திங்கள், 13 டிசம்பர், 2010

பயணம் .

பொள்ளாச்சிப் பேருந்தில்
போதுமான கூட்டமில்லை
தேய்ந்துபோன இருக்கையில்
தெய்வம்வந்து அமர்ந்தது

புறப்பட்டப் பேருந்தில்
புலம்பல்கள் ஏராளம்
கைத்தொலைபேசியில்
கடலைகள் தாராளம்

மனிதருக்கு மட்டுமே
முழுக்கட்டணமாம்
குட்டியான தெய்வங்களுக்கு
குறைந்த கட்டணம் மட்டுமே


மலிவுக்கட்டணம் என்றாலும்
மடியில்தான் அமரவேண்டுமாம்
நடமாடும் தெய்வத்திற்கு
இருக்கை பிடிக்கவில்லை



திரும்பிய தெய்வமது
திருக்கையால் தீண்டியது
துன்பமான பயணத்திலும்
இன்பமாகச் சிரித்தது



தெய்வத்தை பெற்றவர்கள்
திரும்பிக்கூட பார்க்கவில்லை
தொடுவதும் பின்முகத்தை
மூடுவதுமாய் புன்னகைபூரித்தது


களைத்துப்போன தெய்வமது
கண்ணுறங்கிப் போனது
தெய்வத்திற்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை மனிதனாவோமென்று



மனிதனாகிப் போனாலும்
தெய்வங்கள் தெரியாமல்
வந்துகொண்டே இருக்கிறார்கள் .

2 கருத்துகள்: