திங்கள், 13 டிசம்பர், 2010

மண்வீடு

கரையான் புற்றெடுக்க
கருநாகம் குடிபுகுந்து
இரையாகும் கரையானின்
இடர்பாடு தெரிவதில்லை


தரையாவும் தடம்பார்த்து
தன்எச்சில் குழைத்தெடுத்து
குறையேதும் இல்லாமல்
கோபுரமாய் கட்டிடுமாம்


மண்வீடு ஆனாலும்
பொன்வீடு போலிருக்கும்
புணல்வந்து புகுந்திடினும்
அணல்போல உள்ளிருக்கும்

திரைகூட செலுத்திடாமல்
திருடனாக உட்புகுந்து
பறைசாற்றும் தன்பெயரை
பாம்புப்புற்று என்றுசொல்லி


உழைப்பேதும் இல்லாமல்
உரிமையாக்கும் அரவம்போல
பிழைப்பார்கள் சிலபேர்கள்
பிறர்மனையை கவர்ந்துவாழ .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக