நூலகமும் ஆலயமும்
ஒன்றிணைந்த திருவடிவாய்
வேலனவன் தமிழ்மொழியை
வேய்ந்துவைத்த மன்னவராம்
ஞாலமெலாம் போற்றுகின்ற
ஞானமொழி சொன்னவராம்
காலமெல்லாம் கவிவடிக்கும்
வீரபாண்டித் தென்னவராம்
தலைமைக்கு முதல்வணக்கம்
தகையோர்க்கும் தலைவணக்கம்
கலைபடிக்கும் நூலகத்தின்
கதவுகளைத் திறப்போமா
ஆறில்லா ஊருக்கு
அழகதுவும் பாழென்று
அறிவுருத்திச் சென்றாளே
ஔவையவள் மூதாட்டி
ஊருக்கு அழகென்றால்
ஒருஆறு போதுமங்கே
தேருக்கு அழகென்றால்
தெய்வமது வேண்டுமங்கே
தெய்வங்கள் உறைந்திருக்கும்
திருவிடங்கள் பலவும்உண்டு
மெய்யதுவும் கோவிலாகும்
மேன்மையினை அறிந்திடுவீர்
பொய்மைதனை நீக்கிடவே
பொறையின்றி கற்றிடுவீர்
உய்வதற்கு முன்னாலே
உயர்வுநிலை எட்டிடுவீர்
கண்ணிற்குத் தெரியாத
கடவுளர்கள் கற்சிலையில்
மண்ணிலே உலவிவரும்
மகத்துவத்தை அறிவீரோ
அன்பே சிவமென்றால்
அறிவன்றோ தெய்வமாகும்
முன்பதனை வழிமொழிந்து
மூத்தவர்கள் சொல்லிவைத்தார்
அன்பினாலே அனுதினமும்
ஆலயங்கள் செல்வோரே
பண்பதனை அறிந்திடவே
பாடசாலை சென்றிடுவீர்
மலர்விட்டு மலர்தாவி
மகரந்தம் தனைநீவி
உலர்வதற்கு முன்னாலே
உள்கூட்டில் சேர்த்திடுமாம்
சிறுதேனி ஆனாலும்
சிந்தையெல்லாம் தினந்தேடல்
ஒருநாளும் சோர்வுயில்லை
ஒலித்திடுமே குறும்பாடல்
ஈயாத தேட்டையெல்லாம்
தீயவர்கள் கொள்வாராம்
ஈவதற்கு இங்குண்டு
இயன்றவர்கள் எடுத்திடுவீர்
திரட்டிவைத்த தேன்கூடாய்
திரவியங்கள் பலவுமுண்டு
புரட்சிகளின் வரலாறும்
புதையலாக இங்குண்டு
அறிவையெல்லாம் அடைகாக்கும்
ஆலயத்தைக் கண்டிடுவீர்
அறிந்தவர்கள் அதன்சிறப்பை
அனைவருக்கும் சொல்லிடுவீர்
புறமெல்லாம் நூற்பதற்கு
பூவுலகில் கோடியுண்டு
அகமதனை நூற்பதற்கு
நூலகமே தேவைஇன்று
அர்சனைகள் இங்குஇல்லை
அபிசேகம் தேவையில்லை
அனுமதியாய் சிறப்புச்சீட்டு
அலுவலர்கள் தருவதில்லை
சாதிமத பேதமில்லை
சடங்குகளும் நடப்பதில்லை
நீதிஒன்றே சாமிஇங்கு
நிந்தனைகள் ஏதுமில்லை
மதங்கள்கூட தடையுமில்லை
மனிதநேயம் சுடவுமில்லை
உதயமதை வேண்டுவோர்கள்
உளமுடனே சென்றிடலாம்
ஆலயமும் தொழுவதென்றால்
அதுவன்றோ சாலமாகும்
நூலகமும் ஆலயமே
நூல்படிக்கச் செல்லலாமா .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக