புதன், 27 மே, 2009

புன்னகை


இதழ் தோகை விரிகையில்
இதய மயில் ஆடுகிறது
இளமையும் கூடுகிறது


செய்கூலி இல்லை
சேதாரம் உண்டு
யாவரும் அணியலாம்


இந்த முகவரிக்கு
அனைத்துத் தபால்களும்
தாமதமின்றி பட்டுவாடா


வசீகரிக்க வாய்க்கப்பெற்ற
அர்த்தங்கள் ஆயிரமுள்ள
அழகியல் மொழி


உறவுப் பாலத்திற்கு
ஒப்பந்தமிலாமல் போடப்படும்
உடனடிப் பத்திரம்


வேதனைக் குளத்தில்
வீசிய வலையிலும்
வந்துவிழும் விசித்திரமீன்



தேசங்களின் கதவுகளையும்
நேசங்களின் கதவுகளையும்
வரையறையின்றி திறக்கும் சட்டம்


மன நோய்களை
பணம் ஏதுமின்றி
குணமாக்கிடும் மருந்து


மனச் சேர்க்கையினால்
வாய்ப்புகள் கிடைக்கும்போது
மலரும் வாய்ப் பூ



அணிந்தவருக்குக் கேடயம்
பிரிந்தவருக்கு விரயம்
நொடிப் பொழுதில் உதயம்


அவசரத்திற்கு அடகு வைக்கலாம்
அசலோடு திரும்பக் கிடைக்கும்
அதிசயக் கடன்


மழலை என்றால் விடை
மங்கை என்றால் வினா
மனிதம் என்றால் அன் பூ பு


திறந்துக் கொள்ளை அடித்தாலும்
காவல்துறை கைதுசெய்யாத
கண்ணியமான திருடன்


இதழ் கடிதம் பிரிகையில்
அன்புள்ள என்று சொல்லும்
முதல் செய்தி


மனக் காயங்களுக்கு
மருந்திடும் மென்மையான
மயிலின் இறகு


உள்ளக் களிக்கையை உடனுக்குடன்
அரங்கேற்றம் செய்யும்
நாட்டியக்காரி


மானாவாரியாக மலர்ந்தாலும்
மனதிற்கு மட்டுமே தெரிந்த
மர்மதேசத்து மகாராணி

2 கருத்துகள்: