தமிழருக்குத் திருநாளாம் தரணியிலே ஒருநாளம்
உழவரெல்லாம் உளமார உவகையுற வரும்நாளாம்
உலகுக்கு உணவளித்த உத்தமர்கள் ஒன்றுசேர
பொங்கிவரும் கங்கைபோல் பொன்மனமும் குளிர்ந்துவர
பொங்கலெனும் திருநாளை போற்றிவைத்தார் பூவுலகில்
நிலமகளின் மேனியிலே வியர்வையோடு நீரிட்டு
குலமகளும் குலவைபாட விதைநெல்லைத் தூவிவிட்டு
மனம்மகிழ உழைத்திருப்பார் அறுவடைக்குக் காத்திருப்பார்
அறுவடையில் பூத்தநெல்லை ஆசையுடன் பொங்கவைப்பார்
ஆதவனின் முன்னிலையில் விளைந்ததெல்லாம் படையல்வைப்பார்
ஆநிரையும் வாய்நிறைய அமுதுபொங்கல் விருந்தளிப்பார்
உலகுக்கு உணவளிக்கும் உழவர்கள் மனம்நின்று
உதித்து வந்த தைதானே உழவருக்குப் புத்தாண்டு
உழவருக்குப் பின்னாலே உலகெல்லாம் செல்லுமென்றால்
தமிழருக்குத் தைதானே தரணியிலே புத்தாண்டு
மாதங்கள் பன்னிரெண்டு வகுத்து வைத்தார் முன்னின்று
சோகங்கள் கண்ணிரண்டு கலைந்தோடும் தை அன்று
நிலமகளை வணங்குகின்ற புவிபோற்றும் புத்தாண்டு
உளமாற ஏற்றிடுவோம் உழவர்தம் வழி நின்று
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக