ஞாயிறு, 31 மே, 2009

வானம் வசப்படும்

எல்லையில்லா வானத்தில்
எழில்கோளம் நிறைந்திடவே
பிள்ளைநிலா துணைகொண்டு
பூகோளம் சுழன்றிடவே

செம்பரிதி ஒளியாலே
செம்மையான பூவுலகில்
செங்குருதி தான்வழிய
செழித்து வந்த மண்ணுலகில்


மனிதரெல்லாம் தழைத்து வந்தார்
மாண்புறவே நிலைத்து வென்றார்
புனிதரெல்லாம் பூத்துவர
பூவுலகில் புதுமை கண்டார்


கொடுமை கொண்டு
கோலாட்சி செய்துவந்த மன்னவரும்
கடுமைகண்டு கணப்பொழுதில்
மடிந்துவிட்டார் அன்னவரும்


அடிமையென தமிழினத்தின்
அடிவேரை அறுப்பவரும்
ஆரியனின் வழிவந்த
அரக்கன் என்று அறிவானா


கந்தக தனங்களின்
கற்பென்ற வெம்மையினால்
வெந்தன்று தணிந்ததே
மாமதுரை அழிந்ததே


எத்தனை கண்ணகிகளின்
எழில் இன்று வீழ்ந்தது
எரியவில்லை தென்தீவு
நீதி எங்கே ஒளிந்தது


பூமியே உனக்கு
பிளவுஒன்று வாராதா
பூபாலம் கேட்க வேண்டாம்
புதைந்துவிடு வானத்தில்


வனம் கூட வசப்பட
வாய்க்கவில்லை எங்களுக்கு
வானம் வசப்படும்
வார்த்தை மட்டும் இனிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக