எதிபார்ப்பு இல்லாத இளமையின்காலம்
புவியீர்ப்பு அறியாத புலமையின்கோலம்
அன்னையும் தந்தையும் அறிந்திட்ட முதல் உலகம்
என்னையும் கேள்விகேட்டு என் தங்கை வந்தநேரம்
திண்ணையும் கதைசொல்லும் திருவிழா தோறும்
புன்னையும் புங்கையும் தூளிகட்டி ஆடும்
மண்ணையும் என்னையும் பிரித்ததில்லை யாரும்
தங்கையின் தலைவாரி மஞ்சள் முகம் மலர்சூடி
பள்ளி செல்வோம் நடையோடி பாசத்தோடு விளையாடி
மாட்டு வண்டி பின்னாலும் மணிக்குறவர் பின்னாலும்
பார்த்த கதை பல உண்டு பார்வையிலே பதிந்ததுண்டு
கொன்னை மரஇலைஎடுத்து குருவிப்பழ விதை எடுத்து
சேர்த்து வைத்து மென்றிடுவோம் சிவந்தா வெற்றிலை என்றிடுவோம்
ஈச்சம்பழம் இலந்தைப்பழம் சூராம்பழம் நாவல்பழம்
தேடிச் சென்று பறித்திடுவோம் தேனீயைப்போல் திறிந்திடுவோம்
காலையிலே கண் விழித்தால் கருப்பட்டி நீர்இருக்கும்
பால் என்று கேட்டிருந்தால் வானமது வெளுத்திருக்கும்
தட்டிலே சோறிட்டால் ஒட்டாமல் கையிருக்கும்
அனையவள் சோறூட்ட ஆ என்று வாய்திறக்கும்
எத்தனையோ உணவுகளை இதுவரை நான் உண்டதுண்டு
அன்னையவள் கைவன்னம் இன்றுவரை கண்டதில்லை
உண்ட மண்ணில் உலகம் உருட்டி
அண்டங்கள் யாவும் கண்ணில் காட்டிட
வாயடைத்துப் போனால் கோகுலத்து யசோதை
உருட்டிய சோற்றில் உலகம் காட்டி
உண்மையும் அன்பும் சேர்ந்திட உருட்டி
உண்பதற்குக் கொடுப்பாள் என் அன்னை தேவதை
செவ்வாயும் வெள்ளியும் வீட்டின் தரை நனைக்கும்
கோமாதா பசுஞ்சாணம் கோரைப்பாயை விரிக்கும்
அன்னையவள் கைவண்ணத்தில் அழகு தரை சிரிக்கும்
ஆகாயம் இறங்கி வந்து அயர்ந்து தூங்கநினைக்கும்
மாலையிலே கருவானில் வெள்ளிகளும் முளைக்கும்
வாசலிலே பாய்விரிக்க பல கதைகள் பிறக்கும்
அம்புலியும் கதைகேட்டு முகில்செவியைத் திறக்கும்
செம்புளியும் காற்றில் ஆட நல்லிசையும் பிறக்கும்
இன்று வரை கிட்டவில்லை அந்த இனிமையான உறக்கம்
வென்று புகழ் எட்டினாலும் மறந்திடாத கிறக்கம்
ஆத்தங்கரை குளத்தங்கரை அழகான கண்மாய்கரை
புல்தரையில் பூத்தகறை வெண்பனியால் வெளுத்ததரை
வேடுவன் போல்நின்ற நாரை வேய்இலையால் வேய்ந்த கூரை
காடுகரை காய்ந்தபாறை எழுதி வைத்தோம் எங்கள் பெயரை
கற்றாழைப் பழம் பறித்து கட்டாந்தரையில் தேய்த்து
தொண்டைமுள் பிரித்தெடுத்து பங்குவைப்போம் பதம்பிரித்து
அய்யனார் கோவில்மணி ஆறுமணிக்கு ஒலித்திடும்
தொன்னையிலே தரும் பொங்கலை நினைக்கையிலே இனித்திடும்
குதிரையிலே அய்யனாறு பார்ப்பதற்குச் சிலிர்த்திடும்
வானம் அதிரையிலே கையிலுள்ள கருப்பருவா பளிச்சிடும்
மாம்பலம் திருடச்சென்று முள்வேலி குடைந்ததுண்டு
தோள்பலம் துணையாக தோழிகளும் வந்ததுண்டு
தோழனோடு தமக்கையும் கூட்டிச்சென்று பறித்ததுண்டு
பாதியிலே காவல்காரன் கட்டிவைத்து புடைத்ததுண்டு
இளமையிலும் என்மனதில் ஈரம்வந்து கசிந்ததுண்டு
கோலமயில் தோழியவள் நினைவுகளால் நனைந்ததுண்டு
பசுமையான களங்கமில்லா இளவயது நேசம்
பார்க்கவில்லை இதுவரையில் பால்மனது பாசம்
சொந்தவன சோகத்தில் பாதையெல்லாம் முட்கள்
வெந்து வனம் போனாலும் நரைப்பதில்லை
என் நந்தவனநாட்கள்.
ஞாயிறு, 28 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக