திங்கள், 1 ஜூன், 2009

நிழல் தேடி


ஆய்வுகள் நடத்திடும் ஆகாயச்சூரியன்
ஓய்வின்றி உழைத்தானாம்


உழைத்துக் களைத்தவன் ஓய்வினைவிரும்பி
திளைக்க வந்தானாம்


கானகம் மலைகள் கார்முகில் கடந்து
கானங்கள் கேட்டானாம்


வாழ்விங்கு சுவையென வாழநினைத்தவன்
வானகம் மறந்தானாம்

வனங்களின் செழிப்பின் வல்லமைகண்டு
மனமது நிறைந்தானாம்


பயணக் களைப்பில் பாதங்கள்நோக
அயர்ந்து போனானாம்


கனமழை பெய்திட கார்முகில் கரைந்திட
கனவொன்று கண்டானாம்


தாகம் எடுத்திட தண்ணீர் குடித்திட
தேகம் நனைத்தானாம்


வீழ்ந்த மழையில் விண்ணவன் நனைய
ஆழ்ந்து போனானாம்


கடமையைச் செய்திடும் கதிரவன் கனவிலும்
மடமையை நினைப்பானா


நிழல் மடித்தேடி நித்திரை நாடி
தழல் ஒளி மறைப்பானா


வெம்மை தாளாமல் வெய்யோன் மறையும்
உண்மையை அறிவானா


கதிரவன் மறையும் கார்யிருல் நிழலை
புதிரவன் அவிழ்ப்பானா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக