திங்கள், 13 டிசம்பர், 2010

பயணம் .

பொள்ளாச்சிப் பேருந்தில்
போதுமான கூட்டமில்லை
தேய்ந்துபோன இருக்கையில்
தெய்வம்வந்து அமர்ந்தது

புறப்பட்டப் பேருந்தில்
புலம்பல்கள் ஏராளம்
கைத்தொலைபேசியில்
கடலைகள் தாராளம்

மனிதருக்கு மட்டுமே
முழுக்கட்டணமாம்
குட்டியான தெய்வங்களுக்கு
குறைந்த கட்டணம் மட்டுமே


மலிவுக்கட்டணம் என்றாலும்
மடியில்தான் அமரவேண்டுமாம்
நடமாடும் தெய்வத்திற்கு
இருக்கை பிடிக்கவில்லை



திரும்பிய தெய்வமது
திருக்கையால் தீண்டியது
துன்பமான பயணத்திலும்
இன்பமாகச் சிரித்தது



தெய்வத்தை பெற்றவர்கள்
திரும்பிக்கூட பார்க்கவில்லை
தொடுவதும் பின்முகத்தை
மூடுவதுமாய் புன்னகைபூரித்தது


களைத்துப்போன தெய்வமது
கண்ணுறங்கிப் போனது
தெய்வத்திற்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை மனிதனாவோமென்று



மனிதனாகிப் போனாலும்
தெய்வங்கள் தெரியாமல்
வந்துகொண்டே இருக்கிறார்கள் .

மண்வீடு

கரையான் புற்றெடுக்க
கருநாகம் குடிபுகுந்து
இரையாகும் கரையானின்
இடர்பாடு தெரிவதில்லை


தரையாவும் தடம்பார்த்து
தன்எச்சில் குழைத்தெடுத்து
குறையேதும் இல்லாமல்
கோபுரமாய் கட்டிடுமாம்


மண்வீடு ஆனாலும்
பொன்வீடு போலிருக்கும்
புணல்வந்து புகுந்திடினும்
அணல்போல உள்ளிருக்கும்

திரைகூட செலுத்திடாமல்
திருடனாக உட்புகுந்து
பறைசாற்றும் தன்பெயரை
பாம்புப்புற்று என்றுசொல்லி


உழைப்பேதும் இல்லாமல்
உரிமையாக்கும் அரவம்போல
பிழைப்பார்கள் சிலபேர்கள்
பிறர்மனையை கவர்ந்துவாழ .

செவ்வாய், 5 அக்டோபர், 2010

மனிதம்



நதிமூலம் தெரியாத
பிரம்ம ரகசியம்
நகலாக்கல் குழந்தையா
நாகரீக அதிசயம்


குலமகளும் பெற்றிடுவாள்
குலம்தளிரக் குழந்தை
குழாய்களில் கருவளரும்
கலியுகத்து விந்தை


எந்தையும் நுந்தையும்
தேவையில்லை இதற்கு
சந்தையிலே விற்கவரும்
சந்ததிகள் சரக்கு


வணக்கத்திற்கு உரியது
வாழ்வளித்த கருவறை
வாடகைக்கு வந்ததே
இதுஎன்ன வாழ்வுமுறை


பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடைப்பட்ட வாழ்வு
பிறப்பைவைத்து நடக்கிறதே
பித்தலாட்டப் பிழைப்பு


சுகப்பிரசவம் என்பது
சுகமான பிறப்பு
சுயநல வாதத்தினாலும்
கத்திவைத்து அறுப்பு


இதையும் தாண்டி
எட்டிப்பார்த்தோம்
தாய்வழியே பூமி
கலயுகத்திலும் வாழ்கிறது
சில மருத்துவச்சாமி


சிந்தித்து செயல்படுங்கள்
மனிதகுல பிரமாக்களே
சிரம்தாழ்த்தி வணங்கிடுவோம்
நீங்கள்கூட அம்மாக்களே


மகத்துவம் நிறைந்தது
மனிதகுலப் பிறப்பு
மண்ணிலே மனிதம்வளர
மருத்துவரும் பொறுப்பு .

திங்கள், 4 அக்டோபர், 2010

தாஜ்மகல் .



வெள்ளைப் பட்டுடுத்தி
வேய்ந்துவைத்த கூரையென
கொள்ளை அழகெல்லாம்
கொட்டிவைத்த பெட்டகமாய்

முல்லைக் கொடியிடையாள்
மும்தாசு நினைவாக
வெள்ளியை விதைத்ததுபோல்
வேந்தரவர் கட்டுவித்தார்

பள்ளியறை முழுவதுமே
பாவையர்கள் நிறைந்திருக்க
கள்ளியவள் என்செய்தால்
காவியத்தைப் படைத்துவைக்க

வில்லொத்த பார்வையிலே
விண்மீன்கள் கண்சிமிட்ட
கள்ளொத்த கனிமொழியால்
காதலினை வளர்த்தாலோ

துள்ளிவரும் யமுனைகரை
துயில்கொண்டால் பேரழகி
சொல்லொணாத் துயரத்தில்
சோர்ந்துபோன மன்னவரும்

கள்ளமில்லாக் காதலினைக்
காலங்கள் உணர்ந்திடவே
உள்ளத்திலே
உணர்வொழுக
உருவெடுத்தார் தாசுமகால்

பல்லவர்கள் புகழ்பாடும்
பாறைகளின் சிற்பம்போல
நல்லதொரு காதல்சின்னம்
நவரசங்கள் இங்குமின்னும்.

சனி, 25 செப்டம்பர், 2010

முதற்குழந்தை .


முன்னூறுநாள்
சுமந்து
முகிழ்தெடுக்கா முதற்குழந்தை
கண்ணூறும் பார்வையிலே
களைந்திடுமென் துயரெல்லாம்

தொண்ணூறு வயதாகி
துவண்டுவிடும் போதிலும்
என்னுயிராய் தொடர்ந்திடுவாள்
எனதருமை முதற்குழந்தை

சொல்கேட்டு செவியின்பம்
சுந்தரமாய் பெருகிவர
பல்விட்டுப் போனாலும்
பைந்தமிழைப் பருகிடுவேன்


மெய்தீண்டும் இன்பமதில்
மேனியது சிலிர்த்திருக்க
பொய்தாண்டிப் போனபின்பும்
பொலிவுடனே காத்திருப்பாள்

காலனவன் போட்டுவைத்தக்
கணக்கினை முடிக்கும்வரை
கோலமயில் துணைவருவாள்
குலதெய்வம் வடிவாகி

தந்தையென்ற தவப்பெயரை
தவறாமல் வழங்கிடுவாள்
முந்தையென்ன தவம்செய்தேன்
முழுமதியே சொல்லிடுவாய்


பெண்ணாகப் பிறந்ததினால்
பேறுபெற்ற மங்கையவள்
கண்ணாகக் காப்பதிலே
கனிவான அன்னையவள்


பொன்னாசை இல்லாத
புதிரானக் குழந்தையவள்
என்னாசை நிறைவேற
எப்போதும் வருந்தியவள்


கண்ணனென நான்செய்யும்
குறும்புகளை மறந்துவிட்டு
மன்னனாக எனைத்தாங்கும்
மாதரசி பெண்மையவள்


துணையாகி பிள்ளைகளெல்லாம்
தோள்கொடுக்க வந்தாலும்
ம(எ )னையாள வந்தவளே
மகிழ்ச்சிதரும் முதற்குழந்தை .

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

குற்றமென்ன.


கட்டுமரக் கலம்ஏறி
மீன்பிடிக்கச் சென்றவர்கள்
பட்டதுயர் கொஞ்சமல்ல
பட்டபாட்டை என்னசொல்ல

பட்டினியால் சாவுவந்தால்
பஞ்சமென்று சொல்லிடலாம்
எட்டிச்சென்று கேள்விகளை
எமனிடத்தில் கேட்டிடலாம்

கொட்டிவைத்த செல்வெமென
கோடிவளம் கடலினிலே
சுட்டுயிவர் பார்க்கின்றார்
மீனவரின் உடலினிலே

எல்லைதாண்டி வந்ததாக
எடுத்திங்கே இயம்புகின்றார்
கொள்ளையிட்டுச் செல்வதாக
கொடுமைகளும் புரிகின்றார்


அங்கமெல்லாம் ஊனமாக்கி
ஆழ்கடலில் பிணமாக்கி
சிங்களவன் புரிகின்ற
சீர்கேட்டை தினம்எண்ணி

கண்டுமிவர் கலங்குகின்றார்
கடிதங்களும் வரைகின்றார்
கண்ணீரும் வற்றிவிடும்
கால்வயிரும் ஒட்டிவிடும்

இவர்வரையும் மடல்மட்டும்
இறுதிவரை முட்டையிடும்
தவறிருந்தால் சொல்லிடுவீர்
தலைவணங்கி ஏற்கின்றேன்


தமிழனாகப் பிறந்ததுதான்
இவர்கள் செய்தகுற்றமா
அமிர்தமான ஆழ்கடலும்
அவலமெண்ணி வற்றிடுமா .

வெள்ளி, 23 ஜூலை, 2010

கறுப்புப் பள்ளி .



சிவகாமி
பெற்றெடுத்த
சிந்தைமிகு தவப்புதல்வர்
இவர்போல பிறப்பாரா
இன்னுமொரு செயல்வீரர்


வறுமையான வயதிலும்
வாட்டமிவர் கொண்டதில்லை
பெருமையாகப் போற்றிடுவோம்
பெருந்தலைவர் புகழதனை


இளவயதில் கல்விகற்க
இயலாத காரணத்தால்
குலவிளக்காய் கல்விதனை
குன்றாமல் காத்துச்சென்றார்


நாட்டுப்பற்றை இயல்பெனவே
நரம்போடு உரமேற்றி
வீட்டுப்பற்றை உதறிவிட்ட
விந்தைமிகு மாமனிதர்


போராட்டம் பலகண்டு
புகுந்துவிட்டார் சிறைதனிலே
பாராட்டை விரும்பாத
பண்பான இன்குணத்தார்


காங்கிரசு இயக்கத்தின்
காவலராய் பொருப்பேற்று
பாங்குடனே வழிநடத்தி
பணிபுரிந்த கர்மவீரர்


உருவத்திலே மிடுக்காக
உயர்ந்துநின்ற புனிதனவர்
கருமத்தை கடைசிவரை
கண்ணாகக் காத்துநின்றார்


சுயநலத்தை விரும்பாத
சுத்தமான தங்கமிவர்
பயமறியா தலைவரிவர்
பார்வையிலே சிங்கமிவர்


தமிழகத்தின் முதல்வராக
தலைமையேற்று ஆட்சிசெய்தார்
அமிழ்தான திட்டங்கள்
அரங்கேற்றி மீட்சிசெய்தார்


கல்வியோடு உணவளித்த
கருணைமிகு கறுப்புக்காந்தி
நல்வழியில் சென்றுயர்ந்த
நாடுபோற்றும் புகழேந்தி


எளிமையின் இலக்கணத்தை
இவரைப்பார்த்துக் கற்றிடலாம்
அழியாப்புகழ் பிள்ளைகளை
அன்னைமார்கள் பெற்றிடலாம்


அரசியலில் இவரொரு
ஆற்றல்மிகு முன்னோடி
சிரசிலேற்றி செல்லவேண்டும்
சிறுமதியினர் பின்னாடி


விளக்கணைக்கச் சொல்லிச்சென்ற
விருதுநகர் விடிவெள்ளி
களங்கமில்லா காமராசர்
கறைபடியா கறுப்புப்பள்ளி.

சனி, 22 மே, 2010

சுயமான தலைவர் .


பல்துறை வித்தகர் பண்பாளர் மாண்புகள்
சொல்லியே போற்றுவார் சொல்வீரர் _சொல்லில்
நயமுடன் ஆற்றுவார் நாடகம் பார்பார்
சுயமான தலைவர் இவர் .


இனமழித்து நம்மொழியை என்றென்றும் காப்பார்
மனமழித்து வாழ்கின்றார் மண்ணில் _மனமே
இவர்புரியும் இந்த இழிச்செயலை தவறென
எவரெல்லாம் சொல்வார் இவர்க்கு.

செவ்வாய், 23 மார்ச், 2010

இ(தழ்)லைகளின் மேல் ஒரு அமுதமழை.


விதையாகி மண்ணிலே
புதையுண்ட காலம்முதல்
தவமாக நானிருந்து
தளிர்த்து வந்தேன் பூமியிலே

செடியாகச் செழித்துவந்த
சின்னஞ்சிறு பருவத்திலே
மடியாக நான்நினைத்து
மனம் மகிழ்ந்தேன் மண்மீது

ஆகாய மழைதூவி
அதுவந்து எனைத்தழுவி
பூவாகப் போகுமுன்னே
பிடுங்கிவிட்டார் போதுமென்று

நாற்றாங்கால் மறுநடவாய்
நட்டுவைத்தார் தொட்டியிலே
மாற்றங்கள் இதுதானா
சொல்லிடுவாய் மானிடமே

நினைக்கின்ற நேரங்களில்
எனக்காக நீருற்றி
அணைக்கின்ற ஆதவனை
அளவோடு தினம்காட்டி

அலுவலக நேரங்களில்
வீட்டிற்குள் எனைப்பூட்டி
அய்யகோ என்னசெய்வேன்
அறைக்குள்ளா என்வாழ்வு

ஆறுதலாய் காற்றுவந்து
அனுதினமும் தழுவிடவே
தேற்றிக்கொண்டேன் என்மனதை
மாற்றமாக புதுவாழ்வு

வளர்ந்து விட்டேன் கொடியாக
மகரந்தச் செடியாக
பூத்துவிட்டேன் ஓர்நாளில்
வண்ணமிகு மலர்கள்தாங்கி

இதழ்களிலே தேன்துளிகள்
முதல்மழையாய் நினைவலைகள்
வண்டுவந்து தீண்டிடுமா
உண்டவுடன் சென்றிடுமா

கட்டுக்குள் அடைபட்ட
கன்னிமலர் இ(தழ்)லைகளிலே
சிந்துகின்ற அமுதமழை
கண்ணீரின் அவலநிலை.


சனி, 20 மார்ச், 2010

பெண்ணின் பெருமை .

முறத்தாலே துரத்தினாளாம்
முன்னாளில் பெண்ணொருத்தி
புறங்காட்டி ஓடியதாம்
புலியதுவும் உயிர்வருத்தி


தன்னுயிரைக் காத்திட்ட
தமிழச்சி வரலாறு
மண்ணிலே இன்றுவரை
மங்காதப் புகழாக


அந்நாளின் பெருமைதனை
அடியோடு தகர்த்தெறிய
இந்நாளில் புறப்பட்ட
இளநங்கை சுகந்தியவள்


பள்ளிசென்ற வாகனமும்
பள்ளத்தில் விழுந்திடவே
துள்ளிச்சென்று ஓடிவிட்டார்
துயரறியா ஓட்டுனரும்


முடிந்தவரைப் போராடி
மூச்சடக்கி நீர்தேடி
மழலைகளை காத்துச்சென்ற
மாண்புதனை என்னசொல்ல


உள்ளங்களிலே உறுதிகொண்ட
உனைப்போன்ற பெண்களாலே
பெண்ணினத்தின் பெருமையெல்லாம்
பெயர்பெற்று வாழுமடி


கண்ணியத்தின் கடவுளாக
கடைசிவரை போற்றுமடி
கண்களிலே நீர்கசிந்து
காலடியில் வீழுமடி .

உல்லாச உலகம் .


முன்னொரு காலத்தில்
கடவுளெல்லாம் கண்முன்னே
கணநேரம் முன்வந்து
களைந்திடுமாம் துயரெல்லாம்


ஊமைக்குப் பாலுட்டி
ஆமைக்கும் வழிகாட்டி
அழகுதமிழ்ச் சீராட்டி
ஆன்மீகம் வளர்ந்ததையா


தனிமனித ஒழுக்கங்கண்டு
கனிகள்தரும் மரங்கள்கூட
கணிவாக வரங்கள் தந்து
பணிவாக நின்றதன்று


சுயநலமாய் மனிதமனம்
சுருங்கிவிட்ட காரணத்தால்
பயங்கொண்டு கடவுள்களும்
பாறைகளில் பதுங்கிவிட்டார்


ஒதுங்கிவிட்ட அவர்புகழை
ஓதுவதாய் இவர்சொல்லி
ஓராயிரம் போதகர்கள்
ஓயாமல் வந்துவிட்டார்


தன்மனத்தை அறியாமல்
தத்துவங்கள் புரியாமல்
தஞ்சமென இவர்பின்னே
தரணியெங்கும் பெருங்கூட்டம்


தேகத்தினை முன்னிறுத்தி
தேவைகளுக்கு தினம்ஒருத்தி
மடிகளிலே தவழ்கின்றார்
நடிகைகளும் குலவுகின்றார்


கருவறையில் காமலீலை
கடவுள்களும் அங்கில்லை
பதுங்கிவிட்ட கடவுள்களும்
பத்திரமாய் தூங்குகின்றார்



பக்திஎன்ற பெயர்சொல்லி
பாழாய்ப்போன இவர்பின்னே
புத்தியினை அடகுவைத்து
புலம்புவதை விட்டுவிட்டு


கடந்து உள்ளே சென்றிடுவீர்
கடவுளினைக் கண்டிடலாம்
மடங்களிலே மண்டியிடும்
மடமையினை வென்றிடலாம்


சல்லாப சாமிகளின்
உல்லாச உலகமடா
கல்லாகிப் போனாலும்
கடவுள்கள் பாவமடா .