திங்கள், 7 பிப்ரவரி, 2011

அமைதியில் குருமகான் .



தும்பைப் பூஉடையில்
தூயவராய் உலவிடுவார்
இம்மை மறுமைக்கும்
இலக்கணங்கள் சொல்லிடுவார்

அம்மை அப்பரவர்
ஆட்கொண்ட அருள்மலையில்
நம்மைக் காத்திடவே
நடமாடும் அவதாரம்

ஏழகவை நாளதனில்
ஏற்றுக்கொண்ட தீட்சையினால்
பூவுலகை மாற்றவந்த
புனிதமான குருவருளே

வெள்ளைத் தாமரையில்
வீற்றிருக்கும் கலைமகளின்
பிள்ளை வடிவாகிப்
பிறந்துவந்த பெருவருளே

முல்லைக் கொடிபோல
முகிழ்த்துவந்த வெண்மதியே
தில்லை அம்பலத்தில்
திளைத்துவந்த நிம்மதியே

மானுடத்தின் மகத்துவத்தை
மண்ணுலகில் காத்திடவே
கானகத்தில் குடிலமைத்த
கருணைமிகு இறையருளே

வானகத்துத் தேவர்களும்
வந்துலவும் பொதிகைமலை
தேனருவி துள்ளிவிழும்
தென்கயிலை மூர்த்திமலை

அத்தரி மகரிசியும்
அனுசுயா தேவியரும்
இத்தரையில் நடம்புரிந்த
இடமெனவே அறிந்ததினால்

சித்தமெல்லாம் சிவயோகம்
சிந்தையெல்லாம் தவயோகம்
உத்தமமாய் உறைந்திடவே
உருவெடுத்த பிரணவாலயம்

அகிலமெல்லாம் மையல்கொண்ட
திருவருளே அமைதியாகும்
மகிமைகொண்ட பரஞ்சோதி
மாமுனியின் வடிவாகும்

கருணைமிகு தத்துவங்கள்
கடலளவு கொண்டபோதும்
அருமைமிகு தவயோகி
அமைதியான திருஉருவம்


பரிணாம மாற்றத்தில்
படைப்புகளும் மாறிடுமாம்
புரியாமல் பூவுலகை
புடம்போட நேரிடுமாம்

சுயநலமாய் மனிதமனம்
சுருங்கிவிட்ட நாள்முதலாய்
கயமையினால் பாவங்களை
கணக்கில்லாமல் செய்துவித்தார்

நிலம்அழித்து நீர்அழித்து
நிலவுலகின் வளம்அழித்து
குலம்அழித்து குணம்அழித்து
கொடுமைகளில் தினம்திளைத்து

மதியிழந்து மாந்தரெல்லாம்
மாண்டுபோகும் வேளையிலே
விதிப்பயனாய் விண்ணுலகின்
வேதமகன் வருவாராம்

தவப்பயனாய் வந்துதித்த
தகத்தகாய கதிரவனாய்
இவர்பிறந்தார் இருள்விலக
ஈரோட்டு நாயகனாய்

இறைமறுத்த முற்பிறப்பும்
இவரன்றி யாரறிவார்
குறையேதும் இல்லாத
குன்றாத இப்பிறப்பு

உலகமெல்லாம் அமைதிவேண்டி
உடுமலையின் உயரம்தாண்டி
கலகமெல்லாம் களையவேண்டி
காட்சிதந்த மலையாண்டி

பூவுலகம் சாந்திகாண
புனிதமாக அவதரித்து
நோவுகளை நீக்கிடவும்
நோன்பிருந்து அமைதிகாத்தார்

பந்தபாசம் அற்றபோதும்
பாமரரின் நிலையெண்ணி
சந்தோசம் எனும்சொல்லை
சகலருக்கும் சொல்லிவைத்தார்

கொந்தளிக்கும் எரிமலையும்
குளிர்ந்துவிடும் தென்றலென
சந்திரனார் வாக்கினிலே
சத்தியமும் வென்றதென்ன

நதிகளெல்லாம் ஒன்றிணைய
நவின்ற ஒருசொல்லினாலே
சதிகளெல்லாம் உடைத்தெறிந்து
சட்டங்களும் பிறந்ததென்ன

போர்புரிந்து பூவுலகம்
புதைந்தொழிந்து போகும்வேளை
பார்விரிந்து பசுமைகாண
பசுந்தளிர்கள் நட்டுவைத்தார்

யாகமென்னும் வேள்விதனை
யாவருக்கும் நலங்கள்வேண்டி
தாகமென்னும் தவவேள்வி
தவறாமல் இயற்றிவந்தார்


உண்மைநிலை என்னவென்று
உணர்ந்திடுவீர் மானுடமே
வெண்மையான திருவடியை
விரைந்துவந்து பற்றிடுவீர்

உலகமெல்லாம் சமாதானம்
ஓங்கியதோர் சன்னிதானம்
நலமெல்லாம் பெருகவேண்டி
நாடிவந்தால் மோட்சம்கிட்டும்

ஆர்பரிக்கும் அலைகடலும்
ஆழத்திலே அமைதிகொள்ளும்
பார்வையிலே அமைதிபூண்ட
பரஞ்சோதி உலகைவெல்லும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக