திங்கள், 4 அக்டோபர், 2010
தாஜ்மகல் .
வெள்ளைப் பட்டுடுத்தி
வேய்ந்துவைத்த கூரையென
கொள்ளை அழகெல்லாம்
கொட்டிவைத்த பெட்டகமாய்
முல்லைக் கொடியிடையாள்
மும்தாசு நினைவாக
வெள்ளியை விதைத்ததுபோல்
வேந்தரவர் கட்டுவித்தார்
பள்ளியறை முழுவதுமே
பாவையர்கள் நிறைந்திருக்க
கள்ளியவள் என்செய்தால்
காவியத்தைப் படைத்துவைக்க
வில்லொத்த பார்வையிலே
விண்மீன்கள் கண்சிமிட்ட
கள்ளொத்த கனிமொழியால்
காதலினை வளர்த்தாலோ
துள்ளிவரும் யமுனைகரை
துயில்கொண்டால் பேரழகி
சொல்லொணாத் துயரத்தில்
சோர்ந்துபோன மன்னவரும்
கள்ளமில்லாக் காதலினைக்
காலங்கள் உணர்ந்திடவே
உள்ளத்திலே உணர்வொழுக
உருவெடுத்தார் தாசுமகால்
பல்லவர்கள் புகழ்பாடும்
பாறைகளின் சிற்பம்போல
நல்லதொரு காதல்சின்னம்
நவரசங்கள் இங்குமின்னும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக