பூப்பெய்து நீராடி
பூரித்து நின்றபோது
புனிதவதி என்றழைத்துப்
புன்னகையாய் சொன்னார்கள்
மாப்பிள்ளை எனைப்பார்த்து
மணக்கோலம் கொண்டபோது
மாங்கல்யம் சூடிடவே
மனைவி ஆகிப்போனேன்
புகுந்தவீட்டில் மருமகளாய்
சீர்கொடுத்தத் திருமகளாய்
பலபெயர்கள் எனக்குண்டு
பட்டியலும் கொஞ்சம்நீளும்
பள்ளியறைப் படுக்கையிலே
கணவனுக்குத் தாசியாக
பகல்பொழுதில் வீட்டினிலே
பணிபுரியும் வாசுகியாய்
பேர்பெற்ற போதிலும்
பெரிதுவக்கவில்லை நானும்
யார்கொடுத்த சாபமோ
நீர்வடித்துச் சொல்கின்றேன்
ஊர்கொடுத்த பெயர்என்ன
உண்மையிலே தெரியுமா
வேர்அறுந்த சிறுக்கிக்கு
வேறுபெயர் மலடியாம்
என்சுரங்கண்ட மார்பிரண்டும்
பால்சுரக்க வேண்டுமடா
உன்விரல்தீண்டி என்உயிரும்
பூப்பூக்க வேண்டுமடா
நான்எருக்குழியில் போகுமுன்னே
கருக்குழியை நிறைப்பாயா
என்அவப்பெயரைத் துடைத்திடவே
அம்மா என்றழைப்பாயா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக