சனி, 25 செப்டம்பர், 2010

முதற்குழந்தை .


முன்னூறுநாள்
சுமந்து
முகிழ்தெடுக்கா முதற்குழந்தை
கண்ணூறும் பார்வையிலே
களைந்திடுமென் துயரெல்லாம்

தொண்ணூறு வயதாகி
துவண்டுவிடும் போதிலும்
என்னுயிராய் தொடர்ந்திடுவாள்
எனதருமை முதற்குழந்தை

சொல்கேட்டு செவியின்பம்
சுந்தரமாய் பெருகிவர
பல்விட்டுப் போனாலும்
பைந்தமிழைப் பருகிடுவேன்


மெய்தீண்டும் இன்பமதில்
மேனியது சிலிர்த்திருக்க
பொய்தாண்டிப் போனபின்பும்
பொலிவுடனே காத்திருப்பாள்

காலனவன் போட்டுவைத்தக்
கணக்கினை முடிக்கும்வரை
கோலமயில் துணைவருவாள்
குலதெய்வம் வடிவாகி

தந்தையென்ற தவப்பெயரை
தவறாமல் வழங்கிடுவாள்
முந்தையென்ன தவம்செய்தேன்
முழுமதியே சொல்லிடுவாய்


பெண்ணாகப் பிறந்ததினால்
பேறுபெற்ற மங்கையவள்
கண்ணாகக் காப்பதிலே
கனிவான அன்னையவள்


பொன்னாசை இல்லாத
புதிரானக் குழந்தையவள்
என்னாசை நிறைவேற
எப்போதும் வருந்தியவள்


கண்ணனென நான்செய்யும்
குறும்புகளை மறந்துவிட்டு
மன்னனாக எனைத்தாங்கும்
மாதரசி பெண்மையவள்


துணையாகி பிள்ளைகளெல்லாம்
தோள்கொடுக்க வந்தாலும்
ம(எ )னையாள வந்தவளே
மகிழ்ச்சிதரும் முதற்குழந்தை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக