சனி, 20 மார்ச், 2010

உல்லாச உலகம் .


முன்னொரு காலத்தில்
கடவுளெல்லாம் கண்முன்னே
கணநேரம் முன்வந்து
களைந்திடுமாம் துயரெல்லாம்


ஊமைக்குப் பாலுட்டி
ஆமைக்கும் வழிகாட்டி
அழகுதமிழ்ச் சீராட்டி
ஆன்மீகம் வளர்ந்ததையா


தனிமனித ஒழுக்கங்கண்டு
கனிகள்தரும் மரங்கள்கூட
கணிவாக வரங்கள் தந்து
பணிவாக நின்றதன்று


சுயநலமாய் மனிதமனம்
சுருங்கிவிட்ட காரணத்தால்
பயங்கொண்டு கடவுள்களும்
பாறைகளில் பதுங்கிவிட்டார்


ஒதுங்கிவிட்ட அவர்புகழை
ஓதுவதாய் இவர்சொல்லி
ஓராயிரம் போதகர்கள்
ஓயாமல் வந்துவிட்டார்


தன்மனத்தை அறியாமல்
தத்துவங்கள் புரியாமல்
தஞ்சமென இவர்பின்னே
தரணியெங்கும் பெருங்கூட்டம்


தேகத்தினை முன்னிறுத்தி
தேவைகளுக்கு தினம்ஒருத்தி
மடிகளிலே தவழ்கின்றார்
நடிகைகளும் குலவுகின்றார்


கருவறையில் காமலீலை
கடவுள்களும் அங்கில்லை
பதுங்கிவிட்ட கடவுள்களும்
பத்திரமாய் தூங்குகின்றார்



பக்திஎன்ற பெயர்சொல்லி
பாழாய்ப்போன இவர்பின்னே
புத்தியினை அடகுவைத்து
புலம்புவதை விட்டுவிட்டு


கடந்து உள்ளே சென்றிடுவீர்
கடவுளினைக் கண்டிடலாம்
மடங்களிலே மண்டியிடும்
மடமையினை வென்றிடலாம்


சல்லாப சாமிகளின்
உல்லாச உலகமடா
கல்லாகிப் போனாலும்
கடவுள்கள் பாவமடா .






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக