வியாழன், 18 ஜூலை, 2013

நீவீர் வா(லி)ழி



தரைமேல் பிறக்கவைத்தான்
எனத் திரைத்துறை
நுழைந்தவரே

நரைகூடி நலமெய்தி
நற்புகழில் கரைந்தவரே

இளமை துள்ளும்
பாவரியால் இறுதிவரை
நீர் இனித்தாய்

முதுமையது வந்தபோதும்
முத்தமிழில் முக்குளித்தாய்

கண்ணனுக்குக் காப்பியமாய்
கவிபடைத்த ரெங்கராசர்

சொன்னவுடன் கவிவடிக்கும்
சொக்கநாதத் தமிழ்நேசர்

கவிஉலகில் துரோணராய்
களம்கண்ட வேங்கையே

செவிகுளிரச் செந்தமிழால்
சிவந்துநின்ற கங்கையே

வாய்நிறையத் தாம்பூலம்
நீர்தரிக்கும் வேளையிலே

பாய்விரிக்க ஓடிவரும்
பைந்தமிழும் உன்னிடமே

நோய்தொற்றிப் போனதாக‌
செய்தியினால் அறிந்துகொண்டேன்

நெஞ்சமது பொறுக்கவில்லை
நினைவஞ்சல் செலுத்திடவே

வஞ்சனானக் காலன்உன்னை
வழிஅனுப்பி வைத்தானோ

வானுலகம் கவிகேட்க‌
வாலிஉன்னை அழைத்தானோ

எதிர்பவரின் பலமெல்லாம்
எடுத்துக்கொள்ளும் பெயர்வைத்தாய்

எதிர்ப்பதற்கு ஆளில்லை
என்றிடவா உயிர்பி(ம‌)ரித்தாய்

உதித்துவரும் கதிரவனாய்
உன்புகழும் நிலைத்திருக்கும்

மதிப்பறிந்து போற்றுகிறேன்
மண்ணுலகில் நீவீர் வா(லி)ழி.


      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக