ஆதியிலே ஆடையின்றி
ஆடுமாடாய் திரிந்தவனே
அன்னையவள் ஈன்றபோதும்
அம்மணமாய் பிறந்தவனே
பாதைபல கடந்துவந்து
பகுத்தறிவு உற்றவனே
பாவங்களைச் சுமந்துநின்று
பலி(ழி)பாவம் பெற்றவனே
சாதியென்ற பெயரைச்சொல்லி
சண்டைபல புரிபவனே
நீதியதை அறியாமல்
நேசம்கெட்டுத் திரிபவனே
ஈன்றெடுக்கும் பெண்சாதி
இடுப்பொடிக்கும் ஆண்சாதி
சான்றெடுத்தால் சாதியிலே
சாட்சிசொல்லும் இருசாதி
இட்டவனோ உயர்சாதி
இடாதவனே இழிசாதி
குற்றமற்றக் குணத்தினாலும்
குறிப்பெடுப்பார் சாதியினை
உழைப்பினிலே சாதிவைத்து
உண்மைதனை மறைத்தாயே
பிழைப்பதுவாய் ஆனதினால்
பெருங்கொடுமை செய்தாயே
தொட்டதற்கும் தீட்டுயென்று
துயரக்கதை சொன்னவனே
கூட்டமாக சாதியினை
குழப்பம்செய்ய வளர்த்தவனே
திட்டமிட்டுத் தீட்டிவைத்த
தீமையான சாதியினை
ஏட்டினிலே எடுத்துவிடு
ஏற்றம்பெறெ வி(அ)ழித்துவிடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக