மகிழ்ந்தேன்


குறுநகைப் பார்வையில் குதுகளித்தேன்
கூந்தல் போர்வையில் துயில் களைந்தேன்


இதழ்வழித் தேனில் நனைந்திருந்தேன்
இளமையைப் பரிமாற உயிர்த்தெழுந்தேன்


வசந்தத்தின் வாசலை அடைந்திருந்தேன்
வளமெல்லாம் பெருகிட வாழ்ந்திருந்தேன்


மெளனமாகிப் போனதால் உயிர்இழந்தேன்
வாழ்வியல் அர்த்தத்தை இன்றுணர்ந்தேன்


சுகமானது மட்டுமே சுகப்பிரசவம் அல்ல
வலிகள் கூட வரப்பிரசாதம்தான்.

புதன், 23 டிசம்பர், 2009

கடவுள் .

இருக்கிறது இல்லை
இன்றுவரை நடக்கும்
இ(ம)றை விவாதம் .


அன்பென்ற படகினால்
மட்டுமே கடந்திடும்
அற்புதக்கடல் .


கருணை உணர்வினால்
கண்களைத் திறக்கும்
களங்கமில்லா ஊற்று.


பக்திப் போர்வைக்குள்
பதுங்கிக் கொண்டிருக்கும்
தத்துவ ஞானி.


ஏழைகளின் சிரிப்பில்
பூத்துக் குலுங்கும்
புனித மலர் .


கடந்து உள்ளே
செல்பவர் மட்டும்
அறிந்திடும் காரிய
ச(மு)க்தி.


கலவரங்களுக்குக் காரணமான
களங்கமில்லாத காலத்தின்
காரணி .


அறிந்திடத் துணிபவருக்கு
மட்டுமே வாய்த்திடும்
அரூபமான காட்சி .


உதவிடும் குணத்தில்
உலவிக் கொண்டிருக்கும்
உன்மத்தன்.


தூய்மை உள்ளங்களில்
குடிகொண்ட தொலைந்திடாத
இன்பம் .

பள்ளிக்கூடம்.

இளமைப் பட்டாம் பூச்சிகள்
சிறகுகள் விரிக்கும்
வ(எ)ண்ணமிகுத் தோட்டம் .


அறிவை விருத்தி
செய்யும் ஆற்றல்மிகு
அனுபவச் சாலை .


ஒழுக்கம் உயர்வைப்
போதிக்கும் உன்னதக்
கலைக்கூடம்.


நாளைய தலைமுறைகளை
நடவு செய்யும்
நம்பிக்கை வயல்கள் .


கல்விக் கடவுளை
கண்களுக்குக் காட்டும்
கருணை ஆலயம் .


வியாபாரச் சந்தையாகவும்
மாறிவிட்ட விந்தைமிகு
விற்பனை .

வியாழன், 3 டிசம்பர், 2009

சோ(ஆ)று

மண்ணில் பூத்த
மணிநீர் இந்த சோறு
மானிட வாழ்வில்
மாபெரும் வரலாறு


நிலவு காட்டி
அன்னை ஊட்டிய
நிலாச் சோறு


நினைவு காட்டி
தந்தை ஊட்டிய
பலாச் சோறு


பால்ச்சோறு தயிர்சோறு
நெய்ச்சோறு இருப்பவர்
வாழ்வில் பலநூறு



கண்ணீரு செந்நீறு
கால்வயிறு இல்லாதவர்
வாழ்விற்குக் காரணம்யாரு



மனைவி உண்ட
மண்சோறு மணிமேகலை
கண்ட மந்திரச்சோறு

அரியும் சிவனும்
இணைந்த சோறு
அரிதாகி வருகிற
அவலத்தைப் பாரு


சோமாலியாவிலும்
ஓடியதோர் ஆறு
சோகங்கள் நிறைந்த
பஞ்சத்தின் ஆறு


பஞ்சங்கள் மறைவதற்குப்
படைக்கப்பட்ட ஆறு
மஞ்சத்திலே திளைத்திருந்தால்
மகிமை புரியாது


பாலாறு தேனாறு
பலப்பல ஆறு
காணாமல் போனது
யார்செய்த கோளாறு



வைத்த கை எடுத்ததால்
வைகை ஆறு
வறண்டு போய்
வடிக்கிறது கண்ணீறு


கா விரிந்து ஓடியதால்
காவிரி ஆறு
கலகத்திற்குக் காரணமான
கானல் நீறு


வடக்கிலே ஓடிவரும்
மூவாறு வற்றாது
வலம்வந்த வானாறு
நாகரீக நலப்பாட்டால்
நலிந்ததைப் பாரு


நதிகள் இணைப்பை
நவில்ந்தவர் நம்ம
பாரதியாரு

ஆறில்லா ஊருக்கு
ஆழகு பாழ் என்பது
ஔவை மொழி


சோறில்லா ஊருக்கு
சுகமில்லை என்பது
சோகத்தின் வ(ஒ )லி .

செவ்வாய், 1 டிசம்பர், 2009

தியாகம் .

தன்வாழ்வை இரையாக்கி
நடக்கின்ற யாகம்
தளராமல் குறைபோக்கி
சுரக்கின்ற வேகம்


கண்ணீரைத் தனதாக்கி
கடக்கின்ற மேகம்
செந்நீரைப் புனிதாக்கி
சிறக்கின்ற தேகம்


தமக்கெனவே உரித்தாக்கி
பிறக்கின்ற சோகம்
பிறர்கெனவே துயர்போக்கி
கிடைக்கின்ற யோகம்


எந்நாளும் நினைவாக்கி
வளர்கின்ற மோகம்
சொன்னாலும் மனம்தாக்கி
கிளர்கின்ற ராகம்


நல்வாழ்வை உரமாக்கி
செழிக்கின்ற போகம்
இல்வாழ்வை மரமாக்கி
இனிக்கின்ற பாகம்


யாவரையும் உறவாக்கி
கரைகின்ற காகம்
ஊணுயிரை நீராக்கி
நிறைகின்ற தாகம்

செய்தவருக்கு உயிராகி
நிலவுகின்ற அகம்
உய்தவருக்கு பெயராகி
உலவுகின்ற சுகம்


மனிதருக்கு மருந்தாகி
மகிழ்கின்ற தவம்
மாண்புகளில் சிறந்ததாகி
மலர்கின்ற தியாகம் .

உலகியல் வெப்பம் .


உலகியல் வெப்பத்தை
உலகமெல்லாம் உரைத்திடவே
அழகியல் மாற்றத்தால்
அழிந்துவரும் பூமியில்


நிலவியல் தேற்றத்தில்
நிபுணத்துவம் பெற்றவரும்
உளவியல் மாற்றத்தால்
உணர்ந்துவிட்டார் இப்பொழுது


அலைகடலின் நீருயர
அழிவைநோக்கி மாலத்தீவு
விலைபலவும் கொடுத்தோமே
வேதனைக்கு ஏதுதீர்வு


கலைபலவும் தான்வளர
மலைபலவும் மண்உடைத்தோம்
சிலைபலவும் செய்துவித்தோம்
சிந்தைகளால் மலைகொய்தோம்


உலைபலவும் அமைத்துவைத்து
உயிருக்குலை தினம்வைத்து
கொலைபலவும் புரிகின்றோம்
கொதிக்காதா இந்தபூமி



முல்லைக்குத் தேர்ஈந்த
முன்னோனும் இன்றிருந்தால்
முழம்முல்லை மூன்றெண்டா
விலைபேசி விற்றிருப்பான்


இயற்கையின் கொடியிலே
இதயத்தைக் காயவைத்தால்
செயற்கையெல்லாம் ஓடிவிடும்
செழும்பசுமை வேர்தழைக்கும்


வளமைமிகு வாழ்வென்றால்
வசந்தங்கள் வந்துசேரும்
வாழ்வுமட்டும் போதுமென்றால்
வளம்அழிந்து பார்மாளும்


சூடாகித் தெரித்தானே
சூரியனும் சிதறுண்டு
சுற்றிவரும் பூமியும்
சூடானால் பிளவுண்டு


காடாகிப் போனமண்ணில்
காணவில்லை பசுமையின்று
மேடாகிப் போகிறது
மேகம்கூட நீர்வறண்டு


காத்திடுவோம் தலைமுறைகள்
காலமெல்லாம் பசுமைகாண
பூத்திடுவோம் பசுமையாக
பூவுலகம் புதுமைகாண .