பார்வையின் பரிமாற்றத்தில்
பதியமிடப்பட்ட உணர்வு
எனக்காகவும் உனக்காகவுமான
எதிர்பார்ப்புகளுக்கான உறவுகளின்
காத்திருப்புகளுக்கிடையே
நான் உனக்காகவும்
நீ எனக்காகவும்
காத்திருப்பதற்கான
காரணப் பெயர்
திரவியத் தேடலுக்கும்
திமிலோகப்பட்ட வாழ்க்கையின்
தீராத ஓட்டத்தினூடேயும்
ஏற்படும் திட்டமிடாத்திருப்பம்
இரவோடு பகலதும்
இமயமாய் தோன்றிடும்
உறவோடு பகைவந்து
ஊமையாய் நின்றிடும்
பருவத்தின் வாசலில்
பசலையும் படர்ந்திடும்
பார்ப்பவை யாவுமே
பாரமாய் தொடர்ந்திடும்
உயிரதன் எடைதனை
உணர்ந்திடக் கூடலாம்
ஒவ்வொரு நாளதும்
உடலது வாடலாம்
நான்கறை இதயமும்
நான்மறை ஆகலாம்
நாணமும் வெட்கமும்
நலிந்தே போகலாம்
ஏக்கமும் தாக்கமும்
இருவருக்கும் உண்டெனில்
இதுதான் காதலாம்
இதயத்தால் மோதலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக