ஞாயிறு, 31 மே, 2009

மனமெங்கும் மண்வாசம்

ஆடம்பரம் அலங்காரம் அனுதினமும் உல்லாசம்
மாடங்கள் மணிமகுடம் மண்மீது தினம்வேசம்

வானவரும் வந்தாலும் வதைக்கப்படும் வன்மோசம்
ஆனவரும் போனவரும் அடைவாரோ விண்தேசம்


காலம்வரும் கனிந்துவரும் கலங்கவில்லை கடல்தேசம்
ஞாலம்வரும் வேழம்வரும் கலைந்தோடும் நரிவேசம்


இருப்பதை இயன்றதை ஈந்தாலே புவிபேசும்
மறுப்பதை வெறுக்கின்ற மனதாலே மனநேசம்


மலர்கின்ற மலர்களின் மகரந்தம் மணம்வீசும்
புலர்கின்ற புல்லின்மேல் புன்னகைக்கும் பனிபேசும்


இடிக்கின்ற இருள்மழையும் இறங்கிவந்தால் மண்வாசம்
வெடிக்கின்ற வெண்பரிதி வெண்ணிலவின் ஒளிநீசம்


அசைந்தாடும் அலைகாற்றால் ஆழ்கடலும் அலைபூசும்
இசைந்தாடும் இளமனதில் இயல்பான கலைநேசம்


மங்கையவள் மலர்மொழியால் மயிலிறகாய் மணம்கூசும்
தன்கையவள் தளிர்மேனி தவழ்கையிலே தனிப்பாசம்


பொல்லாத பொய்நெஞ்சால் புவியாவும் குலநாசம்
செல்லாகிச் செரித்தாலும் செழித்துவரும் தமிழ்தேசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக