வெள்ளி, 23 ஜூலை, 2010

கறுப்புப் பள்ளி .



சிவகாமி
பெற்றெடுத்த
சிந்தைமிகு தவப்புதல்வர்
இவர்போல பிறப்பாரா
இன்னுமொரு செயல்வீரர்


வறுமையான வயதிலும்
வாட்டமிவர் கொண்டதில்லை
பெருமையாகப் போற்றிடுவோம்
பெருந்தலைவர் புகழதனை


இளவயதில் கல்விகற்க
இயலாத காரணத்தால்
குலவிளக்காய் கல்விதனை
குன்றாமல் காத்துச்சென்றார்


நாட்டுப்பற்றை இயல்பெனவே
நரம்போடு உரமேற்றி
வீட்டுப்பற்றை உதறிவிட்ட
விந்தைமிகு மாமனிதர்


போராட்டம் பலகண்டு
புகுந்துவிட்டார் சிறைதனிலே
பாராட்டை விரும்பாத
பண்பான இன்குணத்தார்


காங்கிரசு இயக்கத்தின்
காவலராய் பொருப்பேற்று
பாங்குடனே வழிநடத்தி
பணிபுரிந்த கர்மவீரர்


உருவத்திலே மிடுக்காக
உயர்ந்துநின்ற புனிதனவர்
கருமத்தை கடைசிவரை
கண்ணாகக் காத்துநின்றார்


சுயநலத்தை விரும்பாத
சுத்தமான தங்கமிவர்
பயமறியா தலைவரிவர்
பார்வையிலே சிங்கமிவர்


தமிழகத்தின் முதல்வராக
தலைமையேற்று ஆட்சிசெய்தார்
அமிழ்தான திட்டங்கள்
அரங்கேற்றி மீட்சிசெய்தார்


கல்வியோடு உணவளித்த
கருணைமிகு கறுப்புக்காந்தி
நல்வழியில் சென்றுயர்ந்த
நாடுபோற்றும் புகழேந்தி


எளிமையின் இலக்கணத்தை
இவரைப்பார்த்துக் கற்றிடலாம்
அழியாப்புகழ் பிள்ளைகளை
அன்னைமார்கள் பெற்றிடலாம்


அரசியலில் இவரொரு
ஆற்றல்மிகு முன்னோடி
சிரசிலேற்றி செல்லவேண்டும்
சிறுமதியினர் பின்னாடி


விளக்கணைக்கச் சொல்லிச்சென்ற
விருதுநகர் விடிவெள்ளி
களங்கமில்லா காமராசர்
கறைபடியா கறுப்புப்பள்ளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக