புதன், 27 மே, 2009

இளைய பாரதம்.

எங்கு செல்கிறாய் என் இளையபாரதமே
நம் தேசத்தின் புகழ்மறந்தாய் விழிமனமே


அடிமைத் தளையை அறுத்தெடுக்க
ஆயிரம் தலைவர்கள் உயிரீந்தார்
விடுதலை வேள்வியின் விளக்கெரிக்க
வீடு மனையாள் நலம்மறந்தார்


கொடியின் மரபை காப்பதற்கே
கொட்டியக் குருதியில் தினம்நனைந்தார்
உறவுக் கொடியின் வேரறுக்கவா
உன்னைச் சுமந்து பெற்றெடுத்தார்


தேசத்தின் பெருமையை நினைப்பாயா
மோசத்தில் வீழ்ந்து கிடப்பாயா
கல்விச் சாலையிலே கலவரம் புரிந்தாய்
கலங்கி இருப்பாளே கருசுமந்த உன்தாய்


நாளைய பாரதத்தின் முதுகெலும்பே அறிவாயா
நாமிருக்கும் இடமெல்லாம் நற்பெயரை பெறுவாயா
விண்ணிலும் நம்கொடி பட்டொளி வீசுதே
மண்ணிலே அடிதடி விட்டொழி நல்லது


காந்தியப் பாதையின் சாந்தியத்தை அறிந்திடு
ஏந்திய ஆயுதத்தை அடுப்பெரிக்க தந்துவிடு
சுயநலத் தேரின் வடம்பிடிக்க மறுத்துவிடு
சுட்டெரிக்கும் சூரியனாய் தேசஇருள் நீக்கிவிடு


கல்லூரிச் சாலையா கலவர பூமியா
காரணம் யார்சொல் சாதியா மதமா
சட்டங்கள் வகுத்தாரே சமூகத்தின் நீதியாய்
சண்டையிட்டு மடியாதீர் நீதியறியா பேதையாய்


மானிடம் என்பது மகத்தான பிறப்பு
மாணவன் என்பவன் தேசத்தின் உயிர்ப்பு
பாரத தேசத்தின் பண்பட்ட சிறப்பு
பார்போற்ற வேண்டுமே அதுதானே பொறுப்பு



கொற்றவன் குடை இங்கு தாழ்ந்தது
குலமக்கள் நலன்களும் அழிந்தது
சீழ்பிடித்த மனங்களினால் விளைந்தது
கோல் பிடிக்க வேண்டிய குணமது


எழுதுகோல் பிடிக்க வேண்டிய இனமுனது
விழுதுபோல் நிலைக்க வேண்டிய மனமது
யார் மீது கோபமடா சொல்வாயா
பார்மீது எம்மினமே வெல்வாயா


உரிமைக்காக உண்மையில் நீபோராடு
உன் உணர்வுகளை உண்மையின் உறையிலிடு
சகோதரப் பண்பை உன்மனதிலிடு
சண்டாள குணத்தை நீவென்றுவிடு


எங்கு செல்கிறாய் என் இளையபாரதமே
நம் தேசத்தின் புகழ் மறந்தாய் விழி மனமே


சட்டங்கள் படித்திடச் சென்ற நீ
மரச்சட்டங்களை அல்லவா ஏந்துகிறாய்
சாதியின் பெயரால் மோதுகின்றாய்
சகோதரனைக் கொல்லவா வாழ்கின்றாய்


இயற்கை கூடஇயங்கிடச் சட்டமுண்டு
இளமனமே அறிவாயா அதைக்கண்டு
வளமான வாழ்வுக்கு வகுக்கப்பட்டது சட்டம்
வழிதவறிப் போகிறாயே இதுவா உன்திட்டம்


நாளைய பாரதத்தின் நம்பிக்கை நீயே
நடமாடும் மாணவப் பருவத்தின் தீயே
நல்வழிப் பாதையிலே இன்றுமுதல் நடைபோடு
நாளைய வரலாறு நமதென்று புகழ்பாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக