செவ்வாய், 5 ஜூலை, 2011

கடன்






கடன்பட்டான்
நெஞ்சம்போல
கலங்கினான் வேந்தனென்று
உடன்பட்ட கம்பனுக்கு
உள்ளத்திலே எவ்வலியோ


குடமுடைத்து குழந்தைவரும்
காலம்
தொட்டு மனிதரெல்லாம்

வடம்பிடித்து இழுத்திடுவர்
வாழ்கையெனும் கடன்தேரை



தாய்கொடுத்த பால்கடனும்
தந்தையிடம் நூல்கடனும்
வாய்விட்டு கேட்டிடாத
வாய்த்தநல்ல இருகடனாம்


பொய்யான இவ்வுடலை
பொதிசுமக்கும் கழுதைபோல
மெய்யாக எண்ணியதால்
மேனியதும் சுமைகடனாம்

உடன்பிறந்த கடனாக
உறவுகளும் தொடர்ந்துவர
கடன்பிறந்து கால்முளைத்து
காலனையும் அழைத்துவரும்


திடம்கொண்டு சிக்கனமாய்
திட்டமிட்டு வாழ்பவரும்
படமெடுத்து பரிதவித்து
பரலோகம் தொட்டவரும்

கடனென்றால் அஞ்சிடுவர்
கைகூப்பிக் கெஞ்சிடுவர்
விடமென்றால் என்னவென்று
வினவிடுவர் எல்லோரும்


கடன்பட்டு மீண்டிடுவீர்
கண்ணுறக்கம் கொண்டிடுவீர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக