வெள்ளி, 12 ஜூன், 2009

அக(தீ)தி

உள்ளத்தில் நெருப்பைச் சுமந்து
இல்லத்து உடமைகளை இழந்து
எல்லைகள் எதுவென்ற ஏக்கத்தில்
தொல்லைகள் தொடர்ந்திடும் இவர்களுக்கு
உலகே நீ வைத்தபெயர் அகதி



யுகங்கள் பலநூறாய் பூமியிலே
சுகங்கள் தடைபட வாழ்ந்திருந்தோம்
முகங்களாய் முத்தமிழ் முடிசூடி
அகங்களில் தீ எரியும் எங்களுக்கு
உலகே நீ வைத்த பெயர் அகதி



பண்பாடு கலாச்சாரம் பறைசாற்றி
எண்போடு நரம்பாய் உரமேற்றி
மண்பெருமை காத்திட்ட மறவர்குலம்
மாண்புகள் அழிந்திட துணைபுரிந்து
உலகே நீ வைத்த பெயர் அகதி



அழித்திட எண்ணியா எங்களுக்கு
ஒலித்திட வைத்தீர் பெயர் மட்டும்
ஒழித்திட ஒன்றாய் இணைந்தாலும்
பலித்திடும் ஓர்நாள் தமிழ் ஈழம்


புறங்களில் தீவைத்தால் அணைந்துவிடும்
அகங்களில் வைத்த தீ கொழுந்துவிடும்
அணையாமல் எரிந்திடும் இந்தத் தீ
அடையும் வரை எரிந்திடும் அக(தீ )தி.

1 கருத்து: