நெல்லுக்கு இறைத்தநீர்
வாய்க்கால் வழிஓடிப்
புல்லுக்கும் ஆங்கே
புசியுமாம் . தொல்லுலகில் ,
புல்லானப் பலமொழியை
பூந்தமிழில் புகுத்தலாமோ
நெல்லான நம்மொழியின்
நெஞ்சத்தை உறுத்தலாமோ
விழிகளிலே பழுதென்றால்
வேறுவிழி பொருத்திடலாம்
தமிழ்மொழியில் பழுதென்றால்
எவ்வாறு தடுத்திடலாம்
ஒண்டவந்த பிடாரியெல்லாம்
ஊர்பிடாரியை விரட்டிடுமாம்
ஒண்டமிழின் புகழைக்கூட
அதுபோலக் கெடுத்திடுமாம்
அண்டவிட வேண்டாமே
அருந்தமிழைக் காத்திடுவோம்
வண்டமிழின் சோலைதனில்
வண்ணமாகப் பூத்திடுவோம்
தாய்மொழியும் நாய்மொழியும்
தரத்தினிலே ஒன்றிடுமா
வாய்மொழியாய் வந்ததெல்லாம்
வள்ளுவத்தை வென்றிடுமா
கற்றிடலாம் பலமொழிகள்
கற்பதிலே குறையுமில்லை
நற்றமிழில் நடவுசெய்தல்
நியாயமென்ன சொல்லிடுவீர்
உண்டிதனில் கலப்படங்கள்
உண்டவர்க்கு நஞ்சாகும்
அண்டிவரும் அயல்மொழியால்
அனைத்தமிழ் அழகுகெடும்
செங்குருதி ஓட்டத்திலும்
சிலவேறு பிரிவுஉண்டு
அங்கேனும் கலப்படத்தால்
அப்பொழுதே உயிர்பிரியும்
பைந்தமிழில் நுழைந்துள்ள
பார்த்தீனியக் களையெடுப்போம்
நைந்துவிடா நம்தமிழை
நாள்தோறும் நாம்வளர்ப்போம் .
ஞாயிறு, 27 நவம்பர், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக