செவ்வாய், 5 அக்டோபர், 2010

மனிதம்



நதிமூலம் தெரியாத
பிரம்ம ரகசியம்
நகலாக்கல் குழந்தையா
நாகரீக அதிசயம்


குலமகளும் பெற்றிடுவாள்
குலம்தளிரக் குழந்தை
குழாய்களில் கருவளரும்
கலியுகத்து விந்தை


எந்தையும் நுந்தையும்
தேவையில்லை இதற்கு
சந்தையிலே விற்கவரும்
சந்ததிகள் சரக்கு


வணக்கத்திற்கு உரியது
வாழ்வளித்த கருவறை
வாடகைக்கு வந்ததே
இதுஎன்ன வாழ்வுமுறை


பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடைப்பட்ட வாழ்வு
பிறப்பைவைத்து நடக்கிறதே
பித்தலாட்டப் பிழைப்பு


சுகப்பிரசவம் என்பது
சுகமான பிறப்பு
சுயநல வாதத்தினாலும்
கத்திவைத்து அறுப்பு


இதையும் தாண்டி
எட்டிப்பார்த்தோம்
தாய்வழியே பூமி
கலயுகத்திலும் வாழ்கிறது
சில மருத்துவச்சாமி


சிந்தித்து செயல்படுங்கள்
மனிதகுல பிரமாக்களே
சிரம்தாழ்த்தி வணங்கிடுவோம்
நீங்கள்கூட அம்மாக்களே


மகத்துவம் நிறைந்தது
மனிதகுலப் பிறப்பு
மண்ணிலே மனிதம்வளர
மருத்துவரும் பொறுப்பு .

திங்கள், 4 அக்டோபர், 2010

தாஜ்மகல் .



வெள்ளைப் பட்டுடுத்தி
வேய்ந்துவைத்த கூரையென
கொள்ளை அழகெல்லாம்
கொட்டிவைத்த பெட்டகமாய்

முல்லைக் கொடியிடையாள்
மும்தாசு நினைவாக
வெள்ளியை விதைத்ததுபோல்
வேந்தரவர் கட்டுவித்தார்

பள்ளியறை முழுவதுமே
பாவையர்கள் நிறைந்திருக்க
கள்ளியவள் என்செய்தால்
காவியத்தைப் படைத்துவைக்க

வில்லொத்த பார்வையிலே
விண்மீன்கள் கண்சிமிட்ட
கள்ளொத்த கனிமொழியால்
காதலினை வளர்த்தாலோ

துள்ளிவரும் யமுனைகரை
துயில்கொண்டால் பேரழகி
சொல்லொணாத் துயரத்தில்
சோர்ந்துபோன மன்னவரும்

கள்ளமில்லாக் காதலினைக்
காலங்கள் உணர்ந்திடவே
உள்ளத்திலே
உணர்வொழுக
உருவெடுத்தார் தாசுமகால்

பல்லவர்கள் புகழ்பாடும்
பாறைகளின் சிற்பம்போல
நல்லதொரு காதல்சின்னம்
நவரசங்கள் இங்குமின்னும்.