செவ்வாய், 28 ஜூலை, 2015

                                           







ஆகாயம் சென்ற அக்கினிச் சிறகுகளுக்கு ஆத்மார்த்த அஞ்சலி




காலமானவரே



ஏழ்மையானக் குடிபிறந்து
ஏற்றம்கண்ட எளியவரே
வாழ்வாங்கு வாழ்ந்திங்கு
விண்ணுலகம் சென்றவரே

ஆல்போன்றுத் தழைத்திங்கு
அரும்பணிகள் செய்தவரே
பால்வடியும் முகத்தவரே
பசுவானக் குணத்தவரே

நீள்வானம் படித்தவரே
நெடுஅம்பு விடுத்தவரே
தாழ்வான எண்ணங்களை
தவிடாக்கத் துடித்தவரே

பிள்ளைகளின் மனம்கவர்ந்த‌
பெருங்கனவுக் கொண்டவரே
வெள்ளைநிலா மேனிதீண்டி
விஞ்ஞானம் விண்டவரே

அக்கினியாய்ச் சிறகுபூத்து
அதிசயமாய் நின்றவரே
முக்கனியாம் வள்ளுவத்தை
முடிந்தவரைத் தின்றவரே

கொக்கரித்த நாடுகளின்
கொடுவாயை அடைத்தவரே
பொக்ரானில் அணுகுண்டைப்
பொடிவைத்து வெடித்தவரே

மக்களின் அதிபதியாய்
மணிமகுடம் தரித்தவரே
மானங்கெட்டத் தலைவர்களின்
முகத்திரையைக் கிழித்தவரே

பக்கபலம் துணைவெறுத்து
பதக்கங்களைக் குவித்தவரே
நிற்பதற்கும் நேரமின்றி
நெருப்பாகித் தகித்தவரே

மக்குகின்ற காலம்வரை
மாணவராய் உழைத்தவரே
எக்குலமும் போற்றுகின்ற
எடுத்துக்காட்டாய் நிலைத்தவரே

திக்கெல்லாம் புகழ்பரப்பித்
தமிழருல் மேலானவரே
எக்காலமும் இயம்பிடுமே
அப்துல் காலமானவரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக